இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 8.40 கோடி விலை கொடுத்து வாங்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தின் இளம் நட்சத்திர அதிரடி கிரிக்கெட் வீரர் சமீர் ரிஸ்வி யார் என்று பார்ப்போம்.
சமீர் ரிஸ்வி உத்திரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லோயா கிராமத்தில் ஹசீன் ரிஸ்வி மற்றும் ருக்ஸானா ரிஸ்வி தம்பதிக்கு மகனாக டிசம்பர் 6, 2003 ஆம் ஆண்டு பிறந்தார். ஒரு மூத்த சகோதரர் மற்றும் இரண்டு மூத்த சகோதரிகள் என்று பெரிய குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்தார் சமீர் ரிஸ்வி. படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த சமீர் ரிஸ்வி, பலமுறை தந்தையிடம் சண்டையிட்டு கிரிக்கெட் விளையாடி வந்திருக்கிறார். இதனால் படிப்பின் மீது கவனக்குறைவாக இருந்த சமீர் ரிஸ்வி தனது பள்ளி படிப்பை தாமதமாகவே தொடங்கி, அவரின் 20 வயதிற்குப் பிறகுதான் ஜேபி அகாடமியில் சேர்ந்து 10 ஆம் வகுப்புத் தேர்வுகளை முடித்திருக்கிறார்.
சமீர் ரிஸ்வி 6 வயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தாய்வழி மாமா தங்கீப் அக்தர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைப் பார்க்க மைதானங்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். தனது மாமாவின் ஆட்டத்தினால் கவரப்பட்ட சமீர் ரிஸ்வி கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு 11வது வயதில் தனது மாமாவிடம் பயிற்சி பெற்று கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்.
சமீர் ரிஸ்வி ஒரு முறை தனது மாமா தங்கீப் அக்தரிடம் சென்று எனக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லை என்னை முழு நேர கிரிக்கெட் ஆக சேர்த்துவிட கேட்டிருக்கிறார். இதனை கேட்ட அவரின் மாமா நான் கிரிக்கெட்டின் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் என்னால் சாதிக்க முடியவில்லை. நான் உன்னை சாதிக்க வைக்கிறேன் என்று கூறினார்.
சமீரை மீரட்டில் உள்ள காந்திபாக் அகாடமியில் சேர்த்து, தன் கண்காணிப்பு கண்களின் கீழ் பயிற்சி அளிக்க தொடங்கினார் மாமா தங்கீப் அக்தர். அப்போதிலிருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக சமீர் ரிஸ்வி கிரிக்கெட் விளையாட பயிற்சி அளிப்பது, அவர் கிரிக்கெட் விளையாட தேவையான பொருள் உதவி பண உதவி என்று அனைத்தையும் செய்து வந்திருக்கிறார்.
சமீர் ரிஸ்வி பெரும்பாலான நேரங்களை மைதானத்தில் பயிற்சி செய்வதிலேயே களிப்பார். சமீர் ரிஸ்வியின் அதீத ஆட்டம் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இயல்பான ஆட்டத்தைப் பார்த்த அவரின் மாமா இவரை ஹிட்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக பயிற்சியளிக்க தொடங்கினார். இதைத்தொடர்ந்து சிறந்த முறையில் பயிற்சி பெற்ற சமீர் ரிஸ்வி 2011 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி போட்டியில், ரிஸ்வியின் பீல்டிங் முயற்சிகளால் ஈர்க்கப்பட்ட அப்போதைய உத்தரப் பிரதேச கேப்டன் சுரேஷ் ரெய்னா, சமீர் ரிஸ்வியின் திறமையைக் பாராட்டி அவரின் சன்கிளாஸை பரிசளித்தார்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவரின் கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றிப் பயணத்தில் சவால்கள் இல்லாமல் இல்லை. இவரின் ரஞ்சி டிராபி அறிமுகத்திற்கு முன், 2020 ஆம் ஆண்டு இவரது தந்தையின் மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, அந்த இளம் வயதிலேயே கிரிக்கெட்டோடு சேர்த்து அவர் குடும்பத்தின் முக்கிய பொறுப்புக்களை சுமக்க ஆரம்பித்தார். தனிப்பட்ட துன்பங்களை எதிர்கொண்ட போதிலும், சமீர் விடாமுயற்சியுடன், தனது உறுதியையும், உழைப்பையும் வெளிப்படுத்தினார்.
ஆரம்பத்தில் இவரின் கிரிக்கெட்டை பார்த்து தயங்கிய அவரது தந்தை ஹசீன் ரிஸ்வி, பின்னர் இவரின் கடுமையான முயற்சியினால் ஈர்க்கப்பட்டு இவரது மிகப்பெரிய ஆதரவாளராக ஆனார். சமீர் ரிஸ்வி 2019 - 20 ஆண்டுக்கான ரஞ்சி டிராபிக்கு 27 ஜனவரி 2020 அன்று உத்திரப்பிரதேச அணிக்கும், 2021-22 ஆண்டுக்கான விஜய் ஹசாரே டிராபியின் உத்திரப்பிரதேச லிஸ்ட் ஏ அணிக்கு 11 டிசம்பர் 2021 அன்றும் அறிமுகமானார். பின்னர் சமீர் ரிஸ்வி தனது டி20 அறிமுகத்தை சையத் முஷ்டக் அலி டிராபி 2022 இன் போது, 134.70 ஸ்டிரைக் ரேட்டுடன் 295 ரன்கள் குவித்தார்.
அவர் சையத் முஷ்டாக் அலி டிராபி 2023 இல் உத்தரபிரதேச அணிக்காக அதிக ரன் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, இவர் மொத்தம் 7 இன்னிங்ஸ்களில் 277 ரன்கள் குவித்தார். அதைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற UP T20 லீக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சமூக வட்டங்களில் அனைவரின் கவனத்தையும் பெற்றார். இந்த UP T20 லீக்கில் இவர் விளையாடிய ஒன்பது இன்னிங்ஸ்களில் 455 ரன்களைக் குவித்தார். இதில் லீக்கில் அதிகபட்சமாக 47 பந்துகளில் அடித்த அதிவேக சதம் உட்பட இரண்டு சதங்கள் அடங்கும்.
மேலும் டி20 லீக்கின் இறுதியாக கான்பூர் சூப்பர்ஸ்டார் அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த வீரராகவும் இருந்தார். இறுதிப் போட்டியில் 50 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். UP T20 லீக்கின் போது ரிஸ்வியின் சிறப்பான பேட்டிங் திறமையானது பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட சில IPL உரிமையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
இவரின் ஆட்டத்தை பார்த்து வியந்த பல ரசிகர்கள் இவரை வலது கை சுரேஷ் ரெய்னா என்ற புனைப்பெயரை கொண்டு அழைக்கின்றனர். இவர் விளையாடும் பாணி ரெய்னாவை போல் இருப்பதாக பலர் கூறுகின்றனர். இவரை டிசம்பர் 2023 இல் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் கடின முயற்சிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 8.40 கோடிக்கு வாங்கப்பட்டார். ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்ட மறுநாள், அவரது வீடு ஊடக நிருபர்கள், அண்டை வீட்டார் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள உள்ளூர் அரசியல் பிரமுகர்களால் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐபிஎல் போட்டிகளில் அவர் திறமைகளை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்....!
- மு.குபேரன்.