தூக்கமின்மை என்பது இன்றைய சூழலில் இளைஞர்களிடையே காணப்படும் சாதாரணமான ஒன்று. ஆனால் இதற்கு பின் உள்ள ஆபத்து பற்றி தெரியுமா?
இந்தியாவில் உள்ள 36% பேர் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை பயன்படுத்துவதன் காரணமாக தூக்கமின்மையால் தவிக்கிறார்கள். இந்த தூக்கமின்மை காரணமாக தலைவலி, உடல் சோர்வுடன் சேர்ந்து உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், செரிமான கோளாறுகள் போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, நல்ல தூக்கம் நல்ல உடல் ஆரோக்கியத்தின் அடையாளம். ஆனால், சமூக வலைதளங்களால் பலர் இங்கு 8 மணி நேரத்திற்கும் குறைவாகதான் உறங்குகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் 59 சதவீத இந்தியர்கள் இரவு 11 மணிக்கு மேலும் விழித்திருக்கின்றனர். தூக்கமின்மை காரணமாக ஆண், பெண் இருவருக்கும் வேறு வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்கமின்மை காரணமாகதான் பெண்களுக்கு கருமுட்டையில் நீர்கட்டி நோய் ஏற்படுகின்றன. இதனாலேயே அதிக கருத்தரிப்பு மையங்கள் உருவாகின்றன என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், "தூக்கம் வராவிட்டால் யாரும் தூங்க முயற்சிப்பதில்லை. அதனாலேயே தூங்கும் நேரத்தில் அதிக டீ, காபி போன்றவற்றை குடிக்கின்றனர். தூங்கும் நேரத்தில் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். நல்ல இசை, புத்தகம் வாசித்தல் போன்றவை நல்ல தூக்கத்தைத் தரும்" என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.