அரசியல்வாதிகளையும் சினிமாக்காரங்களையும் கலாய்ச்சு காலி பண்றதைத் தமிழன் காலங்காலமா தொடர்ந்து செஞ்சுக்கிட்டிருக்கான். இருந்தாலும் அரசியல்வாதிகள், சினிமாக்காரங்களைத் தவிர கலாய் ப்ராப்பர்டீஸ்கள் வேற என்னன்னு கொஞ்சம் பார்க்கலாமா?
பார் சப்ளையர்:
நாலு பேராப் போனாலும் சரி, தனி மரமாப் போனாலும் சரி... போதையேறிப் போச்சுனா, பார் சப்ளையரைப் பார்த்தா, நம்மாளுக்கு மைக்கைப் பார்த்த நாஞ்சில் சம்பத் மாதிரி வாய் ஊறும்.
‘என்னப்பா பொடி- மாஸ்ல பெப்பர் கம்மியா இருக்கு’னு ஆரம்பிச்சு... அப்படியே கியரைப் போட்டு, ‘மொனையில இருக்கிற பார்ல காராச்சேவு ஏழு ரூவாதானே, இங்கே மட்டும் என்ன எட்டு ரூவா?’னு வரிசையா டார்ச்சர்ஸ்தான்.
ஒரு கட்டத்துல சப்ளை பண்றவர், ‘அரை மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டுப் போய் ஒரு கட்டிங்கைப் போட்டுட்டு வந்து இவிய்ங்களை டீல் பண்ணலாமா?’னு யோசிக்கிற அளவுக்கு நொந்துபோக வெச்சிடுவாய்ங்க.
ஒரு வழியா தீர்த்தவாரியெல்லாம் முடிஞ்சு, கடைசியில கணக்கு பார்க்க ஆரம்பிப்பாய்ங்க பாருங்க... அப்போதான் ஒரு நல்ல வாய், சப்ளையரைப் பார்த்து, ‘என்னண்ணே, எட்டு ரூவா தண்ணி பாக்கெட்டுக்கு ஒம்போது ரூவானு போட்டுருக்கு ’னு ஆரம்பிச்சுக் கடைசியில் ‘என்னைக்கும் நேர்மையா இருண்ணே, நம்மளை மாதிரி டாப்பா (!) வந்துடலாம்’னு சொல்லி ரெண்டு ரூவா தண்ணி பாக்கெட்டுக்கு எக்கச்சக்கத் தத்துவம் பேசி எக்ஸ்ட்ரா 20 ரூபாய் டிப்ஸ் வெச்சிட்டுப் போவார் நம்மாளு.
‘நாயகன்’ல நல்லவரா கெட்டவரானு கமலைப் பார்த்துக் கேட்டு, அதுக்கு கமல் சொன்ன பதிலைக் கேட்டு குழம்பிப்போன அந்த சின்னப் பையன் மாதிரி ரியாக்ஷன் கொடுத்து நிற்பார் அந்த பார் சப்ளையர்.