திருடுவதே தவறு அதிலும் திருட்டையே தவறாக திருடி திருடர்களின் மரியாதையையே கெடுத்து விட்டார்கள் பெரு நாட்டு திருடர்கள்.
பெருவின் நகரமான ஹுவான்காயோவில் செருப்புக் கடை ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 200 வலது கால் ஸ்னீக்கர்களை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நள்ளிரவில் கடை ஷட்டரின் பூட்டை உடைத்து, திருடப்பட்ட வெவ்வேறு பிராண்டுகளின் வலது கால் ஸ்னீக்கர்களின் மொத்த விலை £10,000 என்று கடை உரிமையாளர் கூறியுள்ளார். மேலும் திருடப்பட்ட இந்த ஸ்னீக்கர்களை திருடர்களால் விற்க கூட முடியாது. அப்படி இருக்கையில் எதற்கு இந்த முயற்சிகள் என்று அவரே குழம்பியுள்ளார்.
திருடப்பட்ட காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதை வைத்து உள்ளூர் காவல்துறைத் தலைவர் எடுவான் டயஸ் ஊடகங்களுக்கு கூறுகையில், "சம்பவ இடத்தில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த கொள்ளையில் வித்தியாசமாக வலது கால் ஸ்னீக்கர் மட்டுமே திருடப்பட்டுள்ளன. அவர்கள் திருடும் அவசரத்தில் எதை எடுப்பது என்று தெரியாமல் வலது காலின் காலணிகளை மட்டும் திருட நினைத்தார்களா? இல்லை இது திட்டமிட்டு திருடப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.