Think Before you speak |வார்த்தையைப் பார்த்து விடுங்க மக்கா!

இரண்டாம் உலகப்போரில் யாரோ ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒரு வார்த்தையைத் தவறாக மொழி பெயர்த்ததால் ஓய்ந்திருக்க வேண்டிய யுத்தம் பன்மடங்கு கிளர்ந்தெழுந்து பேரழிவுகளை உண்டாக்கியதாம்..! நம்ம வாழ்க்கையிலும் தான்...
funny face
funny faceTimepass

வாழ்க்கையிலும் நாம் மாற்றி உச்சரித்துவிடும் வார்த்தைகள் யுத்தங்களை ஏற்படுத்தி விடக்கூடும்...

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம், ஏதோ ஒரு பொங்கலுக்கோ தீபாவளிக்கோ எங்கள் ஊர் ராமவிலாசம் திரையரங்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வீரா என்ற திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது, அப்போதுவரை எனக்குத் தனியாகத் திரையரங்கத்திற்குச் செல்லும் சுதந்திரம் என் பெற்றோரால் வழங்கப்பட்டிருக்கவில்லை, அம்மாவை எவ்வளவோ நச்சரித்தும் அழைத்துச் செல்ல முடியாத நிலை...

என்னை விட ஏழெட்டு வயது பெரியவனும் உறவினனும் நண்பனுமான ஒருவன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த போது அவனை இழுத்துக் கொண்டு படம் பார்க்கக் கிளம்பிவிட்டேன்......

பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் பரபரப்பாக ஓடிவந்த நைனா மாமு நாங்கள் ராமவிலாசம் செல்கிறோம் என்று அறிந்ததும் திரையரங்கிற்கு அருகிலிருக்கும் அவர் உறவினர் ஒருவரிடம் "வெள்ளக் கோசா மவுத்துன்னு சொல்லிப் பக்கத்துல இருக்கற எல்லாச் சொந்தக்காரங்களயும் கூட்டிட்டு வரச் சொல்லுடா" என்று படபடவென்று சொல்லிவிட்டுப் பறந்துவிட்டார்.

" எந்த ஊருக்கு மாமு வரச் சொல்லனும்".....
" நீ வெள்ளக் கோசான்னு சொல்லுடா தெரியும் அவங்களுக்கு".....

ரஜினி படம் பார்க்கப் போகும் மகிழ்ச்சியில் நானும் என் உறவினனும் ஏதேதோ பேசிச் சிரித்துக் கொண்டு போனதில் மூளையில் வெள்ளக் கோசா மஞ்சக் கோசாவாக மாறியிருந்தது.

" மஞ்சக் கோசா மவுத்தாம் எல்லாரயும் கூட்டிட்டு அவரு வீட்டுக்கு வரச் சொன்னாரு நைனா மாமு" என்று சொல்லிவிட்டுத் திரையரங்கிற்கு ஓடிவிட்டேன்.
என் கெட்டநேரம் மஞ்சக் கோசா என்ற பெயரிலும் அவருக்கு ஒரு உறவினர் இருந்து தொலைத்தது.

என் வாயிலிருந்து செய்தி கேட்டவர் அக்கம் பக்கத்துப் படையையே திரட்டி ஒரு மினிவேனில் ஏற்றிக் கொண்டு மஞ்சக்கோசா வீட்டிற்குப் பறந்திருக்கிறார்.

அங்கு மதிய உணவு முடித்துக் கட்டிலில் கிடந்தவரைச் சுற்றி நின்று மினிவேனில் சென்ற கூட்டம் ஒப்பாரி வைக்க, அவர் பதறியடித்து எழுந்ததில் கும்பலில் இரண்டு பெருசுகள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சறிய என ஏகக் களேபரம்.

இன்னும் ஓடியாடிக் கொண்டிருக்கும் நம்மைச் சாகடித்துவிட்டானே என மஞ்சக் கோசாவும், வண்டிக் கூலியும் ஊரிலிருந்தே ஒப்பாரி வைத்துக் கொண்டு வந்ததில் தொண்டையும் போயிருந்த உறவினர்களுமென ஒட்டுமொத்தக் கூட்டத்தின் கோபமும் நைனா மாமுவை நோக்கித் திரும்பியிருக்க......

மஞ்சக் கோசாவையும் அதே மினி வேனில் ஏற்றிக் கிளம்பி வந்துவிட்டார்கள் நைனா மாமுவைத் தேடி...

இது எதையும் அறியாமல் நாங்கள் "மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே" பாட்டிற்குச் சில்லறைகளைச் சிதறவிட்டுக் கொண்டிருக்கிறோம் திரையரங்கத்தில்...

தகவல் சொல்லிவிட்டும் வெள்ளக் கோசா வீட்டிற்கு இன்னும் ஏன் யாரும் வரவில்லை என்ற குழப்பத்தில் நைனா மாமு இருந்த போது மினிவேனில் இருந்து குதித்துப் பாய்ந்து வந்த மஞ்சக் கோசா சட்டையைப் பிடித்தபோதுதான் உண்மை விளங்கியிருக்கிறது.

வந்த கூட்டம் அப்படியே அடுத்த ஊருக்குச் சென்று வெள்ளக் கோசாவை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தபோதும் மஞ்சக் கோசாவுக்கு மட்டும் தன்னை உயிரோடு இருக்கும் போதே கொன்றவன் எவன் எனக் காணும் ஆவலில் நைனா மாமு வீட்டிலேயே அமர்ந்துவிட்டார்.
இது எதுவும் தெரியாமல் நான் " மாடத்திலே கன்னி மாடத்திலே" என்று பாடியபடி பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன்.

நைனா மாமுவின் வீட்டைத் தாண்டும் போது மாமுவின் குரல்
 " டேய் எடுபட்ட பயலே வாடா இங்க"
" என்ன மாமு why டென்சன்"
" என்னடா போய்ச் சொன்ன எங்க சொந்தக் காரனுக கிட்ட..."
" மஞ்சக் கோசா மவுத்து... எல்லாரும் அவரு வீட்டுக்குக் கிளம்பிப் போங்கன்னு, ஆமா யாரு மாமா இவரு புஷுன்னு புஷுன்னு மூச்சு விட்டுகிட்டு..?"
" நான்தான்டா நீ நாலு மணி நேரத்துக்கு முன்ன சாவடிச்ச மஞ்சக் கோசா..!''
.
.
விசயம் மூளையைச் சென்று சேர்வதற்குள் கால்கள் வேகமெடுக்க
விட்டேன் பாருங்க ஓட்டம்!

- சுந்தர் மணி ஜெ.எஸ்

funny face
'ஜெயலலிதா பெயரைக் கேட்டு நடுங்கிய காமெடி நடிகர்' | நான் நிருபன் | Epi 8

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com