சில வருடங்களுக்கு முன் ஒரு தீபாவளி கொண்டாட்ட ஸ்பெஷல் நிகழ்வு அது. இப்போது போல் அப்போதெல்லாம் யூ-ட்யூப் உலகம் வெடித்துக் கிளம்பவில்லை. அதனால் எல்லாமே வார இதழ் ரைட்-அப்பாகவே முடிந்துவிடும்.
நானும் சீனியர் நிருபரும் அந்த அசைன்மெண்ட்டை சிரமேற்று செய்தோம். அப்போது ஜெயலலிதா பவர்ஃபுல் பெண்மணியாக... முதலமைச்சராக இருந்த சமயம்.
பக்காவாக நானும் அந்த சீனியர் நிருபரும் அந்த காமெடி நடிகரை மாலை 6.30 மணிக்கு பேட்டி எடுக்க வருவதாக ஃபிக்ஸ் செய்திருந்தோம். அந்தக் காமெடி நடிகர் அப்போது மளமளவென நிறைய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். ஷார்ப்பாக 6.30-க்கு அவர் தங்கியிருந்த வீட்டுக்குப் போய் பேட்டியையும் ஆரம்பித்து விட்டோம். தான் ஊதாரியாக சுற்றிய கதையில் ஆரம்பித்து அந்த பெரிய இயக்குநர் படத்தில் நடிக்க வந்தது வரை விதவிதமான வாழ்க்கை அனுபவத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. 7.15-மணிக்கு திடீரென மூன்று தமிழ்நாடு அரசு என்ற இலட்சிணையை தாங்கிய கார் வந்து நின்றது. சஃபாரி சூட் போட்டுக் கொண்டு ஒருவரும் கூடவே அதிமுக கரைவேட்டிகள் நான்கைந்து பேரும் இறங்கினார்கள். ஒரு ராயலான தோற்றத்தில் இருந்தார்கள். உடலெங்கும் அத்தரும் ஜவ்வாதும் மணத்தது.
''இது காமெடி நடிகர் வீடுதானே..?'' என கேட்டவாறு உள்ளே நுழைந்த அந்த டீம், எங்களை அசட்டையாக டீல் செய்தது.
''ஹலோ பிரதர்... நீங்கதானே காமெடி நடிகர் XY. உங்களுடைய படங்கள்னா ஜெயலலிதா அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால அம்மா கட்சியில உங்களை சேர்க்கச் சொல்லி ஆர்டர் போட்டுட்டாங்க. நாளைக்கு அம்மாவுக்கு ஆதரவா அறிக்கை விடணும்.அதையும் நாங்க பக்காவா ரெடி பண்ணிட்டோம். வாசிச்சுக் காட்டவா...உங்களுக்கு அட்வாண்ஸ் வாழ்த்துகள்!'' என்றவாறு சால்வை அணிவித்துக் கைகொடுத்தார் அந்த 'சீஃப் செக்கரட்டரி சஃபாரி சூட் ஆசாமி!
அதிலும் ஜிம்பாய் போல இருந்த இரண்டு அதிமுக கரைவேட்டிகள், ''யோவ் செம லக்கியான ஆளுய்யா நீ...அம்மாவே நேரடியா உன்னை கொள்கை பரப்பு செயலாளரா நியமிச்சிருக்காங்க!'' என்று அவர் முதுகில் சொட்டீர் சொட்டீர் என அடித்தார்கள்.
நம் காமெடி நடிகருக்கு ஷாக்கோ ஷாக்..!
''அய்யா...நான் அம்மா மேல ரொம்பப் பெரிய மரியாதை வெச்சிருக்கேன். வேற எதுனாச்சும் கேளுங்க. உசிரைக்கூட அந்த அம்மாவுக்குக் கொடுக்குறேன். அவங்க சொன்னா மறுப்பேதும் சொல்ல மாட்டேன். ஆனா, கட்சியில மட்டும் சேர முடியாதுய்யா. என்னை மன்னிச்சிடுங்க!'' என்று காமெடி நடிகர் சொல்ல, கிட்டத்தட்ட அடிக்காத குறையாக கோபத்தில் முகம் சிவந்தார் அந்த சஃபாரி சூட் ஆசாமி..!
''யோவ் புண்ணாக்கு....நாங்க என்ன வேலை வெட்டி இல்லாமலா இங்கே வந்தோம். ஒழுங்கா கட்சியில சேர்ந்து பொழைக்குற வேலையப் பாரு. இது மட்டும் அம்மாவுக்குத் தெரிஞ்சிருச்சு உன்னோட சினிமா வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி தான்.'' என்று எகிறினார். பதிலுக்கு ரொம்பவே பயந்துபோய் பம்மினார் நம் காமெடி நடிகர்.
''அய்யா தர்மவான்களா... நீங்கதான் அம்மாக்கிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லணும். நான் கலைஞன் யா...எல்லாருக்கும் பொதுவானவன். நான் கட்சி சார்பா இருக்கக்கூடாது. நான் சொன்னதா மன்னிப்பு கேட்டுருங்க. உங்க காலுக்கு செருப்பா கெடப்பேன்!'' என்று கண்கலங்க ஆரம்பித்தார்.
ஜிம்பாய்ஸ் இன்னும் ஒருபடி மேலே போய் எகிறினார்கள்.
'' யோவ்... அவ்ளோதான் உன் லைஃப். அம்மாகிட்ட சீஃப் செக்கரட்டரி சொன்னா போதும். கஞ்சா கேஸுல உள்ளே போயிடுவே. உன் தலைவிதி அவ்ளோதான்! இப்பவே ஒரு லட்சம் செக் கொடுக்கச் சொல்லி அம்மா ஆர்டர் போட்டுட்டாங்க... ஒழுங்கா கட்சியில சேர்ந்தா மருவாதி...இல்லைனா உன்னை ஆஸ்பத்திரில சேர்க்க வேண்டிவரும்'' என்றார்கள்.
வெளியே போய் போனில் யாரிடமோ பேசிவிட்டு வந்து உச் கொட்டினார்கள். நடுவில் இந்த கேரக்டர்களும் சரி, காமெடி நடிகரும் சரி... நம்மை கண்டுகொள்ளவே இல்லை. எல்லாவற்றையும் நம் புகைப்படக்காரர் மௌன சாட்சியாக நின்று தன் கேமராவில் படங்களாக சுட்டுத்தள்ளினார்.
அடுத்த ஒருமணிநேரத்துக்கு விதவிதமாக அவரை மிரட்டத் தொடங்கியது அந்த கேங். கிட்டத்தட்ட அந்த கேங்கின் மிரட்டலுக்குப் பயந்து போன நடிகர் அழுதே விட்டார். அப்போதுதான் அந்த உண்மையைப் போட்டுடைத்தது அந்த கேங்.
''அண்ணே...எல்லாம் செட்டப்ணே...நான் சீஃப் செக்கரட்டரி இல்லை. எல்லாமே இதோ இவங்க பண்ணின ஏற்பாடுதான்..!'' என எங்களை கை காட்டினார்கள். தமிழில் ப்ராங்க் ஷோக்கள் வருவதற்கு முன் நிகழ்த்தப்பட்ட ரியல் ப்ராங்க் அது.
இப்போது நாங்கள் உள்ளே புகுந்தோம்.
''ஹலோ சார்...என்ன பயந்துட்டீங்களா? தீபாவளி ஸ்பெஷலுக்காக ஃபன் பண்ணினோம். இவங்க அதிமுகவோ, அரசாங்க அலுவலர்களோ இல்லை. ஜஸ்ட் எங்க ஃப்ரெண்ட்ஸ். சீஃப் செக்ரெட்டரியா நடிச்சவர் தமிழில் முக்கியமான எழுத்தாளர். இதோ...இந்த கரைவேட்டிப் பசங்க அதிமுக உறுப்பினர்கள் கிடையாது. புலியூர் ஹவுசிங் போர்டு ஃப்ரெண்டுங்க!'' என்று சொன்னதும்தான் தாமதம்...வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார் அந்த காமெடி நடிகர்.
''என்னது செட்டப்பா...?'' என அதிர்ச்சியானார். தண்ணீரைக்குடித்துவிட்டு மெல்ல பேசத்துவங்கினார்.
''அட ஏன் சார் நீங்க வேற...நான் நிஜம்னு நினைச்சு பயந்துட்டேன்...எவ்ளோ அழகா உள்ளே வந்து பேட்டி எடுக்குற மாதிரி எடுத்துக்கிட்டே அவங்களுக்கு சிக்னல் கொடுத்து, என்னை கதிகலங்க வெச்சு...யப்பா முடியலைடா சாமீ..!'' என்று அழுகையோடு சிரித்தார். எனக்கே அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது.
புத்தகத்தில் வந்தபிறகு அவருக்கு போன் செய்தேன்.
''அண்ணே...புக் பார்த்துட்டேன்... நான் பயந்ததை பக்கம் பக்கமா எழுதியிருக்கீங்க... ஏரியா அதிமுக கவுன்சிலர் பேசினார்ணே...பேசாம நம்ம பக்கம் வந்திருங்கனு சொல்றாருணே... ஹாஹா... இப்ப நினைச்சாலும் நீங்க பண்ணின கூத்தை நினைச்சிட்டாலே வயிறு கலக்குதுண்ணே!'' என்று மறுமுனையில் சொன்னார் அந்த காமெடி.
போனவாரம்கூட அவரை சந்தித்தபோது இந்த ப்ராங்க் சம்பவத்தைச் சொல்லி சிரித்தார்.
(சம்பவங்கள் Loading..!)