‘No Man is an island’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, பூமியில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்களைச் சார்ந்துதான் உள்ளனர் என்பதே அதன் பொருள். ஆனால், ஒரு தனித்தீவில் தனி ஆளாக 'யாருமில்லா காட்டுக்குள்ள நான்தான் ராஜா' என்று ஒருவர் வாழ்ந்து வருகிறார் என்று கூறினால் ஆச்சரியமாக உள்ளதா?
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை பொறியாளரான 38 வயதேயான சைமன் பார்க்கர் பெரும் சாகச விரும்பி. உலகம் முழுவதும் பயணங்கள் மேற்கொள்வதில் கில்லாடியான இவர் எதிலும் திருப்தியடையாமல் புதிதான ஒரு அனுபவத்துக்காக இங்கிலாந்தின் தென் கடல் பிராந்தியம், பிரிஸ்டோல் கடலில் இருக்கும் வெல்ஷ் கடற்கரைக்கு வந்திருக்கிறார். அங்கேயிருந்து சில கிலோமீட்டர் கடலுக்குள் இருக்கும் 0.35 சதுர கி.மீ., அளவே உள்ள ‘ப்ளாட் ஹோம்’ (Flat Holm) என்ற ஒரு தீவுக்கு விசிட் அடித்திருக்கிறார்.
''அட, இதுதான் நான் தேடி வந்த இடம்!'' என உரக்க சத்தமிட்டு அங்கேயே வசிக்க ஆரம்பித்து விட்டார். இவ்வளவுக்கும் அந்தத் தீவில் குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் எதுவும் இல்லை. இப்படி தனியாகத் தீவில் தங்குவதற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டபோது, ''நான் வீட்டைப்போல ஓரிடத்தைத் தேடி எங்கெங்கோ அலைந்தேன். ஒரு தனியார் டூர் நிறுவனம் இங்கு அழைத்து வந்தார்கள். என் காலுக்கடியில் சொர்க்கம் இருப்பதை உணர்ந்து இங்கேயே வசிக்க ஆரம்பித்துவிட்டேன்!'' என்கிறார்.
தன் நண்பனை இழந்த துக்கத்தில் இருந்த பார்க்கருக்கு இந்தத் தீவின் ரம்மியமான சூழல் ஆறுதல் தந்ததால் இங்கு நிரந்தரமாக தங்குவதற்காக போராடி அனுமதி பெற்று இங்கு குடியேறிவிட்டார்.
''நாம் வாழ்கின்ற நகர்ப்புற பகுதிகளில், நாம் நினைத்தவுடன் நமக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைத்து விடுகிறது. அதனால் ஒரு பொருளின் அவசியம் மற்றும் சிக்கனம் குறித்து நமக்கு எதுவும் தெரிவதில்லை. ஆனால், இப்படி ஒரு தீவில் வாழ்வதால், பொருட்களின் அருமை புரிகிறது. அதோடு தேவைக்கு அதிகமாக எதையும் சுமக்கவும் தேவையில்லை. இந்த மினிமலிஸ்டிக் வாழ்க்கை ஜாலியாக இருக்கிறது!'' என்கிறார்.
சைமன் அந்தத் தீவில் வாழும் ஒரே நபராக மட்டுமல்லாமல், அங்குள்ள ஒரே ‘பப்’-ன் உரிமையாளராகவும், அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு ஒரு டூரிஸ்ட் கைடாகவும் உள்ளதால் சந்தோஷமாகவே இருக்கிறார்.
“நகரத்தில் இருப்பதை விட, இங்குக் காலை வேளையில் பறவை சத்தங்களுக்கு மத்தியில் எழுந்து, ரம்மியமான இயற்கைக் காட்சியுடன் வாழ்வது எனக்கு ஒருவகையான புத்துணர்வை அளிக்கிறது!” என்று கூறுகிறார்.
'ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி' என்று கூறிக்கொண்டு, தனித்தீவில் தனி ஆளாக ‘ரிட்டையர்மெண்ட்’ வாழ்கையை, 38 வயதிலேயே அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் சைமன் பார்க்கர்.
பொறாமையா இருக்கு பாஸ்!
-ர. பவித்ரா