Viral
Viraltimepass

Viral : தெருநாய்களைப் பாராட்டி போஸ்டர் - அலப்பறை செய்த நெல்லை வழக்கறிஞர்!

5 தெரு நாய்களின் புகைப்படங்கள், அவற்றின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களுடன் அவை கடித்த நபர்களின் எண்ணிக்கையோடு அவை செய்யும் அட்ராசிட்டிகளையும் போஸ்டராக அடித்து ஒட்டியுள்ளார் எஸ்.ஆர். சிராஜ்.
Published on

“நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை” என்பார் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி. ஆனால் தற்போது நெல்லையும் தொல்லையாக மாறி வருவது போலத்தான் தெரிகிறது.

நேற்றுதான் திமுக கவுன்சிலர்கள் சிலரை தற்காலிகமாக நீக்கம் செய்து, திமுக பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை விடுத்தார். அதற்குள் 36வது வார்டு கவுன்சிலரின் குறைகளைச் சுட்டிக் காட்டும் விதமாக சுட்டித்தனமாக போஸ்டர் அடித்துள்ளார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமாக எஸ்.ஆர். சிராஜ்.

திருநெல்வேலி 36ஆவது வார்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் “அன்பு” குழுவின் உறுப்பினர்கள் எனத் தலைப்பிடப்பட்டு, 5 தெரு நாய்களின் புகைப்படங்கள், அவற்றின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களுடன் அவை கடித்த நபர்களின் எண்ணிக்கையோடு அவை செய்யும் அட்ராசிட்டிகளையும் போஸ்டராக அடித்து ஒட்டியுள்ளார் எஸ்.ஆர். சிராஜ்.

மேலும், முத்தாய்ப்பாக, இவர்களை கட்டுப்படுத்த பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வார்டு உறுப்பினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்களது கோடான கோடி நன்றிகள் என “வஞ்சப் புகழ்ச்சியாக” புகழ்ந்து போஸ்டர் அடித்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "போஸ்டர்தான் நகைச்சுவையாக அடித்துள்ளாமே தவிர, அதில் குறிப்பிட்டுள்ள மேட்டர் சீரியஸ்தான். சாலையில் ஆங்காங்கே படுத்துக் கிடக்கும் மாடுகளால் நாள்தோறும் நடைபெறும் விபத்துகள், இதனால் ஏற்படும் உயிர்பலிகள் மற்றும் தெரு நாய்களால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பிரச்னையை மக்கள் மத்தியில் தீவிரமாக கொண்டு செல்லவே, இதுபோல நகைச் சுவையாக போஸ்டர் அடித்துள்ளோம்" என்றார்.

நெல்லையில், கடந்த வாரம் கூட சாலையில் பைக்கில் செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து ஓர் பிரபல தொலைக்காட்சி நிருபர் உயிரிழந்துள்ளார். இதுபோல, சாலையில் படுத்துக் கிடக்கும் மாடுகளாலும், நாய்களாலும் ஏராளமான விபத்துகளும், உயிர் பலிகளும் நிகழ்கின்றன. இவற்றை கண்டித்து விரைவில், மாநகராட்சி மேயருக்கு தெரு நாய்க் குட்டிகளை பரிசாக வழங்கும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

எது எப்படியோ, இந்தப் போராட்டங்களால் மக்களுக்கு விமோசனம் கிடைத்தால் சந்தோஷம்தான்.

- மு. ராஜதிவ்யா.

Viral
Tamil Cinema : 'சொர்ணாக்கா, நீலாம்பரி' - வில்லங்கமான வில்லிகளின் லிஸ்ட் !
Timepass Online
timepassonline.vikatan.com