கேள்விப்படாவிட்டால் கவலைவேண்டாம். இதோ இந்தக் கட்டுரையை சுடச்சுட வாசித்துவிட்டுப் போங்கள்.
இந்த முழு கட்டுரையும் கோர்ட்டில் கரண்ட் போன சம்பவம் தான்!
சில நாட்களுக்கு முன் காலை 11:35 மணி இருக்கும். சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எம்.தண்டபாணி தன்னுடைய அமர்வுக்கு வந்து வழக்கை எல்லாம் விசாரித்துக் கொண்டு இருக்கும்போது கரண்ட் பட்டு-னு ஆஃப் ஆகிவிட்டது. ஒரே கும்மிருட்டு...!
கதவுகள் எல்லாம் மூடப்பட்ட கோர்ட் அறை எப்படி இருக்கும்..? மை அப்பினது போன்று அப்படியொரு இருட்டு! நல்லவேளையா கோர்ட் எல்லாம் சூரிய வெளிச்சம் இருக்கும்போதே நடைபெறுவதால் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு சிறிய வெளிச்சத்தில் விசாரணை தொடர்ந்தது. ஜட்ஜய்யா குத்துமதிப்பா அந்தப்பக்கம் தான் இருப்பார் என எல்லோரும் ஒரு பக்கமாய் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். குற்றவாளிக் கூண்டுக்கு விசாரணைக் கைதியை தட்டுத்தடுமாறி கைத்தாங்கலாக அழைத்து வந்தது காவல்துறை.
சில நிமிடங்கள் கழித்து கரண்ட் வந்திருக்கும் என்று தானே நினைத்தீர்கள்?
‘அந்த சீனே இங்க இல்ல கண்ணா’ என சொல்லாமல் சொல்லியது கரண்ட். பல நிமிடங்கள் ஆகியும் கரண்ட் வரவில்லை. 'ஜெனரேட்டர் போடவேண்டியதுதானே?' என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் இங்கு கேட்கிறது. என்ன பிரச்னையோ தெரியவில்லை ஜெனரேட்டர் அன்று வேலை செய்யவில்லை. இதனால் கொஞ்சம் கடுப்பாகவும், கொஞ்சம் நகைச்சுவையாகவும் நீதிபதி தண்டபாணி, “என் கோர்ட்டில் மட்டும் தான் கரண்ட் இல்லையா? வேறு கோர்ட்களில் உள்ளதா ? வெளிநாட்டுச் சதி எதுவும் இதில் உள்ளதா?' என்று சிரித்தபடி கேட்டார். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர்கள், “பல கோர்ட்களில் இதுபோல மின்சாரம் தடைப்பட்டிருக்கிறது. ஆனால் சில நிமிடங்களில் வந்துவிட்டது மை லார்ட்...இங்கே மட்டும் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை மை லார்ட்!” என்று கூறினர். இதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார் நீதிபதி.
ஒருவழியாக ஒரு மணி நேரத்தைத் தாண்டிய அளவில் போன கரண்ட் வந்துவிட்டது. நீதிபதி தண்டபாணிக்கு இது முதல் தடவை இல்லை. இதற்கு முன்னாள் என்.எல்.சி போராட்டம் தொடர்பாக வழக்கை விசாரிக்கும் போதும் இதே போல் கரண்ட் போன சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அப்போதும், 'என் அமர்வுக்கு மட்டும் என்னதான் ஆச்சு?' என கேட்டிருக்கிறார்.
நீதி மன்ற வட்டாரத்தில் நமக்குத் தெரிந்த சிலரிடம் பேசினோம்.
"அந்த நீதி பரிபாலனம் நடைபெறும் அறை மிக விசாலமானது. மரங்கள் சூழ இருக்கும் பகுதி என்பதால் பகலில் இருட்டாக இருக்கும். மின் விளக்குகள் ஒளிரவிட்டுதான் அந்தப் பகுதியில் செல்ல முடியும். இதனால் பவர்-கட் ஆகும்போது ஆட்டோமேட்டிக்காக 'ஜென்செட்' இயங்கும். ஆனால், நீதியரசரின் இரண்டு அமர்விலும் அது பழுதாகிவிட்டது. அதை காமெடியாக அவர் எடுத்துக் கொண்டார். வேறொரு நீதியரசராக இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கடுமையான அபராதம் விதித்திருப்பார்கள்!" என்றனர்.
'மாரல் ஆஃப் தி ஸ்டோரி' என்ன தெரியுமா ?
கரண்ட் பிரச்னை சாமானியனை மட்டுமல்ல... கனம் கோர்ட்டாரையும் விட்டுவைக்காது என்பதுதான்!
- பா.முஹம்மது முஃபீத்