1912 ஆம் ஆண்டு தன் முதல் பயணத்திலேயே டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 1500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் கனடா அருகே உள்ள அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. இந்த டைட்டானிக் கப்பல் விபத்து உலகம் முழுவதும் பேசுபொருளானது. இந்த விபத்தினை மையமாகக் கொண்டு "டைட்டானிக்" என்ற படமும் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.
அட்லாண்டிக் கடல் பகுதியில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை காண ஒரு சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் நிறுவனம் ஏற்பாடு செய்தது. இந்த சாகச சுற்றுலாவிற்க்காக 21 அடி நீளத்தில் "டைட்டன்" என்ற சிறப்பு நீர்மூழ்கி தயாரிக்கப்பட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலில் 13,000 அடி ஆழம் வரை செல்லும் திறனுடன் படைக்கப்பட்டது. இதில் ஒரு பைலட் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த சாகச சுற்றுலாவிற்கான ஒரு நபர் கட்டணம் இரண்டு கோடி.
டைட்டானிக் கப்பலின் பாகங்களை காண்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு "டைட்டன்" என இந்த நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. இந்த பிரத்தியேக நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் பகுதியில் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் புறப்பட்டது. இதை பைலட் ஸ்டாக்டன் ரஷ் இயக்கினார்.
புறப்பட்ட 1 மணி நேரம் 45வது நிமிடத்தில் இந்த நீர்மூழ்கிக் கப்பலின் தகவல் தொடர்பு துண்டானது. இந்த நீர்மூழ்கியில் 4 நாள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன் மட்டுமே இருந்தது. இது கடலுக்குள் 96 மணி நேரம் இருக்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டது. கடந்த வியாழன் காலை வரை தான் ஆக்ஸிஜன் இருக்கும் என்ற நிலையில் இந்த நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணி தீவிரமாக நடந்தது.
அமெரிக்கா மற்றும் கனடாவின் கப்பல்கள், விமானங்கள் இந்த நீர்மூழ்கியை தேடும் பணியில் ஈடுபட்டது. தேடும் பணியில் ஈடுபட்டபோது ஆழ்கடல் பகுதியில் சத்தம் கேட்டதாக கனடாவின் கண்காணிப்பு விமானம் பி-3 கண்டறிந்தது. சோனார் கருவியிலும் ஆழ்கடலில் ஏற்பட்ட சத்தம் பதிவானது. அந்த இடத்தை நோக்கி மீட்பு குழுவினர் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் பேரழிவு வெடிப்புக்கு உட்பட்டதாகவும் இது கடலின் ஆழத்தில் ஏற்பட்ட அதீத அழுத்தத்தின் காரணமாகக் தான் ஏற்படும் என கூறப்பட்டது. அட்லாண்டிக் கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 3,800 மீட்டர் (12,400 அடி) கீழே இந்த நீர்மூழ்கிக் கப்பல் செல்லும் திறனுடன் அமைக்கப்பட்டது. அங்கு நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கு 6,000 பவுண்டுகளாக (psi) இருக்கும். இந்த அழுத்தத்தினால் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து, அதிலிருந்த பைலட் உட்பட ஐந்து பேர் இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த டைட்டன் கப்பலில் பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானிய முதலீட்டாளர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான்,பிரெஞ்சு மூழ்காளர் பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் ஓசன்கேட் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்த கப்பலின் பைலட்டுமான ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் பயணித்தனர். இவர்கள் இந்த பிரத்தியேக நீர்மூழ்கி கப்பலில் இருந்து, இறந்தது குறிப்பிடத்தக்கது.