ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துறை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வினோத் பாபு. இவர் மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் எனவும், பாகிஸ்தானில் 20 நாடுகள் கலந்து கொண்ட டி 20 மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது தலைமையில் இந்திய அணி கலந்து கொண்டு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பையுடன் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
அவரை அமைச்சர் ராஜகண்ணப்பன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைத்து வாழ்த்து பெற்று தந்துள்ளார். அப்போது முதலமைச்சரிடம் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில், பாகிஸ்தானில் அது போன்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எதுவும் நடைபெறவில்லை என்றும், இந்தியாவில் மேற்கு வங்காளம் ஜான்பூரில் நடந்த கிளப் வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு, அதனை வீடியோ எடுத்து பாகிஸ்தானில் விளையாடியதாக ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவர் கொண்டு வந்த உலகக்கோப்பை மேற்கு வங்காளத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். தன்னுடைய அணி என அவர் அளித்த 15 பெயர் கொண்டவர்களின் பட்டியல்கள் போலி என்பதும், தான் இந்திய அணி கேப்டன் எனவும் உலகக் கோப்பை விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல பண உதவி செய்யுமாறு பல தனியார் நிறுவனங்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் வினோத் பாபுவுடன் விசாரித்ததில் தான் தவறு செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பதிவு பெற்ற வீல் சேர் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில், வினோத் பாபு மீது புகார் அளிக்க உள்ளதாக வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷனில் விளையாடும் தமிழக அணி கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான முத்துச்சாமி நம்மிடம் தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் பாகிஸ்தானுக்கு தனது தலைமையில் இந்திய அணியுடன் கிரிக்கெட் விளையாட செல்வதற்கு நிதி உதவி அளிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வினோத் பாபு மனு கொடுத்தார். அதேபோல் அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து உதவி கோரினார். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.