காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கவிழ்ந்த பிறகு, ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, இன்று தனது கடைசி பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கவிழ்ந்த பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக, இன்று தனது கடைசி பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. அப்போது, நிதித்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, இந்த பட்ஜெட்டை வாசித்தார்.
பட்ஜெட் தாக்கலின்போது, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா உட்பட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் காதில் பூ வைத்துக்கொண்டு சட்டசபைக்கு வந்துள்ளனர். இது பாஜக-வின் பட்ஜெட்டை கேலி செய்யும்படியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் இந்த பட்ஜெட்டை, `காதில் பூ' என்று விமர்சித்துள்ளது. பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் சித்தராமையா, `ஆளுங்கட்சி தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 600 வாக்குறுதிகளில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது' என சாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பசவராஜ் பொம்மை, இன்றைய பட்ஜெட் தாக்கிலின்போது, தங்களின் வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அரசு வெளியிடும் என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் இந்தாண்டு மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான திட்டமிடலும் ஒருபக்கம் நடைபெற்றுவருகிறது.