துருக்கி நாட்டில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து, 12 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட நில நடுக்கம் துருக்கி நாட்டையே உலுக்கியது. துருக்கி மட்டுமின்றி, அதன் அண்டை நாடான சிரியாவும் இந்த நில நடுக்கத்தால் பெரும்பாதிப்புக்கு ஆளானது.
இவ்விரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கிலான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. நடு இரவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால், பல்லாயிரக்கணக்கான மக்கள் உடைப்படும் கட்டிடங்களுக்குள் மாட்டிக்கொண்டு உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களையும், உயிருக்காக போராடுபவர்களையும் தேடும் பணி 12 நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், 12 நாட்களுக்கு பிறகு கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து 45 வயதான நபர் ஒருவர் மீட்புக்குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று 12 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியில் நில நடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்து விட்டது.