Budget 2023 : பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்? |Nirmala Sitharaman
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், 'அல்வா' செய்யும் நிகழ்ச்சி ஏன் முக்கியம் என்பதை பார்ப்போம்
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல், 2023 பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. பட்ஜெட் அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பதை குறிக்கும் விதமாக இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும்.
இந்த ஆண்டும் 2023-24 க்கான மத்திய பட்ஜெட் குறித்த ஆவணங்கள் அச்சிடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டதை குறிக்கும் விதமாக, டெல்லியில் உள்ள நிதியமைச்சகம் அலுவலகத்தில் ஜனவரி 26ஆம் தேதி அல்வா கிண்டப்பட்டது.
இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் மற்றும் நிதித்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமாக பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பாகவே துவங்கிவிடும். பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி, பட்ஜெட் தாக்கல் தினத்துக்கு 10 நாட்களுக்கு முன் துவங்கும்.
'அல்வா' நிகழ்ச்சி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ?
இந்த அல்வா செய்யும் நிகழ்ச்சி எப்போது தொடங்கப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், இந்திய பாரம்பரியத்தில், எந்தவொரு பணியையும் தொடங்கும் முன் இனிப்புடன் தொடங்க வேண்டும் என்ற நம்பிக்கையினால் அல்வா விருந்து நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20ஆம் தேதிக்கு மேல் அல்வா செய்யும் நிகழ்ச்சி நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
ஒரு பெரிய பாத்திரத்தில் அல்வா தயாரிக்கப்பட்டு, நிதி அமைச்சக அதிகாரிகளுக்கும் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நிதியமைச்சர் கையினாலேயே அல்வா பரிமாறப்படும். பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அல்வா பரிமாறப்பட்டவுடன் பட்ஜெட் தாக்கல் குறித்த செய்திகள் முக்கியத்துவம் பெறுகிறது. பட்ஜெட் தயாரிப்பில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை நிதி அமைச்சகத்தின் நார்த் பிளாக்கின் அடித்தளத்தில்தான் தங்க வேண்டும்.
அல்வா செய்யும் நிகழ்ச்சிக்குப் பிறகு, பட்ஜெட் தொடர்பான தகவல்கள் ரகசியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும், தகவல்கள் கசியாமல் தடுப்பதற்கும், பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் வரை, சுமார் 10 நாட்கள் தங்கள் குடும்பங்களைச் சந்திக்க செல்ல முடியாது. இந்த காலகட்டத்தில் நிதி அமைச்சகத்தின் மிக மூத்த அதிகாரிகள் மட்டுமே வீட்டிற்கு செல்வார்கள். மிக ரகசியமாக பட்ஜெட் ஆவணங்கள் தயார் செய்யப்படும்.