ரஜினி டைம்பாஸ்
சினிமா

கண்டக்டராய் ரஜினி காதலித்த மருத்துவக்கல்லூரி மாணவி! - பழைய பேப்பர் கடை | Epi 14

உள்ளுக்குள்ள சாதிக்கணும்னு வெறி மட்டும் அப்படியே இருந்துச்சு. என்னிக்காச்சும் ஜெயிச்சிட்டு ஊருக்குப் போய் அந்தப் பெண்ணைத் தேடிப்போய் கல்யாணம் பண்ணனும்னு எண்ணம் வந்தது.

Saran R

இரவின் நிழல் தெரியும். இரவின் நிறம் தெரியுமா..? ஆம். அதுதான் ரஜினிகாந்த் என்ற சொல்லின் அர்த்தம். இந்தப் பெயர் வந்த காரணம் தெரியுமா? பாலசந்தர் வைத்த பெயர் தான் இந்த ரஜினிகாந்த். 1972-ல் மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை சினிமாவாக்கினார் ரஜினியின் குருநாதரான பாலசந்தர். அப்போது சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பெயருக்கு மாற்றாக ஒரு பெயரை வைக்க எண்ணிய பாலசந்தர், தன்னுடைய மேஜர் சந்திரகாந்த் படத்தின் நாயகன் பாத்திரமான ரஜினி காந்த் என்ற பெயரை சிவாஜிராவுக்கு சூட்டினார். 

இதெல்லாம் ஓ.கே பாஸ். ரஜினிக்கு ஒரு அழகான முதல் காதல் இருந்திருக்கிறது தெரியுமா..?

அந்தக் காதல் பற்றி பாட்ஷா ஷூட்டிங்கின்போது விஜயகுமார், தேவன், ஜனகராஜிடம் ஒரு டின்னரின்போது பகிர்ந்திருக்கிறார். இதோ அவரது வார்த்தைகளில்...

''நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி கண்டக்டரா பெங்களூரில் வேலை பார்த்தது எல்லோருக்கும் தெரியும்.  அதிகாலைல ஆரம்பிக்கும் என் டூட்டி மதியம் 2 மணிவரை நீடிக்கும். அப்புறம் நான்.. கர்நாடக போக்குவரத்துக் கழகத்தோட கலைநிகழ்ச்சிக்கான அரங்கத்துல நாடகம் பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்தேன். 5 நாடகங்களை  சில முக்கிய பண்டிகை தினங்கள்ல போட்ருக்கேன். என் சக நண்பன் ஓட்டுநராக வேலைபார்த்த ராவ் பகதூர்தான் என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணுவான்.

 'ஏ...சூப்பர்ப்பா... நீ சிவாஜி மாதிரி நடிக்கிறே!' என ஏற்றிவிடுவான்.

அவன் சொன்னது பொய்யுன தெரிஞ்சாலும் அந்தப் பொய் எனக்கு ரொம்பவே புடிச்சிருந்துச்சு. இப்படி ஒரு நாளின் முதல் பாதி பஸ்லயும் இரண்டாம் பாதி மேடையிலயும் போய்க்கிட்டு இருந்துச்சு. அப்போ தான் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி என்னைப் பார்க்க ஆரம்பிச்சா. உண்மையில பஸ்ல தப்பான டைரக்‌ஷன்ல நின்னு ஏறுனதால நான் அவளை கண்டிச்சேன். ஸாரி கேட்டவ என்னைக் கவனிக்க ஆரம்பிச்சா. அப்படியே ஸ்டைலா விசிலை தூக்கி வீசி வாய்ல கவ்வி விசிலடிக்குறத செய்வேன். அதைப் பார்க்குறதுக்காகவே என் பஸ்ல வருவா...

ஒருநாள் பார்க்ல மீட் பண்ணினோம். அவதான், 'நீங்க சினிமால நடிக்கலாமே'னு கேட்டா. ராவ் பகதூரும் அப்போகூட இருந்தான். 'ஆமா, சென்னைல திரைப்படக் கல்லூரிக்கு அப்ளை பண்ணப் போறான் என் ஃப்ரெண்ட்'னு எடுத்துக் கொடுத்தான். 

அதன்பிறகு ஒரு நாள் நாடகத்தைப் பார்க்க அரங்கத்துக்கு அந்தப் பெண் வந்திருந்தாள். என் மீது அக்கறை கொண்ட ஒரு மனுஷியாய் இருந்தாள். நட்பாய் மாறி காதலாக மலர்ந்த அந்த உறவு எனக்கு அவ்வளவு பிடிச்சிருந்தது. அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு விண்ணப்பம் அனுப்ப பணம் கொடுத்தது அவதான். மெடிக்கல் லீவெடுத்துக்கிட்டும் அப்புறம் லாங் லீவிலும் தான் நான் சென்னைக்கு வந்தேன்.

ஏன்னா எனக்கு கண்டக்டர் வேலையை விட மனசில்லை. ஒருவேளை சினிமால சோபிக்க முடியலைனா ஊருக்கு திரும்ப வந்திரலாம்னு நினைச்சுட்டு தான் கிளம்பினேன். ராயப்பேட்டைல ஒரு நண்பனோட அறையில ஷேர் செஞ்சுக்கிட்டு அடையாறுக்கு பஸ்ல நடிப்பு வகுப்புக்கு போய்க்கிட்டு இருந்தேன். போகும்போது பஸ்ல போற நான் திரும்ப வரும்போது காசில்லாததால் நடந்தே ரூமுக்கு வந்துருவேன். ஆனா, உள்ளுக்குள்ள சாதிக்கணும்னு வெறி மட்டும் அப்படியே இருந்துச்சு. என்னிக்காச்சும் ஜெயிச்சிட்டு ஊருக்குப் போய் அந்தப் பெண்ணைத் தேடிப்போய் கல்யாணம் பண்ணனும்னு எண்ணம் வந்தது. 

சில படங்கள் நடிச்சபிறகு பெங்களூருக்குப் போய் அவ தங்கியிருந்த வீட்டுக்குப் போனா அவ குடும்பம் வீட்டைக் காலி செஞ்சிருந்தது. நண்பர்களின் உதவியுடன் சில நாட்கள் தேடினேன். ஆனா, அந்தப் பெண் கிடைக்கலை. மனசுடைஞ்சு போனேன். திரும்ப சென்னைக்கு வந்துட்டேன். கடைசி வரை அந்தப் பெண்ணை நான் பார்க்க முடியலை!'' என்று நெக்குருகி பேசியிருக்கிறார். 

ரஜினிகாந்தின் ஆரம்பகால பெர்ஷனல் வாழ்க்கை கடினமாக இருந்ததாக சொல்வார்கள். அதன் பின்னணியில் ஒரு காதல் தோல்வி இருந்திருக்கிறது என்பதே ஆச்சர்யம் தான்! 

(தூசு தட்டுவோம்..!)