Director Hari
Director Hari timepass
சினிமா

Director Hari இன் டவுசர் காலம் இப்படிதான் இருந்துருக்கும்!

Aravindraj R

'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்கப் பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம்' தொடர்.

இந்த வாரம், 'பரபர' இயக்குநர் ஹரியின் பள்ளிக்காலம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

மற்ற மாணவர்கள் பரிட்சைக்கு ஸ்கேல், பென்சில், ரப்பர், பேனா கொண்டு வந்தால், இவர் மட்டும் வீச்சரிவாள், பட்டாக்கத்தி, வேல் கம்புகளைக் கொண்டு வந்து, "லேய்.. நான் பரிட்சைக்கும் ரெடிலே.. என்ன பகைக்குறவனுக்கு ரெடிலே" என விநோதமான விளக்கத்தைக் கொடுத்திருப்பார்.

தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, மொத்த இந்தியாவிற்குமே தூத்துக்குடிதான் தலைநகரம் என்று நம்பியிருப்பார்.

பள்ளிக்கு மற்ற மாணவர்கள் ரிக்‌ஷா, ஆட்டோ, சைக்கிளில் வர இவர் மட்டும் பெற்றோரிடம் அம்பாஸிட்டரும் சுமோவும் கேட்டிருப்பார். முன்னால் 10 சுமோ, பின்னால் 10 அம்பாஸிட்டர் போக வேண்டும் என்றும் அடம்பிடித்திருப்பார்.

அப்படியே சுமோ, அம்பாசிட்டர் ஏற்பாடு செய்துக்கொடுத்தாலும், உள்ளே உட்காராமல் வெளியே தொங்கியபடி, மரக்கட்டை ஸ்கேலை கையில் சுழற்றியபடி, "ஹே... ஹே... வாடா.. வாடா.. வாடா.. ஹே.. ஹே.. ஹே.." என்று கத்திக் கொண்டே வந்திருப்பார்.

இந்தியாவின் தேசிய விலங்கு எது என்ற கேள்விக்கு, காலாண்டு பரிட்சையில் சிங்கம் என்றும், அரையாண்டு பரிட்சையில் சிங்கம் 2, முழு ஆண்டு பரிட்சையில் சிங்கம் 3 என்றும் பதில் எழுதி, வாத்தியார்களைப் பதற வைத்திருப்பார்.

ஒட்டு மொத்த பள்ளிக்கூடத்தையே ஒரு கூட்டுக்குடும்பமாக பார்த்திருப்பார். சயன்ஸ் டீச்சரை சின்னமா, கணக்கு டீச்சரை பெரியாத்தா, தமிழ் மிஸ்ஸை அத்தாச்சி, ஹெட் மாஸ்டர் மேடமை அப்புத்தா,.. என்று அழைத்து எல்லோரையும் சொந்தம் கொண்டாடியிருப்பார்.

பென்சில் சீவ, நோட்டில் கோடு போட என அணைத்திற்கும் ஆறடி அருவாளையே உபயோகப்படுத்தியிருப்பார்.

மற்ற மாணவர்கள் நோட்டு, புத்தகத்திற்கு ப்ரௌன் ஷீட் போட்டு, விஜய், அஜித், சக்திமான், சச்சின் லேபில் ஒட்டி பெயர் எழுதினால், இவர் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோயில் கோபுர புகைப்படத்தையும் ஒட்டி, 'ஹரி, ஆறாம் வகுப்பு - ஆ பிரிவு, அறிவியல் வீட்டுப்பாட நோட்' என எழுதியிருப்பார்.

எங்கே சுற்றுலா போகலாம் என டீச்சர் கேட்டால், "தூத்துக்குடி ஹார்பர், நல்லத்தண்ணி தீவு, உப்புத்தண்ணி தீவு, மணப்பாடு கடற்கடை, திருச்செந்தூர் கோயில், தேரி காடு, சர்வதேச கடல் எல்லை,.." என மிரட்டலான லிஸ்ட்டைச் சொல்லியிருப்பார்.