Blue Sattai
Blue Sattai டைம்பாஸ்
சினிமா

Blue Sattai என்றாலே பிரச்னை தான் - பார்த்திபன் கிண்டல்

டைம்பாஸ் அட்மின்

விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 23-ம் தேதி இரவு நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபடியே பேசினார். அப்போது அவர் அளித்த சில பதில்கள் அரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. ஆங்கில வழியிலான தனியார் பள்ளி என்பதால், அங்கிருந்த சிறுவர்கள் ஆங்கிலத்தில் பேசியதோடு, தங்களது கேள்விகளையும் ஆங்கிலத்தில் கேட்டனர்.

அதற்கு, "இந்த பள்ளி குழந்தைகள், அடுத்ததாக 'தமிழ்தாய் வாழ்த்து பாடப்போகிறோம்' என்பதை கூட ஆங்கிலத்தில் சொன்னது அழகாய் இருந்தது. நீங்கள் ஆங்கிலம்தான் கற்றுக்கொள்கிறீர்கள் என நினைக்கிறேன். அதனிடைய, என்னை போன்ற ஆட்களை வரவழைத்து தமிழையும் கற்றுக் கொள்ளலாம்" என்றார் கிண்டலாக.

தொடர்ந்து, பெண் ஆசிரியை ஒருவர், "உங்களின் ரோல் மாடல் யார்" என கேட்டார். அதற்கு, "என்னுடைய ரோல் மாடல் என்னுடைய அப்பா ராதாகிருஷ்ணன் தான்" என்று பதிலித்தார். தனக்கும் தன்னுடைய அப்பா தான் ரோல் மாடல் என்பது போல அந்த ஆசிரியை "மீ டூ சார்" என்று கூறியதும், "எங்க அப்பா தானா உங்களுக்கும்... எங்க அப்பா, இந்த மாதிரி தெரியாம எதாவது காரியம் பண்ணியிருக்காறானு தெரியல அதான். எங்க அப்பா, நிறைய பேருக்கு ரோல் மாடலா இருக்காரானு கூட எனக்கு தெரியல, இருந்திருக்கலாம். நான் சகஜமா பேசனும் என்பதற்காக ஜாலியா பேசுவேன். தப்பா எடுத்துக்காதீங்க" என்று பதிலளித்தார்.

'என்னதான் வித்தியாசமா பேசுறவர்னு பெயர் எடுத்திருந்தாலும், இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்ப்பா' என கூட்டத்தில் பலர் முகம் சுளித்தனர்.

அப்போது அரங்கில் சிரிப்பலைகள் எழுந்தது. அதற்கு முன்பாக, "பார்க்க அஜித் மாதிரி இருந்தால் சினிமாவில் நிறைய வாய்ப்பு கிடைக்கும். ஆனா, நாமோ லைட்டை போட்டா தான் தெரிவோம்" என்று பார்த்திபன் பேசியிருந்தார். அதனை உள்வாங்கிய ஒருவர், தான் கேள்வி கேட்க எழும்பொழுது, "சார், நானும் உங்க கலர் தான். என் முகம் தெரியுதுங்களா..." என்று கேட்க வட்ட வடிவில் தனிப்பட்ட ஃபோக்கஸ் அவரது முகத்திற்கு திருப்பப்பட்டது. அவரை கண்ட பார்த்திபன், "நல்லா தெரியுது. புலூ கலர் சட்டை போட்டிருக்கீங்க. புலூ சட்டை என்றாலே பிரச்னை தான்" என்றார்.

- அ.கண்ணதாசன் / போட்டோ: தே.சிலம்பரசன்