Tamil New Year timepassonline
சினிமா

New Year Tamil Song: இளமை இதோ இதோ - நினைவே ஒரு சங்கீதம் | Epi 19

கமல் டூப் போடாமல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பைக்கில் வந்தபோது கண்ணாடித் துண்டுகள் அவர் முகத்தில் குத்திவிட்டன. கண்ணில் குத்தியிருக்கிறதா என்று தெரியாத அளவிற்கு கண் பக்கமிருந்து ரத்தம் கொட்டியது.

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

ந்தாண்டு புத்தாண்டு பிறக்கும் தினத்தன்று இரவு, எனது மகனுக்கு டெங்கு காய்ச்சல் என்பதால், பல ஆண்டுகள் கழித்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பார்ட்டி எதற்கும் போகாமல் வீட்டில் இருந்தேன். நண்பர்கள் பலரும் ஃபோன் செய்தபோது, “வீட்டில் இருக்கேன்” என்று கூறியதும் அவர்கள், “என்னடா… வீட்டுல இருக்கியா?” என்று அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பேச பேச… மனதிற்குள் பெரிய துக்கம்.

1994-ல் நான் சென்னை வந்த பிறகு வந்த எல்லா புத்தாண்டு இரவுகளும் கொண்டாட்டமான இரவுகளாக இருக்கும். எல்லா புத்தாண்டு இரவையும் நண்பர்களுடன்தான் கழிப்பேன். இந்த ஆண்டுதான் வீட்டில் இருக்கிறேன் என்பதால், இரவு 12 மணிக்கு என்ன செய்வதென்று புரியாமல் எனது பக்கத்திலேயே அமர்ந்திருந்த மனைவிக்கு வாட்ஸ் அப்பில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். அவரும் பதிலுக்கு வாட்ஸ் அப்பில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க… ஏனோ மனத்தில் புத்தாண்டின் உற்சாகம் இல்லை. எனவே கனத்த மனதுடன் எனது அறைக்குச் சென்றேன். எனது டேபிளில் எப்போதும் இருக்கும் காந்தியின் ‘சத்திய சோதனை’ புத்தகத்தை எடுத்து மூன்றாவது முறையாக படிக்க ஆரம்பித்தேன்.

1990-களில் உருவான கார்ப்பரேட் கலாச்சாரத்திற்கு பிறகு புத்தாண்டு என்பது மிகப்பெரும் கொண்டாட்டமாக மாறிவிட்டது. ஆனால் எனது பால்ய காலத்தின் குடியல்லாத புத்தாண்டுகள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். எனது பள்ளிக் காலத்தில் நான் எழுதியிருந்த டைரிகளை(எனது அப்பாவிற்கு டைரி எழுதும் பழக்கம் இருந்ததால், நான் எனது ஒன்பதாம் வகுப்பு முதல் டைரி எழுதி வருகிறேன்) எடுத்து ஜனவரி ஒன்றாம் தேதி நிகழ்வுகளைப் படித்துப் பார்த்தேன். ஒரு வருட டைரியில், “இன்று பெரியம்மா வீட்டிலிருந்த கோபால கிருஷ்ண கோகலே வாழ்க்கை வரலாறு புத்தகத்தைப் படித்தேன்” என்பதை படித்தவுடன் எனக்கு புல்லரித்துவிட்டது. அப்போதிலிருந்தே நான் மிதவாதியாகத்தான் இருந்திருக்கிறேன்.

எனது பள்ளி நாட்களில் புத்தாண்டு, அரையாண்டு விடுமுறையில்தான் வரும் என்பதால் அப்போது நாங்கள் பெரும்பாலும் எங்கள் பொன்மலை பெரியம்மா வீட்டில்தான் இருப்போம். எனது பெரியப்பா பொன்மலை ரயில்வே ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வந்ததால், ஆங்கிலேயர் காலத்து ப்ளானிங்கில் அழகாக திட்டமிடப்பட்ட குவார்ட்டர்ஸ் அது. வரிசையாக தனிதனித்தனி வீடுகளாக இருக்கும்.

பெரியம்மா வீடு சௌத் டீ டைப்பில் இருந்தது. அப்போதெல்லாம் அங்கு நிறைய கிறிஸ்துவர்களும், ஆங்கிலோ இந்தியர்களும் இருந்து வந்ததால் அங்கு சூழலே வித்தியாசமாக இருக்கும். பல வீடுகளில் கிறிஸ்துமஸ்க்கு தொங்கவிடப்பட்ட நட்சத்திர விளக்குகள் புத்தாண்டு வரை எரிந்துகொண்டிருக்கும். புத்தாண்டு இரவன்று தெருவில் அனைவரும் விழித்திருந்து நள்ளிரவில் அனைவரும் ஆங்கிலத்தில், “ஹேப்பி நியூ இயர்’ என்று கைகுலுக்க… நான் அந்த ‘ஹேப்பி நியூ இயர்’ ஆங்கிலத்திற்கே மிரண்டு போய், எங்கே தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசிவிடுவார்களாளோ என்ற பயத்தில் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் கைகுலுக்கிவிட்டு ஓடிவந்து வீட்டிற்குள் பதுங்கிவிடுவேன்.

       ப்ளஸ் டூ அரையாண்டு விடுமுறை சமயத்தில் பொன்மலைக்குச் செல்லவில்லை. அரியலூரில் அந்த புத்தாண்டு நாளன்று காலை, என்னுடன் பள்ளியில் படித்த தோழியிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவள் எனக்கு சிவப்பு நிறத்தில் ஒரு குட்டி டைரியை பரிசாக அளித்தாள். கையில் டைரியுடன் வீட்டிற்கு வந்தபோது அப்பா ஏதோ புத்தகம் படித்தபடி வாசலிலேயே அமர்ந்திருந்தார்.

என்னைப் பார்த்தவுடன், “என்னடா கைல?” என்றார்.

“டைரி.”

“யாரு கொடுத்தா?”

“காயத்ரி கொடுத்தா”

அவ்வளவுதான். சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்த அப்பா, “பொம்பளை பிள்ளைகிட்ட என்னடா டைரி வாங்கிகிட்டு…” என்றவர், “இங்க தா…” என்று டைரியை வாங்கி முதல் பக்கத்தை பிரித்து காயத்ரி எழுதியிருந்ததை படித்தார். அதில் அவள் என்ன எழுதியிருந்தாள் என்று துல்லியமாக நினைவில் இல்லை. காதல் வாசகங்கள் ஏதும் கிடையாது. ஏதோ நட்பு வாசகங்கள்தான். ‘என்றும் என் நினைவில் இருக்கும்…’ அல்லது ‘என்றும் என்னோடு இருக்கும்’ என்பது போன்ற வார்த்தைகள் என்று நினைக்கிறேன். இந்த வார்த்தைகள் ஓரளவு காதலுக்கும் பொருந்தும் என்பதால் என் தந்தையால் அது காதலா அல்லது நட்பா என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால் என்னை அடிப்பது என்ற முடிவுக்கு வந்தார்.

“படிக்கிற வயசுல என்னடா பொம்பளைப் பிள்ள சகவாசம்…” என்றபடி என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

என் அம்மா திடுதிடுவென்று ஓடி வந்து, “எதுக்குங்க நாளும் கிழமையுமா பிள்ளைய அடிக்கிறீங்க?” என்று தடுத்தார்.

“என்னாடி புள்ள…. அதுக்குள்ள பொம்பள சகவாசம்…”

அந்த ‘சகவாசம்’ என்ற வார்த்தை என்னைக் காயப்படுத்த… நான் பதிலுக்கு ஏதோ சொல்ல… அப்பா என்னை மீண்டும் அடித்துவிட்டு, அந்த டைரியின் பக்கங்களை கிழித்து கீழே வீசினார். அதிர்ந்துபோன நான் பேசக் கூட சக்தியற்று ஒன்றும் எழுதப்படாமல் காற்றில் நகர்ந்துகொண்டிருந்த வெற்றுத் தாள்களை நீண்ட நேரம் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தேன். 

 அதற்குப் பிறகு எத்தனையோ புத்தாண்டுகள் வந்துவிட்டன. இப்போது அந்தப் பெண் எங்கு? எப்படி இருக்கிறாள்? என்ற கூட தெரியாது. வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் மாறிவிட்டது. ஆனால் எனது பால்ய காலம் முதல் இன்று வரையிலும் எனது புத்தாண்டில் மாறாத ஒரே விஷயம், “இளமை இதோ இதோ…” பாடல்.

1982 ஆம் ஆண்டு ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கமல்ஹாசனின் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் இடம் பெற்ற இப்பாடலுக்கு இசைஞானி இளையராஜா இசைமைக்க… பஞ்சு அருணாசலம் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். “ஹாய் எவ்ரிபடி… விஷ் யூ ஹேப்பி நியூ இயர்…’ என்று தொடங்கும் இந்த வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் ஒவ்வொரு புத்தாண்டன்றும் டிவியிலும், ரேடியோவிலும் இப்பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.  

       எனது பார்வையில் சில பாடல்களுக்கு மாற்றே இல்லை. கல்லூரி கால நினைவுகளுக்கு, ‘ரத்தத்திலகம்’ படத்தில் இடம்பெற்ற “பசுமை நிறைந்த நினைவுகளே…” பாடலுக்கு மாற்றாக வேறு எந்தப் பாடலையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் சிலர் ஏ.ஆர். ரஹ்மானின், “முஸ்தஃபா முஸ்தஃபா… டோன்ட் ஒர்ரி முஸ்தஃபா” பாடலைச் சொல்வார்கள். ஆனால் புத்தாண்டுக்கு இன்று வரையிலும் “இளமை இதோ இதோ…’ பாடலுக்கு மாற்றாக 40 ஆண்டுகளுக்கு பிறகும் வேறு எந்தப் பாடலையும் சொல்ல முடியவில்லை.

       இவ்வாறு தமிழர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆண்டையும் துவக்கி வைக்கும் இப்பாடல் படமாக்கப்பட்ட விதத்தைப் பற்றி படித்தபோது நடிகர் கமல்ஹாசன் என்ற கலைஞனுக்கு, ‘சினிமா’ என்ற கலையின் மீதிருக்கும் அபரிமிதமான அர்ப்பணிப்பு உணர்வை புரிந்துகொள்ள முடிகிறது.

அந்தப் பாடலுக்காக  ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்தப் பாடலின் துவக்கத்தில் நல்ல யூத்ஃபுல்லான கெட்அப்பில் கமல், பைக்கை ஓட்டிக்கொண்டு வந்து ஒரு கண்ணாடிக் கதவை உடைத்துக்கொண்டு, “விஷ் யூ ஹேப்பி நியூ இயர்…” என்று பாடவேண்டும்.

       இரவு 11 மணி போல அந்தக் காட்சி எடுக்கப்பட்டது. கமல் டூப் போடாமல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பைக்கில் வந்தபோது கண்ணாடித் துண்டுகள் அவர் முகத்தில் குத்திவிட்டன. கண்ணில் குத்தியிருக்கிறதா? அதற்கு அருகில் குத்தியிருக்கிறதா? என்று தெரியாத அளவிற்கு கமலின் கண் பக்கமிருந்து அவ்வளவு ரத்தம் கொட்டியது. டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா போன்றவர்கள் பதறிவிட்டனர். உடனே ஏவிஎம்மின் மேனேஜர் வீரப்பன், ஏவிஎம். குமரன் அவர்களுக்கு ஃபோன் செய்து விஷயத்தைக் கூறினார்.  உடனே ஏவிஎம். குமரன் அப்போது பிளாஸ்டிக் சர்ஜரியில் புகழ்பெற்று விளங்கிய டாக்டர். மாதங்கி ராமகிருஷ்ணன் வீட்டுக்கு கமலை அழைத்து வரச்சொன்னார். ஏவிஎம்மின் குடும்ப மருத்துவரான மாதங்கிக்கு ஃபோன் செய்து குமரன் விஷயத்தைக் கூற… டாக்டர் மாதங்கி உடனே கமலை அழைத்து வரச்சொன்னார்.

       டாக்டரின் வீட்டிலேயே இருந்த கிளினிக்கில் கமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட… குமரனுக்கு உள்ளுக்குள் பயங்கர மன உளைச்சல். கமல் ஏவிஎம் நிறுவனத்தால், ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர். கமல் முகத்தில் பெரிய காயம் பட்டிருந்தால், அந்தத் தையல் தெரிந்து கமலின் முக அழகே போய்விடுமே. ஒரு நடிகனுக்கு முக அழகுதானே மூலதனம். “நம்மால் அறிமுகம் செய்யப்பட்ட கமலுக்கு நம்மாலேயே ஏதும் ஆகிவிடுமோ” என்று மிகவும் கவலைப்பட்டார்.

ஆனால் நல்லவேளையாக கண்ணில் இல்லாமல், கண்ணை ஒட்டியுள்ள சதைப் பகுதியில்தான் கண்ணாடி குத்தி கிழித்திருந்தது. அங்கு தையல் போட்ட டாக்டர், “கவலைப்படும்படியான காயம் இல்லை. காயம்பட்ட இடத்தில் நுணுக்கமாக தையல் போட்டிருக்கிறேன். காயம் ஆறுவதற்கு இரண்டு நாட்கள் ஆகும். அதன் பிறகு அந்தக் காயத்தின் வடு கூடத் தெரியாமல் சதையோடு சதையாக மறைந்துவிடும்” என்று கூறிய பிறகுதான் குமரன் மனத்தில் நிம்மதி. காயம் ஆறுவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்பதால், கமல் ஓய்வெடுக்கட்டும் என்று இரண்டு நாட்கள் படப்பிடிப்பை ரத்து செய்தார்கள்.

மறுநாள் காலை இதைக் கேள்விப்பட்ட கமல் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்களைத் தொடர்புகொண்டு, “ஏன் சார் படப்பிடிப்பை ரத்து செய்தீர்கள்? நான் நல்லாதான் இருக்கேன். முகத்துல உள்ள காயத்தின் தையல் தெரியாம ரெண்டு நாள் ‘லாங் ஷாட்’, ‘மிட் ஷாட்’ வச்சு படப்பிடிப்பை நடத்தலாம். ‘க்ளோஸப் ஷாட்ஸ்’ வேணும்ன்னா மூணாவது நாள் எடுத்துக்கலாம்” என்றார். ஏவிஎம் குமரனும், எஸ்.பி.முத்துராமனும், “வேண்டாம்…” என்று எவ்வளவோ கூறியும் கமல் பிடிவாதமாக இருந்ததால் அவ்வாறே மூன்று நாட்களில் அந்தப் பாடல் எடுக்கப்பட்டு, இன்று வரையிலும் ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் நமது டிவிக்களில் ஒளிபரப்பாகி தமிழ்நாட்டின் நிரந்தர புத்தாண்டு கீதமாகிவிட்டது.

ஹாய் எவ்ரி படி
விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன் ரசிகைகளின் இந்திரன்

நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகர் ஏது கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்
எல்லோர்க்கும் என்மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

ஹிந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக் துஜே கே லீயே
ஏன்டி நீ பாத்தியே

எனக்காக ஏக்கம் என்னம்மா
களத்தூரின் கண்ணம்மா
உனக்காக வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான்
ஆள் மாறுவேன் நான்
தான் சகலகலா வல்லவன்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்
எல்லோர்க்கும் என்மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

கம்பெடுத்து ஆடுவேன்
கத்திச்சண்டை போடுவேன்
குத்துவதில் சூரன் நான்
குஸ்திகளில் வீரன் நான்

எனை யாரும் ஏய்த்தால் ஆகாது
அதுதானே கூடாது
எனை வெல்ல யாரும் கிடையாது
எதிர்க்கின்ற ஆளேது

யார் காதிலும் பூச்சுற்றுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்
எல்லோர்க்கும் என்மீது கண்கள்

தகவல் உதவி: திரு.ஏவிஎம்.குமரன் அவர்கள் எழுதிய, “ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்” என்ற புத்தகம்(டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு)