காதல் பட பாடலும் நா.முத்துக்குமாரும் - நினைவே ஒரு சங்கீதம் | Epi 18

மின்சாரக் கம்பத்தைப் பார்த்த முத்துக்குமாருக்கு ஓடிவந்த பரத்தும் சந்தியாவும் அந்தப் பறவைகளாக முத்துக்குமாரின் மனதில் தோன்ற, ”மின்சாரக் கம்பிகள் மீதும் மைனாக்கள் கூடு கட்டும்…” என்ற வரிகள் தோன்றியது.
நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்டைம்பாஸ்

உனக்கென இருப்பேன்: பாடலுக்காக முத்துக்குமார் மேற்கொண்ட நள்ளிரவு பயணம்

சில ஆண்டுகளுக்கு முன்பு:

ஜாதிய வேறுபாடுகள் இன்னும் ஆழமாக வேர் விட்டிருக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் அது.

       காலை ஆறு மணிக்கு எழுந்த அமுதா… எழுந்த என்று சொல்லமுடியாது. ஏனெனில் முந்தைய நாள் இரவு முழுவதும் அவள் தூங்கவே இல்லை. அருகில் காவலுக்காக தனக்கருகில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த அம்மாவைத்தான் விடிய விடிய பார்த்துக்கொண்டிருந்தாள். விடியற்காலையில் தனது காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இருந்தாள். எனவே இரவு முழுவதும் ஒரு பொட்டுத் தூக்கம் வரவில்லை.

       ஆறு மணி போல் எழுந்தவுடன் அம்மா, “முத்து…” என்று அமுதாவின் அண்ணனை அழைத்து அறை வாசலில் காவலுக்கு வைத்துவிட்டு கொல்லைப்புறம் சென்றாள். முத்து அறைக்கதவை வெளியே தாழிட்டு வாசலிலேயே  நின்றுகொண்டான்.

       அமுதா… வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட கடைசி மகள். கல்லூரிப் படிப்பிற்காக தஞ்சை கல்லூரி சென்ற அமுதா தன்னுடன் படித்த இளங்கோவை உயிருக்குயிராக காதலித்தாள். இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிந்து இளங்கோ வேறு ஜாதி என்பதால், அமுதாவின் வீட்டில் அவர்கள் காதலைக் கடுமையாக எதிர்த்தார்கள். படிப்பை நிறுத்தினார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு இளங்கோவுடன் ஓடிப்போக முயற்சி செய்ததால் அறைக்குள்ளேயே அடைத்து இரவும் பகலுமாக மாறி மாறி காவல் காத்து வருகிறார்கள். 

நா.முத்துக்குமார்
'இது குழந்தை பாடும் தாலாட்டு' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 5

இந்தக் கட்டுக்காவலையும் மீறி இன்று காலை வீட்டை விட்டு வெளியேறுவதாகத் திட்டம். பக்கத்து வீட்டிலிருக்கும் தனது தோழி மணிமேகலை மூலமாக இன்று காலை திருச்சிக்கு வந்துவிடுவதாக இளங்கோவுக்கு தகவல் சொல்லி அனுப்பியிருந்தாள். சொன்னபடி இப்போது யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியாகவேண்டும்.

       கொலுசைக் கழட்டி தலையணைக்கு கீழ் வைத்த அமுதா சத்தமின்றி நடந்து புத்தக அலமாரியை அடைந்தாள். அங்கு தனது கல்லூரிப் புத்தகங்களுக்கு நடுவேயிருந்த டிக்‌ஷனரியை எடுத்தாள். அதில் அவள் நெடுங்காலமாக புதிய சலவை 10 ரூபாய் நோட்டுகளை சேர்த்து வைத்திருந்தாள். எடுத்து எண்ணிப் பார்த்தாள். 160 ரூபாய் இருந்தது. அந்தப் பணத்தை எடுத்து நெஞ்சில் பத்திரமாக செருகிக்கொண்டாள்.

 அறைக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்க… அமுதா சட்டென்று அலமாரியிலிருந்த  ஒரு கல்லூரிப் புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்க்க ஆரம்பித்தாள். உள்ளே நுழைந்த அம்மா ஆங்காரத்துடன், “நாலு எழுத்து படிக்க அனுப்பினதுக்குதான் கண்ட பய காதல இழுத்துகிட்டு வந்துட்டியே… பெரிய புக்கு…” என்று புத்தகத்தை தட்டிவிட்டுவிட்டு, “கக்கூஸ் போய்ட்டு வந்து படு… எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. உன்னை காவல் காக்கவே நேரம் சரியா இருக்கு. ஊருக்குப் போன உங்கப்பனும் இன்னும் வரல. எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு… ஓடுகாலி நாய காலை உடைச்சி உக்கார வையுன்னாலும் உங்கப்பன் கேக்கமாட்டேங்கிறான்… வா…” என்று அமுதாவின் தலையைப் பிடித்துத் தள்ளினாள் அம்மா.

       பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்த அமுதா கொல்லைக்கதவை திறந்துகொண்டு வெளியேச் சென்றாள். கொல்லைப்பக்கம் தக்காளி, கத்திரிக்காய்… என்று ஏராளமான செடி கொடிகள். டிசம்பர் மாத குளிர்காற்று சில்லென்று முகத்தில் அடித்தது. குளிர்காலம் என்பதால் இன்னும் அரையிருட்டாகத்தான் இருந்தது. கொல்லைப்புற வேலியை ஒட்டியுள்ள கழிவறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டாள் அமுதா.

       அம்மா நகரும் கொலுசு சத்தத்திற்காக காத்திருந்தாள் அமுதா. தினமும் காலை ஆறு மணிக்கு கழிவறைக்கு வரும் அமுதா அதில் இணைந்திருக்கும் பாத்ரூமிலேயே குளியலையும் முடித்துவிட்டு பத்து நிமிடத்திற்குள் வந்துவிடவேண்டும். கடந்த இரண்டு மாதங்களாக இந்த பத்து நிமிடம் மட்டும்தான் அமுதா வீட்டை விட்டு வெளியே வருகிறாள்.

நா.முத்துக்குமார்
'டி.எம்.எஸ். பாட மறுத்த கண்ணதாசனின் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 8

அமுதா கழிவறையில் இருக்கும் நேரத்தில் அம்மா மாடுகளுக்கு தண்ணீர்விடச் செல்வாள். அந்த பத்து நிமிடத்துக்குள் ஓடிவிடுவதாக ப்ளான். வெளியே அம்மா நகரும் கொலுசு சத்தத்திற்காக காத்திருந்தாள் அமுதா. சில வினாடிகளிலேயே அம்மாவின் கொலுசு சத்தம் சற்று தூரத்திற்கு நகர்ந்தவுடன் அமுதா நெஞ்சு படபடக்க சத்தமின்றி கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். அம்மா தொட்டி நீரில் மாட்டுத் தீவனத்தை கரைத்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

       வேகமாக கதவைத் திறந்து வெளியே வந்த அமுதா சத்தமின்றி கதவைச் சாத்தினாள். கழிவறைக்குப் பின்பக்கம் சென்ற அமுதா வேலியை பிய்த்துக்கொண்டு வெளியே வந்தாள். செருப்பணியாத காலில் முள் குத்த… முள்ளைத் தூக்கி வீசினாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயற்காடுதான். தூரத்தில் மெயின் ரோட்டில் லைட் எரிவது தெரிந்தது. அவளுக்கு அதிகபட்சம் இன்னும் பத்து நிமிடம்தான் இருந்தது. அதற்குள் யார் கண்ணிலும் படாமல் இந்த கிராமத்தை விட்டு சென்றுவிடவேண்டும். தாமதமானால் அமுதா இல்லை என்று தெரிந்தவுடன் முத்து பைக்கை எடுத்துக்கொண்டு வந்தால் முடிந்தது கதை. எனவே நைட்டியுடன் அமுதா வயல் வரப்பில் திடுதிடுவென்று சாலையை நோக்கி ஓடினாள்.

அமுதா காணவில்லையென்றால் தஞ்சாவூரில்தான் தேடுவார்கள். எனவே அவர்கள் எதிபாராத வகையில் திருவையாறு சென்று, திருவையாறிலிருந்து திருச்சிக்கு செல்வதாகத்தான் திட்டம். முதலில் இந்த கிராமத்திலிருந்து மிக வேகமாக வெளியேறவேண்டும். யார் கண்ணிலாவது பட்டால் ஆபத்து.

       மெயின் ரோட்டுக்கு வந்த அமுதா ஒரு செடிக்குப் பின்னால் மறைந்துகொண்டு ஏதாவது ஆட்டோ வருகிறா என்ற பார்த்தேன். ஹைவே என்பதால் திருவையாறுக்கு லோடு ஏற்றிக்கொண்டுச் செல்லும் ஆட்டோக்கள் இந்த நேரத்தில் வரும் என்றுதான் இந்த நேரத்தை தேர்வு செய்திருந்தாள். திடீரென்று மழை பெய்ய ஆரம்பிக்க… மழையில் நனைந்துகொண்டு தவிப்புடன் செடிக்குப் பின்னால் அமர்ந்திருந்தாள்.

       அவள் எதிர்பார்த்தது போல் வாழையிலையை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ வர… வேகமாக சாலைக்கு வந்து ஆட்டோவை வழிமறித்தாள். சற்று வயதானவராக தோற்றமளித்த ஆட்டோக்காரர் அந்த காலை இருட்டு மழை நேரத்தில் நைட்டியுடன் சாலையை மறிக்கும் அமுதாவை வித்தியாசமாகப் பார்த்தார்.

“அண்ணன்… திருவையாத்துல என் ஃப்ரண்டுக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க. அவசரமா போகணும். திருவையாத்துக்கு எவ்ளோண்ணன்?”

“நூத்தம்பது ரூபாம்மா…” என்றவுடன் அமுதாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.

நா.முத்துக்குமார்
'நதியே நதியே காதல் நதியே' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 16

திருவையாத்திலிருந்து திருச்சிக்கு செல்லவேண்டும். 150 ரூபாயை இவருக்கு கொடுத்துவிட்டால் திருச்சிக்கு பஸ்சில் செல்வதற்கு காசிருக்காது. என்ன செய்வது என்று புரியாமல், “அண்ணன்… 100 ரூபாய் வாங்கிக்குங்கண்ணன்…” என்று கூறியபடி திரும்பி தனது வீட்டைப் பார்த்தாள். வீட்டில் அனைத்து விளக்குகளும் எரிவதும், ஆட்கள் அங்குமிங்கும் நடமாடுவதும் தூரத்து நிழலாகத் தெரிந்தது. வீட்டில் தெரிந்துவிட்டது. இன்னும் ஒரு நிமிடம் இங்கிருந்தால் கூட ஆபத்து.

“மழை நேரம். இதுவே கம்மிதான் பாப்பா…” என்றார் ஆட்டோ டிரைவர்.

முதலில் இந்த கிராமத்திலிருந்து வெளியேறுவதுதான் முக்கியம் என்று, “100 ரூபாய்க்கு எதுவரைக்கும்ண்ணன் கொண்டு போய் விடுவீங்க…” என்றாள் அமுதா.

“நடுக்கடை  வரைக்கும் விடுவன்ம்மா…”

“சரிண்ணன்… விடுங்க… நான் அங்கருந்து திருவையாத்துக்கு பஸ்ல போய்க்கிறேன்.” என்று சட்டென்று ஆட்டோவில் ஏறி அமர்ந்து, “சீக்கிரமா போங்கண்ணன்…” என்று கூற… ஆட்டோ சீறிப் பாயந்து கிளம்பியது.

வீட்டில் தஞ்சாவூர் சாலையில் தேடுவார்கள். இருப்பினும் யாரையேனும் இந்தச் சாலைக்கு அனுப்புவார்களா என்ற யோசனையுடன், “ரொம்ப சீரியஸா இருக்காண்ணன். சீக்கிரம் போங்கண்ணன்…” என்று கூற…. ஆட்டோ வேகமெடுத்தது. காலை நேரம் என்பதால் ஹைவே காலியாக கிடக்க… ஆட்டோ நல்ல வேகத்தில் சென்றது. வெளியே மழை இன்னும் வலுத்தது.

நடுக்கடையில் இறங்கியவுடனேயே திருவையாறுக்கு செல்லும் பஸ் நின்றுகொண்டிருப்பதை பார்த்துவிட்டு, ஆட்டோ டிரைவரிடம் நூறு ரூபாய் கொடுத்துவிட்டு வேகமாக மழையில் தொப்பலாக நனைந்துகொண்டே பஸ்சை நோக்கி ஓடினாள். பஸ்சை நெருங்க… மழையில் நைட்டித் தடுக்கிவிட்டு பொத்தென்று ரோட்டில் விழுந்தாள். யாரோ தூக்கிவிட…. வேகமாக எழுந்தாள். நைட்டியின் கால் பகுதி கிழிந்து தொங்கியது. வேறு வழியின்றி அப்படியே ஓடி திருவையாறு பஸ்சில் ஏற… “பஸ்தான் நிக்குதுல்ல? ஏம்மா இப்படி விழுந்து எந்திரிச்சு வர?” என்ற கண்டக்டரும் மற்ற பயணிகளும் கிழிந்த நைட்டியுடன் நின்ற அமுதாவின் கோலத்தை விசித்திரமாக பார்த்தனர்.

படபடப்புடன் பஸ்சில் உட்கார்ந்து காசை நீட்டினாள். திருவையாறு வந்து பஸ் மாறி அமுதா திருச்சி பஸ்ஸ்டாண்ட் சென்று இறங்கியபோது காலை மணி ஒன்பது.

       இறங்கியவுடனேயே அமுதா இளங்கோவைத் தேடினாள். இளங்கோ அரியலூர் பஸ்கள் நிற்குமிடத்தில் நின்றுகொண்டிருந்தான். இவளைக் கவனிக்காமல் சுற்றிலும் தேடிக்கொண்டிருந்தான். எங்கிருந்துதான் அவ்வளவு அன்பும், காதலும் கண்ணீரும் பொங்கியதோ? அமுதா, ”இளங்கோ…” என்று சத்தமாக கத்த… திரும்பி அவளை அந்தக் கோலத்தில் பார்த்த இளங்கோ, “அமுதா…” என்று சத்தமாக கத்தியபடி ஓடிவந்து அவளை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டு இருவரும் கதறி கதறி அழுததை பஸ்ஸ்டாண்டே வேடிக்கை பார்த்தது.

நா.முத்துக்குமார்
'கண் பேசும் வார்த்தைகள் புரியவில்லை' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 12

ரண்டு மாதங்களுக்கு முன்பு என்னை திருச்சியில் வந்து சந்தித்த இளங்கோவும், அமுதாவும் மேற்கூறிய சம்பவத்தை சொன்னபோது எனக்கு வெலவெலத்துவிட்டது. என் மனம் நடுங்க அமுதாவைப் பார்த்தேன். “எங்கம்மா அழுதாங்க. எங்கப்பா ரெண்டு நாளா சாப்பிடல…” என்பது போன்ற அற்ப காரணங்களுக்கெல்லாம் காதலை கைக்கழுவி விடும் இத்தேசத்தில், இவ்வளவு முயற்சிகள் எடுத்து, வீட்டை விட்டு வந்த அந்தப் பெண்ணைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.

தொடர்ந்து இளங்கோ, “திருச்சி பஸ்ஸ்டாண்ட்ல அவளப் பாத்தக் கோலம் அப்படியே கண்ணுல நிக்குது சார். அசல் பைத்தியக்கார பிச்சைக்காரி மாதிரியே இருந்தா...” என்றதைக் கேட்டு அமுதா செல்லமாக இளங்கோவின் கையில் தட்டினாள்.

தொடர்ந்து இளங்கோ, “நைட்டில்லாம் கிழிஞ்சு, குளிக்காம, ஒரு பல்லு கூட விளக்காம, தலைமுடில்லாம் கலைஞ்சு போய் அவள அந்தக் கோலத்துல பாத்தப்ப நெஞ்செல்லாம் நடுங்கிடுச்சு சார். திருச்சில என் வக்கீல் ஃப்ரண்ட்ஸ்ங்கள்ல்லாம் இருக்காங்க. அவங்க மூலமா ஏற்கனவே ரெஜிஸ்டர் ஆபிஸ்ல சொல்லி வச்சிட்டோம். அங்க கல்யாணம் பண்ணிட்டு நேரா கன்டோன்மென்ட் போலிஸ் ஸ்டேசன் போய் பாதுகாப்பு கேட்டு கம்ப்ளைன்ட் கொடுத்தோம். எல்லாரையும் வர வச்சாங்க. அமுதாவோட அம்மாப்பா, “இனிமே இவ என் பொண்ணே இல்ல. அவளுக்கு எங்க சொத்துல எந்தப் பங்கும் கிடையாது. இனிமே இவ வாழ்க்கைல தலையிடமாட்டோம்"ன்னு எழுதிக் கொடுத்துட்டு போய்ட்டாங்க… அப்புறம் ரெண்டு குழந்தைல்லாம் பிறந்த பிறகு இப்பதான் சமாதானமாயிருக்காங்க…” என்றான் இளங்கோ.

“என்னை பிச்சைக்காரி கோலத்துல பாத்தேன்னு சொன்னாருல்ல? இப்ப என்னை மகாராணி மாதிரி வச்சிருக்காரு…” என்ற அமுதா  இளங்கோவின் கைகளை கோர்த்துக்கொண்டாள்.

“உங்களோட ‘இதயத்தை திருடுகிறாய்’ புத்தகத்தை கொடுத்துதான் சார் என் லவ்வ ப்ரப்போஸ் பண்ணேன். அதான் உங்கள ரொம்ப நாளா பாக்கணும்ன்னு ஆசை. இப்பத்தான் முடிஞ்சுது…” என்று இளங்கோ கூற… நான் அவர்களை உற்றுப் பார்த்தேன். அமுதாவின் அந்த மகத்தான காதலுக்கு முன்பாக எனது சிறுகதைகள் எல்லாம்  வெறும் தூசியாகத் தோன்றியது.

“எப்பயாச்சும் எங்க லவ்வப் பத்தி எழுதுங்க சார்…” என்றான் இளங்கோ.

எழுதிவிட்டேன்(மேலே உள்ள சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் ஊர்களும் மாற்றப்பட்டுள்ளது).

       ஒரு பெண், இத்தனை ஆண்டு காலம் வளர்த்த பெற்றோரை விட்டுவிட்டு வெளியேறும் முடிவெடுப்பது மிக மிக உணர்வுமயமான விஷயம். அவ்வாறு வரும் பெண்ணுடன் சந்தோஷத்துடன் வாழும்போதே அந்தக் காதல் முழுமையடைகிறது. 

இவ்வாறு தனக்காக வீட்டை விட்டு வெளியேறி வந்த ஒரு பெண்ணின் மீதான ஆணின் ஆழமான காதலை வெளிப்படுத்தும் விதமாக தமிழில் வெளிவந்த பாடல்… ‘உனக்கென இருப்பேன்’. இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு மகத்தான அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த ‘காதல்’ படத்தில் ஜோஸ்வா ஶ்ரீதரின் மனதை உருக்கும் இசையில் இந்த காதல் சோகப் பாடல் உருவானது.

       என்னிடம் தமிழின் மிகச்சிறந்த 25 படங்களைப் பட்டியலிடச்சொன்னால் அந்தப் பட்டியலில் ‘காதல்’ திரைப்படமும் இடம்பெறும். அப்படம் என்னை எந்த அளவிற்கு பாதித்ததென்றால், அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் காதலர்களை சென்னையில் கண்டுபிடித்து அழைத்து வரும் சந்தியாவின் குடும்பத்தினர், அவர்களை தோப்புக்கு அழைத்து வரும்போது ஏதோ மிகவும் விபரீதமாக நடக்கப்போகிறது என்பதை யூகித்துவிட்ட நான் தியேட்டரிலிருந்து வெளியே வந்து வராண்டாவில் நடமாடினேன். அப்போதும் தோப்பில் சந்தியா அலறிய சத்தம் பெரும் அவலத்தின் குரலாக காதில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நா.முத்துக்குமார்
'காதல் பிசாசே.. காதல் பிசாசே..' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 14

இப்படத்தில் மதுரையிலிருந்து சென்னை ஓடி வரும் பரத்தும் சந்தியாவும் இரவு தங்க இடமின்றி, தொடர்ந்து செகன்ட் ஷோ வரை சினிமாப் பார்த்துவிட்டு பின்னர் சென்னையிலிருந்து திண்டிவனத்திற்கு நள்ளிரவில் பஸ்சிலேயே சென்றுவிட்டு, பிறகு அங்கிருந்து சென்னைக்கு அதே இரவில் திரும்பி வருவர். அந்தக் காட்சியில் பாடல் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தவுடன் பாலாஜி சக்திவேல் கவிஞர் நா. முத்துக்குமாரிடம், “சென்னையிலிருந்து திண்டிவனம் வரைச் சென்றுவிட்டு சென்னை திரும்பும் காதலர்களின் பயணம்தான் பாடல். ஆனால் இப்பாடலில் இப்படத்தின் முழு அடர்த்தியும் இருக்கவேண்டும். மேலும் இந்தப் பாடலில் மோனாலிசாவின் புன்னகை போல் ஒரு துன்பம் கலந்த இன்பம் இருக்கவேண்டும்” என்று கூறிய பாலாஜி சக்திவேல் இப்பாடலைப் படமாக்குவதற்கு முன்பு தானும், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனும் நள்ளிரவில் சென்னையிலிருந்து  திண்டிவனம் வரை பஸ்சில் சென்றுவிட்டு திரும்ப உள்ளதாகவும், அந்தப் பயணத்தில் முத்துக்குமாரும் வரவேண்டும் என்று கூறினார். ஆனால் அவர்கள் சென்ற நாளில் வேறு பணி இருந்ததால் முத்துக்குமாருக்கு அவர்களுடன் செல்ல முடியவில்லை. இருப்பினும் பாலாஜி சக்திவேல், முத்துக்குமார் ஒரு முறை இரவில் திண்டிவனம் சென்று வந்த பிறகுதான் அந்தப் பாடலை எழுதியாகவேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

எனவே கவிஞர். நா. முத்துக்குமார் நள்ளிரவில் சென்னையிலிருந்து திண்டிவனத்திற்கு பஸ் ஏறினார். ஜோஸ்வா ஶ்ரீதர் அமைத்திருந்த மெட்டை மனத்திற்குள் இசைத்தபடி பயணித்த முத்துக்குமார் பிறகு அதே பஸ்சிலேயே சென்னை திரும்பினார். அப்போது தேநீருக்காக ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினார்கள். பேருந்தை விட்டு விலகி நடந்த முத்துக்குமார் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து ஒரு தனிமையான இடத்தில் அமர்ந்து பாடலைப் பற்றி சிந்தித்தார். அப்போது பௌர்ணமிக்கு பிந்தைய தேய்பிறை காலம் என்பதால் வானில் நிலா இருந்தும் இல்லாமல் இருந்தது. அருகில் இருந்த புளியமரங்களில் வெண்புள்ளிகளாக மின்மினிப் பூச்சிகள் ஒளி வீசிக்கொண்டிருந்தது. இதனைப் பார்த்த முத்துக்குமாரின் மனதில், “நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை…. மின்மினியும் ஒளி கொடுக்கும்…” என்ற வரிகள் தோன்றியது. அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தைப் பார்த்த முத்துக்குமாருக்கு சிறுவயதில் ஊரில் வயற்காடுகளின் மின்சாரக் கம்பங்களின் மீது பறவைகள் பயமின்றி கூடு கட்டுவதைப் பார்த்த காட்சி மனதில் தோன்ற... ஊரை விட்டு ஓடிவந்த பரத்தும் சந்தியாவும் அந்தப் பறவைகளாக முத்துக்குமாரின் மனதில் தோன்ற… ”மின்சாரக் கம்பிகள் மீதும் மைனாக்கள் கூடு கட்டும்…” என்ற வரிகள் தோன்றியது.

       அவ்வளவுதான்... முத்துக்குமாரின் மனதில் வரிகள் பெருக்கெடுத்து ஓட… இன்றும் என்னை மனம் கலங்க வைக்கும் ‘உனக்கென இருப்பேன்’ பாடல் பிறந்தது.

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்

கண்மணியே கண்மணியே
அழுவதேன் கண்மணியே
வழித்துணை நான் இருக்க

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்

கண்ணிர் துளிகளை
கண்கள்தாங்கும் கண்மணி
காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா

கல்லறை மீதுதான்
பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து
பூச்சிகள் பார்த்திடுமா

மின்சார கம்பிகள்
மீது மைனாக்கள் கூடுகட்டும்
நம் காதல் தடைகளை தாண்டும்

வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்


நிலவொளியை மட்டும்
நம்பி இலை எல்லாம்
வாழ்வதில்லை மின்மினியும் ஒளிகொடுக்கும்

தந்தையும் தாயயும்
தாண்டிவந்தாய் தோழியே
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்

தோளிலே நீயுமே சாயும்
போது எதிர்வரும் துயரங்கள்
அனைத்தையும் நான் எதிா்ப்பேன்

வெந்நீரில் நீ குளிக்க
விறகாகி தீ குளிப்பேன்
உதிரத்தில் உன்னை கலப்பேன்

விழிமூடும் போதும் உன்னை
பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்

நான் என்றால் நானே இல்லை
நீ தானே நானாய் ஆனேன்
நீ அழுதால் நான் துடிப்பேன்

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்

கண்மணியே கண்மணியே
அழுவதேன் கண்மணியே
வழித்துணை நான் இருக்க

நா.முத்துக்குமார்
நித்தம் நித்தம் நெல்லு சோறு - நினைவே ஒரு சங்கீதம் | Epi 17

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com