அந்த நாள் ஞாபகம் : நட்புக்கால நினைவுகள்
நான்கு வாரங்களுக்கு முந்தைய அந்த வெள்ளிக்கிழமை மாலை, என்னால் மறக்க முடியாத வெள்ளிக்கிழமைகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
வயது முதுமை காரணமாக, பல்வேறு உபாதைகளால் கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் என் அம்மாவிற்கு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து, மூக்கில் ரத்தம் வழிந்த காரணத்தால் சென்னை, அண்ணா நகரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர் த்திருந்தோம். தொடர்ந்து ஐந்து நாட்களாக மருத்துவமனையில் இருந்தார்.
திடீரென்று அந்த வெள்ளிக்கிழமை மாலை, அவர் ஹைப்பர் ஆக்டிவாக செயல்பட ஆரம்பித்தார். அவரால் தனியாக நடக்கவே இயலாது. அட்டெண்டர்தான் அவர் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். தானாகவே படுக்கையில் இருந்து எழுந்திருக்க கூட முடியாது. நாங்கள்தான் தூக்கி விடுவோம்.
ஆனால் அன்று மாலை திடீரென்று, "நான் டாய்லெட் போகணும்..." என்று கட்டிலிலிருந்து இறங்கப் பார்த்தார். நான் அவரைத் தடுத்து நிறுத்த... "நானே போய்டுவேன்..." என்று என் கையை அவர் ஆவேசமாக உதறி விட்டார். நான் தடுக்க தடுக்க... மீண்டும் மீண்டும் பிடிவாதமாக கட்டிலிலிருந்து அதிவேகமாக இறங்க முயற்சித்தார். எவ்வளவோ முயற்சித்தும் என்னால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.
என்னிடம் அவர் மிகவும் சத்தமாக, "ஏன்டா என்ன தடுக்கிற...' என்று கத்த ஆரம்பிக்க... நர்சுகள்... வார்டு பாய்கள்... என்று பலரும் கூடிவிட்டனர். அனைவரையும் பார்த்து, "இவன் என்ன கீழே இறங்க விடமாட்டேங்குறான்..." என்று மீண்டும் இறங்க முயற்சித்தார். வேறு வழியின்றி நான் மிகவும் கடினமான குரலில் அதட்டலாக, "இறங்கக்கூடாதுன்னா இறங்கக்கூடாதுதான். உட்காருங்க..." என்று அவரை அழுத்தமாக பிடித்து படுக்கையில் சாய்த்தேன். அவ்வளவுதான். அவர் மிகவும் ஆவேசத்துடன் சத்தமான குரலில் கோபமாக பேச ஆரம்பித்தார்.
"என்னடா... அதிகாரம் பண்றியா? அவர் இருக்கிற வரைக்கும் அவரு என்ன அதிகாரம் பண்ணாரு (நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட என் அப்பாவைக் குறிப்பிடுகிறார்)... இப்ப அவர் போன உடனே நீங்க அதிகாரம் பண்றீங்களா? அதெல்லாம் என்கிட்ட நடக்காது' என்றவுடன் நான் அமைதியாகி விட்டேன்.
அடுத்த வினாடியே என் அம்மா சட்டென்று கட்டிலிலிருந்து காலை கீழே வைத்து நடக்க முடியாமல் அப்படியே கீழே சரிய... நான் தாங்கிப் பிடித்துத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்தேன்.
அப்போது அங்கு வந்த டியூட்டி டாக்டரிடம் நான், "ரொம்ப வீக்கா இருந்தாங்க. சத்தமா பேசக்கூட மாட்டாங்க. இப்ப எப்படி சார் திடீர்னு இவ்ளோ ஃபோர்ஸா இருக்காங்க..." என்றேன்.
அதற்கு அவர், ''உங்கள் அம்மாவிற்கு
சோடியம் உப்பின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது.
அதுக்கு ஊசி போட்டுக் கொண்டிருக்கிறோம். சோடியம் அளவு நார்மலுக்கு வந்தவுடன் இரண்டு நாளில் சரியாகிவிடும். அதுவரைக்கும் இப்படித்தான் இருப்பார்கள். இதற்கு ஹைப்பர் ஆக்டிவ் டெரிலியம் என்று பெயர். நார்மலுக்கு வந்த உடனே இப்ப நடந்ததெல்லாம் அவங்களுக்கு ஞாபகத்துல கூட இருக்காது..." என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அதற்குப் பிறகும் கட்டிலில் இருந்து இறங்குவேன் என்ற என் அம்மாவின் போராட்டம் தொடர்ந்தது. அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் திணறி விட்டேன். நெடுநேரம் கழித்து, இரவு 12 மணிக்கு மேல் டாக்டர் இன்ஜெக்ஷன்... இரண்டு மாத்திரைகள்... எல்லாம் கொடுத்த பிறகுதான் அமைதியாக உறங்க ஆரம்பித்தார். எனக்கு மிகவும் களைப்பாகவும் கவலையாகவும் இருந்தது.
தேநீர் அருந்தலாம் என்று சாலைக்கு வந்தேன். அண்ணாநகர் பிரதான சாலை இரவு 12 மணிக்கும் இளைஞர்களால் பிஸியாக இருந்தது. ராம்ஸ் டீ கடையில் அந்த நேரத்தில் அவ்வளவு கும்பல். எதிரே கோரா ஃபுட் ஸ்ட்ரீட்டில் எந்தக் கவலையும் அற்று சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்த இளைஞர்களை பார்த்தபொழுது ஒரு சின்ன ஏக்கமாக இருந்தது.
சரியாக அதே சமயத்தில் மும்பையிலிருந்து எனது நண்பன் வினோத் போன் செய்தான். நான் மொபைலை ஆன் செய்து, "என்னடா... இந்நேரத்தில போன் பண்றே..." என்ற நான் அம்மா விஷயம் குறித்து எதுவும் சொல்லிக் கொள்ளாமல் சாதாரணமாக பேச ஆரம்பித்தேன்.
வினோத், "என்னமோ மாப்ள.. ஒரு மாதிரி மனசே சரியில்ல... அதான் ரெண்டு பீர எடுத்துகிட்டு வந்து, எங்க அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்ல இருக்கிற என் கார்ல உட்கார்ந்து குடிச்சிட்டுருக்கேன். யார்கிட்டயாவது பேசணும் போல இருந்தது. அதான் உனக்கு அடிச்சேன்.'' என்றான்.
"என்னடா பிரச்னை?'' என்றேன்.
"எனக்கு மூணும் பசங்களா போய்ட்டாங்களா
(வினோத்துக்கு முதலில் ஒரு பையன் பிறந்தான். இரண்டாவது இரட்டைக் குழந்தைகளாக இரண்டு பசங்கள்)? டீன் ஏஜ் வயசில ஒவ்வொரு பயலும் டெய்லி ஒரு பிரச்னை கொண்டு வாரான்" என்றான்.
''எல்லாப் பசங்களும் அப்படிதான்டா... நம்ப பண்ணாததா?'' என்றேன்.
"உனக்கு ஒரு பையன்தான்டா... அதனால ஒரு பிரச்னைதான். எனக்கு மூணு பசங்க. அதனால மூணு பிரச்னை...''என்றான்.
இதைக் கேட்டவுடன் நான் அசந்து விட்டேன். ஏனெனில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆனந்த விகடனில் வெளிவந்த எனது ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, 80 மற்றும் 90களில் பிரபலமாக இருந்த ஒரு திரைப்பட பாடலாசிரியர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி பேசினார். அப்போது அவர், "உங்களுக்கு எத்தனை பசங்க?'' என்று கேட்டார். "ஒரு பையன்..." என்றேன். அதற்கு அவர், "அப்பன்னா உங்களுக்கு ஒரு பிரச்னைதான். எனக்கு நாலு பிள்ளைங்க . அதனால நாலு பிரச்னை" என்று கூறியது நினைவிற்கு வந்தது.
அதை நான் வினோத்திடம் சொன்ன பொழுது அவன் சத்தமாக சிரித்தான்.
தொடர்ந்து வினோத், ''மச்சான்... இவ்ளோ நாளா குடும்பம்... காசு சம்பாதிக்கிறது... அது... இதுன்னு ஓடிக்கிட்டே இருந்தேன். ஃபிரெண்ட்ஸ் பத்தி எல்லாம் நினைச்சு பார்க்க கூட நேரமே கிடையாது. இப்ப... இந்த வயசுல யோசிச்சு பாக்குறப்ப... காசு பணத்தில் எல்லாம் நிம்மதி இல்லை மச்சான்...'' என்று 50 வயதிலேயே 70 வயது ஆள் போல் பேசினான்.
தொடர்ந்து நான், ''மாப்ள... எப்போதும் வாழ்க்கை ஒரே மாதிரி இருக்காதுடா. எப்போதுமே சந்தோஷமா ஒருத்தன் வாழ்ந்துட்டு இருக்க முடியாது. சந்தோஷம்... துக்கம்... இரண்டும் மாறி மாறி வரும். சந்தோஷம் எப்படி தற்காலிகமோ, அதே மாதிரி துக்கமும் தற்காலிகம்னு நினைச்சுக்கணும்'' என்றேன் நான் 80 வயது கிழவன் போல்.
அதற்கு அவன், 'ஆனா நம்ம திருச்சி பிஷப் ஹீபர்ல பிஜிடிசிஏ படிச்சிட்டுருந்தப்ப சந்தோஷமா மட்டும்தான்டா இருந்தோம். இப்ப கூட நினைக்க நினைக்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு" என்றான்.
தொடர்ந்து அவன், "உனக்கு ஞாபகம் இருக்கா மச்சான்? திருச்சில நம்ம ஒரு தடவை தண்ணி அடிச்சிட்டு, பாலக்கரை பிரபாத் தியேட்டர்லருந்து உறையூர் மேன்ஷன் வரைக்கும், நம்ம குரூப் 5 பேரும் பேக்லயே நடந்து வரணும்னு போட்டி வச்சுக்கிட்டு நடந்து வந்தோம்" என்றவுடன் அந்த சம்பவம் என் நினைவுக்கு வந்து விட்டது.
பாலக்கரைக்கும், உறையூருக்கும் இடையே ஏறத்தாழ மூன்று நான்கு கிலோமீட்டர்கள் இருக்கும். இரவு 12 மணிக்கு நாங்கள் ஐந்து பேரும் பேக்கிலேயே நடந்து வந்ததை சாலையில் சென்ற பலரும் வேடிக்கை பார்த்தார்கள். சிரித்துக் கொண்டார்கள். குடிகாரர்கள் கூத்தடிக்கிறார்கள் என்று அவர்களுக்குள் பேசியிருப்பார்கள். ஆனால் அது பற்றி எல்லாம் எந்த கவலையும் படாமல் சிரித்து சிரித்து பேசியபடி வந்து கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்திற்கு மேல் தொடர்ந்து பேக்கிலேயே நடக்க முடியாமல் மூன்று பேர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். ஆனால் நானும் வினோத்தும் மட்டும் மிக கவனமாக, கொஞ்சம் கூட அசராமல் உறையூர் மேன்ஷன் வரை பேக்கிலேயே நடந்து வந்தோம். மேன்ஷனுக்குள் நுழைந்து படிக்கட்டுகளிலும் பேக்கிலேயே ஏறி அறை வாசலை அடைந்தவுடன் வினோத் திரும்பி நேராக நின்று கொண்டு, 'வி போத் ஆர் வின்..." என்றான். ஆனால் நான் நேராக திரும்பாமல், "இல்ல மாப்ள... நான் தான் வின்... இன்னும் நம்ம ரூமத் திறந்து உள்ள போகல..." என்ற நான் ரூம் கதவை திறந்தவுடன் பேக்கிலேயே சென்று அப்படியே பேக்கிலேயே கட்டிலில் படுத்துக் கொண்டேன்.
அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து சிரித்த நான் தொடர்ந்து, "சோமு எங்க வீட்டுக்கு வந்தப்ப என்ன பண்ணான்னு உனக்கு ஞாபகம் இருக்காடா?" என்றேன்.
அன்று நான் சோமுவிற்கு என் அம்மாவை அறிமுகப்படுத்திய
வுடன் அவன் பணிவாக கைகளை குவித்து, "வணக்கம்மா..." என்றான். பொதுவாக அந்த வயதில், அப்படி எல்லாம் வணக்கம் சொல்லிக் கொள்ளும் பழக்கம் எங்களுக்கு இல்லை. எனவே நான் கிண்டலாக, "என்னடா சும்மா வணக்கம் சொல்ற... கால்ல விழுந்து கும்பிடுறா..." என்று விளையாட்டுக்காக சொன்னேன். அடுத்த நொடியே சோமு பொத்தென்று என் அம்மாவின் காலில் வேகமாக விழ... என் அம்மா அரண்டு போய் இரண்டு அடி பின்வாங்கி விட்டார்.
தொடர்ந்து வினோத் மொபைலில்,
''ஜாஸ்மின் ஞாபகம் இருக்காடா? அஸ்ஸாம்லருந்து வந்து படிச்சுதே...' என்றவுடன், முட்டை கண்ணுடன் கண்ணாடி போட்டுக்கொண்டு, ஒரு மாதிரியாக அடித்தொண்டையில் பேசும் ஜாஸ்மின் ஞாபகத்திற்கு வந்தவுடன் பீர் அடிக்காமலேயே எனக்கு சில்லிட்டு போனது.
தொடர்ந்து நாங்கள் பேசப் பேச... அந்த நாள் ஞாபகங்கள் நீண்டு கொண்டே சென்றது. எனது மருத்துவமனை கவலைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, ஏன் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கக் கூடாது என்று தோன்றியது.
தீவிரமாக யோசித்துப் பார்க்கும்போது எதை வாழ்க்கையின் வெற்றி என்று இந்த சமூகம் கருதுகிறது? நல்ல படிப்பு... நல்ல வேலை
... நல்ல சம்பாத்தியம்... குடும்பம்... குழந்தைகள். இவை எல்லாமே ஒரு கட்டத்தில் மனிதனுக்கு சுமையாகவும் மாறிவிடுகிறது. ஆனால் அதை நாம் உணர்ந்து கொள்வதற்குள் முக்கால்வாசி வாழ்க்கையைத் தாண்டி விடுகிறோம். முக்கால்வாசி வாழ்க்கைக்கு பிறகு, நண்பர்களுடன் பழைய கதையை பேசி அந்த நினைவுகளின் நிழலில் சற்றே இளைப்பாறிவிட்டு, மீண்டும் நிகழ்கால கவலைகளுக்குள் வந்து விடுகிறோம்.
இவ்வாறு நண்பனுடன் அந்த கால நினைவுகளைப் பற்றி பேசும் அற்புதமான பாடல், 'உயர்ந்த மனிதன்' திரைப்படத்தில் இடம்பெற்ற "அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... நண்பனே... நண்பனே... நண்பனே..." . அப்படத்தில் சிவாஜிக்கு வயதாகி, பல்வேறு குடும்ப நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் சிவாஜி தனது நண்பன் மேஜர் சுந்தர்ராஜனிடம் பாடுவது போன்ற பாடல் அது.
நிகழ்கால வாழ்க்கை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மனிதர்களுடன் அந்தப் பாடல் அந்தரங்கமாக உரையாடியது. கவலையற்று வாழ்ந்த ஒரு பொற்காலத்தின் பொழுதுகளுக்கு தமிழர்களை இட்டுச் சென்றது. கவலையின் தனிமையில் அந்தப் பாடலை கேட்கும்போது ஒரு நண்பனுடன் மனம் விட்டு பேசிய திருப்தி கிடைக்கிறது.
ஏனெனில் அந்தப் பாடலில் வித்தியாசமாக நடுநடுவே நண்பனுடன் பேசுவது போல் வசனமும் இருக்கும்.
எப்படி இந்த ஐடியா அப்படத்தின் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதனுக்கு தோன்றியது?
இப்பாடல் உருவான விதம் குறித்து 'உயர்ந்த மனிதன்' படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் குமரன் அவர்கள், "நாங்கள் எம் எஸ் வி அவர்களிடம் ஏதேனும் பாட்டை பற்றி விவாதித்தாலே அவர் இதில் புதுமையாக என்ன செய்யலாம்?" என்றுதான் யோசிப்பார் . அவ்வாறு புதுமையாக யோசிக்கும் போது எம் எஸ் வி எப்போதும், "இந்த பாட்டுல என்ன விவகாரம் பண்ணலாம்?" என்றுதான் கேட்பார். அப்போது யார் என்ன யோசனை சொன்னாலும், "தான் ஒரு பெரிய மியூசிக் டைரக்டர். இவன் என்ன எனக்கு சொல்றது
..." என்றெல்லாம் ஈகோ பார்க்க மாட்டார். அது நன்றாக இருந்தால் உடனே ஏற்றுக் கொள்வார். உயர்ந்த மனிதன் படத்தில் அந்த பாடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து எனக்கு ஏற்கனவே ஒரு யோசனை இருந்தது. அப்போது புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ரெக்ஸ் ஹாரிசன் கதாநாயகனாக நடித்த ஒரு ஆங்கிலப் படம் சென்னையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. நான் அந்தப் படத்தை பார்த்தேன். அந்தப் படத்தில், ஒரு பாடல் காட்சியில் ஹாரிசன் ஒரு கோல்ப் கிரவுண்டில் கையில் வாக்கிங் ஸ்டிக்கை ஸ்டைலாக சுழற்றிக் கொண்டே பாட்டு பாடுவார். அந்த பாட்டுக்கு நடுநடுவே வசனங்களும் வரும். இதை இன்ஸ்பிரேஷனாக கொண்டு உயர்ந்த மனிதனில் அந்த பாடலை அமைக்கலாம் என்று நான் விரும்பினேன். எனவே நான் எம்.எஸ்.வியிடம், "அந்தப் பாட்டுக்கு மியூசிக் போடுவதற்கு முன்பு இந்த ஆங்கிலப் படத்தை பார்த்து விடலாம்" என்று அவரை அழைத்துக் கொண்டு சென்று அந்தப் படத்தை காண்பித்தேன். அதை பார்த்த எம் எஸ் வி அந்த பாடலின் இன்ஸ்பிரேஷனில் தனது படைப்புத்திறனை ஓடவிட்டார். எங்கு பாடல் வரலாம்? எங்கு வசனம்? என்பதை எல்லாம் அவரே முடிவு செய்தார். முடிவு செய்துவிட்டு கவிஞர் வாலியிடம் இதற்கு பாடல் எழுதுமாறு கூற.. என்றும் நம் மனதில் நிற்கும் அந்த அற்புதமான பாடலை வாலி விரைவில் எழுதித் தந்தார்" என்று கூறியுள்ளார்.
'நினைவே ஒரு சங்கீதம்' தொடரில் இந்தப் பாடல் குறித்து எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தவுடன், எனது அம்மாவிடம் 'உயர்ந்த மனிதன்' படத்தைப் பற்றி பேசினேன். ஏனெனில் என் அம்மாவிற்கு நிறைய புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளதால், அந்த கால அரசியல், சினிமா விஷயங்கள் குறித்து ஏராளமாக தெரிந்து வைத்திருப்பார்.
நான் அம்மாவிடம், "நீங்க உயர்ந்த மனிதன் படம் பார்த்திருக்கீங்களா?" என்று கேட்டதுதான் தாமதம். உடனே என் அம்மா, "ம்... அந்த படம் சிவாஜிக்கு 125 வது படம். சிவாஜிக்கும் அசோகனுக்கும் பிடிச்சிக்காதாம். ஆனால் அசோகன் ஏவிஎம் சரவணனுக்கு ரொம்ப குளோஸ் ஃப்ரெண்ட். அதனால அந்த படத்துல அசோகனுக்கு ஒரு ரோல் கொடுத்திருந்தார். ஆனா அசோகன் கூட சேர்ந்து சிவாஜி நடிப்பாரான்னு ஒரு சந்தேகம். எதுக்கும் சிவாஜிகிட்டயே கேட்டுடுவோம்ன்னு சிவாஜியிடம் விஷயத்தை சொல்லியிருக்காங்க. அதுக்கு சிவாஜி, "அதனால என்ன? செட்டியார் ஆசைப்படறார்"னு நடிச்சி கொடுத்தாராம். அந்தப் படத்துல ஒரு அருமையான பாட்டு இருக்கு...'' என்ற என் அம்மா,
''அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே..." என்று பாடலாகவே பாடி காட்டியவர் அப்படியே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார். வருங்காலத்தில் இப்படி நோயுற்று படுக்கையில் படுத்திருப்போம் என்ற எண்ணமெல்லாம் துளி கூட இல்லாமல், அந்தப் படத்தை பார்த்த பழைய ஞாபகங்களில் அவர் ஆழ்ந்திருக்கக்கூடும்.
அந்த நாள் ஞாபகம்...
நெஞ்சிலே வந்ததே...
நண்பனே... நண்பனே...
நண்பனே
இந்த நாள் அன்று போல்
இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே?
பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறு எதைக் கண்டோம்?
புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே
நித்தமும் நாடகம்
நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே நண்பனே
பள்ளியை விட்டதும்
பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது
கவலையும் வந்தது
பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே
அமைதி எங்கே
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே நண்பனே...
அவனவன் நெஞ்சிலே
ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும்
ஆசையின் விளைவுகள்
பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன்
உலகிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
தவறுகள் செய்தவன்
எவனுமே தவிக்கிறான்
அழுகிறான்...
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல்
இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே