TV Serial
TV Serial timepass
சினிமா

TV Serial : 'எனக்கு விருது வேணும்!' - அடம்பிடித்த சீரியல் ஹீரோ - சிறிய இடைவேளைக்குப் பிறகு Epi 12

அய்யனார் ராஜன்

‘யாருப்பா அந்த நாச்சியப்பன்’னு கேக்கற அளவுக்கு இப்பெல்லாம் அடிக்கடி செய்திகளில் அடிபடுகிற ஒரு பெயராகி விட்டது ‘நாச்சியப்பன் பாத்திரக்கடை’. நடிகர் வடிவேலுவின் எவர்கிரீன் நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்று, ’கோவில்’ படத்தில் வரும் அந்தக் காட்சி.

சில தினங்களுக்கு முன் நடந்தது, அந்த டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் சிறந்தவை மற்றும் சிறந்த நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி. பொதுவாகவே எந்த விருது விழா என்றாலும் சிலருக்கு அதிருப்தி எழுவது வாடிக்கைதான். இந்த விருது விழா மட்டும் விதிவிலக்காகுமா? எதிர்பார்த்தது போலவே அந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் டாப் டி.ஆர்.பி சீரியலின் ஹீரோவுக்கு பெரிய அதிருப்தி.

தனக்கு விருது இல்லை எனத் தெரிந்து கொண்டதாலோ என்னவோ விழா நடந்த அன்று அந்த இடத்துக்கே வரவில்லை என்கிறார்கள். மேலும் மறுநாளே சோஷியல் மீடியாவில் ‘வருத்தமாத்தான் இருக்கு. ஆனா இதை நான் சொல்லியே ஆகணும்.

சீரியலில் அடுத்த 15 நாட்களுக்குத்தான் நான் இருப்பேன். காரணங்கள் பல இருக்கு. கொஞ்சம் பர்சனல் விஷயமும் கூட’ என அறிவிக்கவும் செய்து விட்டார். ‘இதென்ன வம்பா இருக்கு’ என சேனல் தரப்பிலிருந்து ஹீரோவிடம் பேசியிருக்கிறார்கள். மனிதர் குமுறித் தீர்த்து விட்டாராம்.

‘அதான், சீரியல் ஹிட்டா போயிட்டிருக்கே, உங்களுக்கு விருது இல்லையா’னு என் ரசிகர்கள், சொந்தபந்தங்கள், ஏன் வீட்டுல இருக்கிறவங்களே கேக்கறாங்க. என்னால பதில் சொல்ல முடியலை. அவமானமா இருக்கு. ரெண்டு நாளைக்கு மொபைலை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிட்டேன். இப்படியொரு நிலைமையில என்னைத் தள்ளி விட்டுட்டீங்க. எனக்கு ஏதாவதொரு அங்கீகாரம் நீங்க கொடுத்திருக்க வேண்டாமா? என ஏகத்துக்கும் புலம்பித் தள்ளிவிட்டாராம்.

என்னென்னவோ பேசி சமாதானம் செய்து பார்த்திருக்கிறது சேனல். ஆனால், ‘ஆத்தா வையும்..சந்தைக்குப் போகணும்..காசு கொடு’ என 16 வயதினிலே’ படத்தில் கமல் சொல்லுவாரே அந்த டைப்பில் ’எனக்கு நீங்க ஏதாவது செய்தே ஆகணும்’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாராம்.

சமாதானம் செய்யச் சென்றவர்களோ, ’என்னடா இது பெரிய தொல்லையா இருக்கே’ என, தலைமையிடம் விவகாரத்தைக் கொண்டு போய், ‘மிச்சமிருக்கிற ஷீல்டுல ஒண்ணைக் கொடுத்துடலாமா’ எனக் கேட்டிருக்கிறார்கள்.

ஹிட் சீரியல் இல்லையா, அதனாலோ என்னவோ, ‘என்னவோ பண்ணித் தொலைங்கப்பா’ எனச் சொல்லி விட்டதாம் தலைமை. பிறகென்ன, அலுவலகத்தில் மிச்சமிருந்த ஷீல்டுகளில் ஒன்றை எடுத்து பளபளவெனத் துடைத்து, ஹீரோவின் வீட்டுக்கே கொண்டு போய் கொடுத்திருக்கிறார்கள். ஷீல்டைக் கண்ணில் பார்த்த பிறகே அமைதிநிலைக்கு வந்திருக்கிறது ஹீரோவின் மனசு.

மறுநாளே,’பத்து நாள் முன்னாடி உணர்ச்சிவசப்பட்டு, இனி நடிக்க மாட்டேன், சீரியலை விட்டுப் போகப்போறேன்’னு சொல்லிட்டேன். இப்ப அந்த பர்சனல் காரணங்கள் எல்லாம் சரியாகிடுச்சு. நான் கேட்ட சில கேள்விகளுக்குப் பதில் கிடைச்சிடுச்சு. அதனால இனி முழு மனசோட தொடர்ந்து நடிக்கப் போறேன்’ என அடுத்த போஸ்ட்டையும் போட்டு விட்டார்.

‘இப்படியும் ஒரு கேரக்டரா, எங்க இருந்துய்யா கூட்டி வர்றீங்க, இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம்’ எனத் தலையிலடித்துக் கொண்டார்களாம், மேற்படி சம்பவத்தில் ஏ டூ இசட் உடனிருந்த சிலர். இத்தோடு இந்த விவகாரம் முடிந்ததா என்றால், இங்குதான் இன்னொரு ட்விஸ்ட்.

அடம் பிடித்து விருது வாங்கி விட்டார் இந்த ஹீரோ என்கிற விஷயம் லேசாக வெளியில் கசிய, ‘என்ன கொடுமைங்க, இது’ இப்படியெல்லாமா நடக்கும்; அப்படின்னா நாமும் அடுத்த வருஷம் கேட்டு வாங்கிட வேண்டியதுதான்’ என ஆற்றாமையும் ஆதங்கமுமாகப் புலம்பத் தொடங்கியிருக்கின்றனர், மற்ற சில ஆர்ட்டிஸ்டுகள்.

’போங்கப்பா நீங்களும் உங்க விருதுகளும்’ங்கிறீங்களா? ’இந்த தடவை நமக்குக் கிடைக்க ‘பாக்கியம்’ இல்லைனு சாதாரணமா எடுத்துட்டுப் போகிறவங்க இருக்கிற அதே சின்னத்திரையிலதான், ‘கோபி’ச்சுட்டுப் போய் அடம்பிடிச்சு, ‘நாச்சியப்பன் பாத்திரக்கடை’ விருதுன்னாலும் பரவால்ல’னு கேட்டு வாங்குறவங்களும் இருக்காங்க..என்ன சொல்வது?

அடுத்த வாரம் பார்க்கலாம்.