H.Vinoth timepass
சினிமா

Thunivu : என்னது டைரக்டர் H.Vinoth-கிட்ட கார் இல்லையா?

'அபிஷேக்கைப் பார்த்தால் நானே ஏன் இப்படினு கேட்கப்போறேன்... கார் அலர்ஜிலாம் இல்லை. நான் இயற்கை ஆர்வலன். ஆனால்..

Saran R

இயக்கிய 5 படங்களுமே ஹிட். அதில் அஜித்குமாரோடு 3 படங்கள். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அந்த 3 படங்கள் என டைரக்டர் அ.வினோத்தின் கேரியர் கிராஃப் எங்கேயோ போய்விட்டது. பெரும்பாலும் பிரிண்டிங் மீடியாவை மட்டுமே அதிகம் நேசிக்கும் வினோத் இயல்பில் கொஞ்சம் கூச்ச சுபாவி. ஆனால், இப்போ கதையே வேறு கதை! 

'துணிவு' புரொமோஷன்களில் சிங்கிள் ஆளாய் ஸ்லாட் கொடுத்து தமிழ்நாட்டின் சிறிதும் பெரிதுமான சேனல்கள், யூ-ட்யூப் தளங்களுக்கு பேட்டியை அள்ளி வாரி இறைத்தார். அந்த பேட்டிகளில் மிக இயல்பாக அவர் பேசியது வைரல் ஆனதென்றால் இன்னொரு பக்கம் அவரது எளிமையான தோற்றமும் பேசுபொருளானது. பிரபல யூ-ட்யூபர் அபிஷேக் ஒரு செய்தியைக் கொளுத்திப்போட, அச்சர்யத்தில் எல்லோரும் விழியை விரித்தார்கள். 

ஆமாம் பாஸ். இன்னும் வினோத் கார் வாங்கவில்லையாம்..! 'அட...அஜீத் படங்கள் பண்ணியும் கார் வாங்கலையா..என்னவா இருக்கும்?' என இணையவெளியில் அசைபோட்டார்கள் நெட்டிசன்ஸ். யூ-ட்யூபர் அபிஷேக்கே சொன்ன அந்த தகவல்தான் ஜில் ரகம். இயற்கை ஆர்வலரான வினோத், சுற்றுச்சூழல் மாசுபடக்கூடாது என கார் வாங்குவதையே தவிர்த்து விட்டார் என்பதுதான் அது. 

போதாதா நம் ஆட்களுக்கு? 'தல இயக்குநர் தல போலவே சிம்பிளாய் நடந்து தமிழ்நாடு பூரா சுற்றுகிறார்' என கொளுத்திப்போட்டார்கள். இன்னொரு ஆளோ, 'வினோத்துக்கு மோட்டார் என்றாலே அலர்ஜி. அடுத்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை வைத்து புவி வெப்பமயமாதல் பற்றி புள்ளி விபரங்களோடு படம் பண்ணுகிறார். அதான் இந்த ஸ்ட்ரிக்ட்!' என இஷ்டத்துக்கு அள்ளிவிட்டார்கள்.

'' அபிஷேக்கைப் பார்த்தால் நானே ஏன் இப்படினு கேட்கப்போறேன்... கார் அலர்ஜிலாம் இல்லை. நான் இயற்கை ஆர்வலன் தான். அதுக்காக காரை வெறுக்குற அளவுக்குலாம் இல்லை பாஸ்னு சொல்லணும். தொடர்ந்து படங்கள் பண்ணியதால் பிஸியாவே இருந்துவிட்டேன். கார் வாங்கினால் வீட்டில்தான் சும்மா நிறுத்தி வைக்கணும்."

ஏன்னா அஜீத் சார் படங்கள் வரிசையாக பண்ணியதால் கம்பெனி கார் கொடுத்திருந்தார்கள். கார் புதுசாய் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இனி கார் வாங்கலாம். அதுக்குள்ளே எப்படில்லாம் கிளப்பி விடுறாங்கப்பா!'' என்று சொல்லி கார் மேட்டருக்கு தன் ட்ரேட் மார்க் சிரிப்புடன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அ.வினோத். 

ஒரு பொய் சொல்லணும்னா  அதுல கொஞ்சம் உண்மையும் இருக்கணும்ல..!