கொம்பன்
கொம்பன் டைம்பாஸ்
சினிமா

'முடிய வெட்டினா வலிக்காது. பிடுங்கினாதான் வலிக்கும்' - கொம்பன் படம் எப்டி இருக்கு?

கொட்டாச்சி

இயக்குனர் முத்தய்யா, கார்த்தி நடிப்பில அண்மைல 'விருமன்' படம் வெளியாச்சு. நீல சட்டை மாறன்லருந்து, நிலா வடை சுடுற பாட்டி வரைக்கும் எல்லாரும் விருமனுக்கு ரிவ்யூ விருந்து கொடுத்துட்டாங்க.

சரி, நாம அதே காம்போல வந்த கொம்பனுக்கு கொஞ்சம் குருமா விருந்து கொடுப்போமேனு ஒரு 'கொம்பன் ரிவ்யூ' எழுத தரையிறங்கி இருக்கோம். விமர்சனத்துக்குள்ள போவோம்.

‘‘முடிய வெட்டினா வலிக்காது. பிடுங்கினாதான்யா வலிக்கும். அப்படித்தான் ஒரு பொண்ணோட வாழ்க்கை.”

“ஒரு பொண்ணுக்குப் பெத்தவன் நெத்தி மாதிரி. ஆனா கட்டினவன் பொட்டு மாதிரி.”

“என் பையன் இருக்கானே, அவன் கொல்லையில இருக்கிற சாணி மாதிரி. அவனை இந்த ஊர்க்காரங்க எருவா மாத்திட்டாங்க. நீதான் அந்த சாணியைப் பிடிச்சுப் பிள்ளையார் ஆக்கணும்.”

- இந்த மாதிரியான வாழ்க்கையின் அரிய பல தத்துவங்களைத் தெரிஞ்சுக்கணும்னா, நீங்க கண்டிப்பா ‘கொம்பன்’ படத்தைப் பார்த்தே ஆகணும்.

முதல் இரண்டு பொன்மொழிகளை உதிர்ப்பவர் ராஜ்கிரண். கடைசி தத்துவத்தைச் சொல்லியிருப்பது கோவை சரளா. இந்த மாதிரி தத்துவங்களைக் கண்டுபிடிக்கிறதுக்காக என்ன பிராக்டீஸ் பண்ணுவாங்கனு தெரிஞ்சா, நாமளும் ஆபீஸுக்கு லீவு போட்டு ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இன்னும் எத்தனை காலத்துக்குதான் நம்ம ஹீரோக்கள் ஊரில் நடக்கிற அநியாயத்தைத் தட்டிக்கேட்பாங்களோ, தெரியலை.

அப்படி என்ன அநியாயத்தை கார்த்தி இந்தப் படத்தில் தட்டிக்கேட்கிறார்?

ஆட்டுச்சந்தையில் ஆட்டை நிறைய தண்ணி குடிக்க வெச்சு எடை கூட்டி விக்கிறவங்களை அடிச்சுப் பொளக்கிறார். பின்னே அவர் என்ன தீவிரவாதிகளையா எதிர்க்கப்போறாரு.

ஊருக்காக உயிரையே கொடுப்பேன்னு கார்த்தி அலையிற அளவுக்கு அவருக்கு ஊர் என்ன பண்ணுச்சுனுதான் தெரியலை. பெரிசா மீசை வெச்ச அஞ்சாறு பெரிசுக வெட்டித்தனமா ஊரைச் சுத்துறது, பஞ்சாயத்துப் பண்றது, சாவடியில உக்காந்து தாயம் விளையாடறதுனு இருக்காங்க. இவங்ககூட சேர்ந்து கார்த்தியும் பல பஞ்சாயத்துகளைப் பண்ணிக்கிட்டிருக்காரு.

மத்தபடி கிராமத்துக்கு நல்ல ரோடு வேணும், பஸ் வேணு ம் , குடி தண்ணீர் வசதி வேணும்னு போராடுறது... இதெல்லாம் ’ஊருக்கு நல்லது பண்றது’ லிஸ்ட்ல வராதோ?

மாமனார் ராஜ்கிரண் பாத்திரம் இருக்கே, ‘எவ்ளோ அசிங்கப்படுத்தினாலும் தாங்கறாரே... இவரு ரொம்ப்ப்ப நல்லவர் ’ மாதிரியான கேரக்டர்.

ஒரு காட்சியில் கார்த்தி லட்சுமி மேனன்கிட்ட “என்ன உங்கப்பன் சாப்பிட்டானா?”னு கேட்கிறார். அந்த நேரம் ராஜ்கிரண் அங்கே வர , கார்த்தி நழுவிடுறார். உடனே ராஜ்கிரண் லட்சுமி மேனன்கிட்டே உதிர்க்கிறாரே ஒரு பொன்மொழி, “பெத்த அப்பா, அம்மாவையே சாப்பிட்டாங்களானு கேட்காத இந்தக் காலத்தில மாமனாரு சாப்பிட்டாரானு மருமகன் கேட்டாரே, அதுவே எனக்குப் போதும்மா.”

அவ்வ்வ்வ்! அழுகையா வருது!