Tamil Cinema
Tamil Cinema Tamil Cinema
சினிமா

எந்தெந்த பண்டிகைக்கு என்னென்ன படம் டிவில போடுவாங்க? - ஒரு கலகலப்பான லிஸ்ட்! | Tamil Cinema

டைம்பாஸ் அட்மின்

எந்தக் காலத்துக்கும் மாறாத ஒரு விஷயம்னா அது சீசனுக்கு ஏத்த சினிமாக்கள்தான். வருஷா வருஷம் வரும் பண்டிகை, சுதந்திர தினம், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல்னா போதும் உடனே ஓய்ஞ்ச வாழைப்பழம் மாதிரி, லாக்கர்ல லாக் பண்ணி வெச்சிருக்கிற சில ஓல்டு படங்களை துடைச்சி, தூசுதட்டி டிவியில ஓட விட்டுருவாங்க.

அப்படி லீவு நாட்கள்ல நம்மளை காவு வாங்கின படங்கள் நிறைய இருக்கு. நல்ல கருத்துள்ள படமா இருந்தாலும் ஒரு மனுஷன் எவ்ளோ அடிகளைத்தான் தாங்கமுடியும்…? வடிவேலு மாதிரி ’வேணாம், வலிக்குது அழுதுருவேன்’. னு கதறவெச்ச சில படங்களைப் பார்ப்போம்.

1. ஆடி வெள்ளிகிழமை படங்கள்.

வெள்ளிக்கிழமை நாட்கள்ல டிவிய ‘ஆன்’ பண்ணினா போதும் ’லு.லு..லு’னு குலவை சத்தத்தோட ஆரம்பிக்கிற படங்களா இருக்கும். ஒண்ணுலதான் இதுன்னு இன்னொரு சேனலை மாத்தினா அங்கையும் இதே குலவையும், உடுக்கைதான். ’வெள்ளிக்கிழமை விரதம்’ கிற படத்துல சிவக்குமார் பாம்பை பார்த்து பயப்படறதும், ஜெயசித்ரா பாம்புக்காக வக்காலத்து வாங்கி முட்டுக்கொடுக்கிறதுன்னு சென்டிமெண்ட் சீன்களாப் போகும்.

அடுத்து ‘ராஜ காளியம்மன்’ இதுவும் சீசன் படம்தான். இந்தப் படத்துல காளியம்மனை சந்தோஷப்படுத்துறதுக்காக ’வைகைபுயல்’ வடிவேலு காளியம்மன் சிலைய ஊஞ்சல்ல வெச்சி ’சந்தன மல்லிகையில் தூளி கட்டிப்போட்டேன் தாயே நீ கண் வளரு தாலே லல்லேலே’னு பாடும்போது அம்மனா நடிக்கிற ரம்யாகிருஷ்ணனே வந்து ஊஞ்சல்ல ஆடிட்டு இருப்பாங்க. இதே வெர்சன்ல வந்த ’தாலி காத்த காளியம்மன்.’, ’ஆடி வெள்ளி.’, ’பாளையத்து அம்மன்’ னு லிஸ்டு லென்த்தா போயிட்டே இருக்கும்.

2 . சுதந்திர தின படங்கள்.

காலைல வந்து டெலிகாஸ்ட் பண்றதுக்கு நேரமாகும்னு ராத்திரியே டைம் செட் பண்ணி வெச்சிட்டு, தவிர்க்கவே முடியாத அரத பழசான தேசபக்திப் படங்கள்ல ரொம்ப முக்கியமானது சிவாஜி, கே,ஆர்.விஜயா, வீ.கே.ராமசாமி, மனோரமா, எம்.ஆர்.ஆர்.வாசுன்னு தமிழ்ல இருக்கிற மொத்த ஆர்ட்டிஸ்ட்டுங்களையும் அள்ளிட்டுவந்து, ஸ்டுடியோ செட்டுக்குள்ள அடைச்சிவெச்சி எடுத்த படம்தான் ’பாரதவிலாஸ்’ அன்னைக்கு மூணு மணி நேரம் தமிழ்நாடு முழுக்க ’இந்திய நாடு என் வீடு’ ஸாங்தான்.

அது முடிஞ்சு அக்கடான்னு இருக்கும்போது ’ஜெய்ஹிந்த்… ஜெய்ஹிந்த்’துன்னு அர்ஜூன் கொடிய தூக்கிட்டு ஓடிவருவாரு. ஓகே, ஓடிட்டுப்போகட்டும்னு பார்த்தா, பெல்ட்டு உறையிலேர்ந்து கத்திய உருவிக்கிட்டு ’இந்தியன்’ தாத்தா ஹேர் ஸ்டைலை சரி பண்ணியபடி வருவாரு. அது முடிஞ்சதும் ’கப்பலோட்டிய தமிழன்’ அடுத்து ’ரோஜா.’ இல்லன்னா ’சிவந்த மண்’ இதுகளவிட ரொம்ப முக்கியமான படம் ’ஹே ராம்’ சொல்லன்னா கமல் ஃபைட்டுக்கு வருவார்.

3 . காதலர் தினம் படங்கள்.

பிப்ரவரி - 14 ’காதலர் தினம்’ அன்னைக்கு காலைல எதாச்சும் ஒரு சேனல்ல ’இதயமே… இதயமே மெளனம் என்னைக் கொல்லுதே’னு ஹீரோயின் ஹிராகிட்ட கடைசிவரைக்கும் காதல் சொல்லாத முரளி நடிச்ச ’இதயம்’ படம் ஓடும். அதுதான் இன்னைக்கு வரைக்கும் லவ்வுக்கு புவிசார் குறியீடு வாங்குன படம் மாதிரி ’லவர்ஸ் டே’ னா இந்தப் படத்தை அலைக்கற்றைல அலையவிட்டுர்றாங்க. அதோட விடுவாங்கன்னு பார்த்தா, கூடவே இதோ இதையும் வெச்சிக்கங்கன்னு குணால், சோனாலி பிந்த்ரே நடிச்ச ’காதலர் தின’ த்தைக் காட்டுவாங்க.

அதுவும் இல்லையா இருக்கவே இருக்கு ’அலைகள் ஓய்வதில்லை.’, ’அலைபாயுதே’., ’காதலுக்கு மரியாதை’. அப்றம், பாடாப் படுத்துறதுக்குன்னே திரும்பத் திரும்ப ஆர்யா நடிச்ச ’மதராசப் பட்டிணம்’ சிம்பு நடிச்ச ’மன்மதன்’ விசால் நடிச்ச ’திமிரு’ இப்டி எதாச்சும் படத்தைப் போட்டு நம்மளைக் கலாய்க்கலன்னா தூக்கமே வராதுபோல.. அதைவிட நமக்கு இருக்கிற பயம், இந்தப் படங்கள் இன்னும் எத்தனை வருஷத்துக்கு ’ரோலிங்’ல இருக்குமோன்னுதான்.

4 . தீபாவளி பண்டிகைப் படங்கள்.

தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலும் புதுசா ரிலீஸான படங்கள்தான் போடுவாங்கன்னாலும் தீபாவளிக்குன்னு சில பாடல்களை மறக்க முடியாது, மறந்தாலும் விடமாட்டாங்க. வீட்டுல பட்டாசோட கந்தகப்பொடி வாசனை, புதுத்துணி ஸ்மெல், பலகாரம், மட்டன், சிக்கன்னு நான் - வெஜ் ஸ்மெல்லோட பழைய பாட்டு வாசனையும் வரும். குறிப்பா ’கல்யாண பரிசு’ படத்துல வர்ற ’உன்னைக் கண்டு நான் ஆட.. என்னைக் கண்டு நீ ஆட’ ன்னு கையில மத்தாப்போட சித்தப்பு ஜெமினிகணேசன் பாடுற பாட்டு. அது வரலைன்னா தீபாவளி புஸ்வானமாயிடும்.

அதே மாதிரி நதியாவும், பாட்டி பத்மினியும் ’பட்டாச சுத்தி சுத்திப்போடட்டுமா…?’ ன்னு ’பூவே பூச்சூடவா’ படத்துல பட்டாசக் கொளுத்திப் போட்டுகிட்டுப் பாடுற பாட்டு இன்னும் காலங்கள் கடந்து நிற்கும்போல.. ’நான் சிரித்தால் தீபாவளி ஹோய்... பாட்டும் சம்மன் இல்லாம ஆஜராகிடும். ஸாங்குல தீபாவளிங்கிற வார்த்தை வரணும் இல்லன்னா கிராக்கர்ஸ் வெடி சத்தம் வரணும். அது இருந்தாலே போதும் சந்தேகம் இல்லாம தீபாவளி செலபரேட் ஸாங்தான்.

5 . பொங்கல் பண்டிகைப் படங்கள்

பொங்கல் வந்தாலும் ஒரே ரவுசுதான். பொங்கல் அடுப்புல விறகு செருகுற மாதிரி ஏகப்பட்ட படங்கள் வரிசைக்கட்ட ஆரம்பிச்சுடும். பட்டிமன்றம், நேர்காணல், கிராமியப் பாடல் புரோகிராமுக்கு நடுவுல படத்தைக் குத்துவிளக்கேத்தி துவக்கி வெச்சிருவாங்க. பொங்கல் பண்டிகைக்கான சில ரிஜிஸ்ட்ரேஷன் படங்கள் இருக்கு சிவாஜி நடிச்ச ’பழனி’ ங்கிற படம். அதுல விவசாயத் தொழிலாளியா நடிப்பாரு, அதே மாதிரி ’விவசாயி’, ’உரிமைக்குரல்’ போன்ற படங்கள்ல எம்.ஜி.ஆர் விவசாயி கதாபாத்திரத்துல நடிப்பாரு.

பொங்கலுக்குப் பொங்கல் பூஜை போடுற மாதிரி வந்துட்டு இருந்த மேற்கண்ட படங்கள் ரொம்ப வருஷமா காணோம். கொஞ்சம் மாத்தி கமல் நடிச்ச ’சகலகலா வல்லவன்’, விஜயகாந்த் நடிச்ச ’உழவன் மகன்’ படங்கள் வந்துட்டு இருந்திச்சி. இப்போ அதுவும் இல்லாம ஜெயம் ரவி நடிச்ச ’உனக்கும் எனக்கும் ஸ்ம்திங்..ஸம்திங்.,’ கார்த்தி நடிச்ச ’கடைக்குட்டி சிங்கம்’ மாதிரியான படங்கள் ஓடிட்டு இருக்கு ஆனா, ’விவசாயி… கடவுள எனும் முதலாளி’, ’மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி’, பாடல்கள் மட்டும் இன்னும் மாறாமலே இருக்கு.

- எம்.ஜி.கன்னியப்பன்.

வணக்கம் Timepassonline வாசகர்களே...

டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், கலகலப்பான மீம்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க Timepass Whatsapp சேனலில் இணைந்திருங்கள்.

Follow us : https://bit.ly/3Plrlvr