Tamil Serials Tamil Serials
சினிமா

Tamil Serials : 'விக்ரம் வேதா' மோதலும் காதலும் ஆன கதை ! - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 9

ஏகப்பட்ட சீரியல்களுக்கு சினிமாப் பெயர்களை வைத்த போதெல்லாம் இப்படியொரு எதிர்ப்பைச் சந்தித்திராத விஜய் டிவிக்கு இந்த எதிர்ப்பு புதிதுதான்.

டைம்பாஸ் அட்மின்

சீரியல்களுக்கு ஏன் சினிமாப் பெயர்களை வைத்து வருகிறார்கள் என கடந்த எபிசோடில்தான் விவாதித்தோம். சீரியல் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலரும் இந்த விவகாரம் குறித்துப் பல கோணங்களில் பேசியிருந்தார்கள். இதோ மறு வாரமே அதையொட்டி ஒரு பஞ்சாயத்து.

வரும் 24ம் தேதி முதல் விஜய் டிவியில் தினமும் (திங்கள் - வெள்ளி) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிற 'மோதலும் காதலும்' என்கிற  சீரியலை வைத்துதான் கிளம்பியிருக்கிறது பிரச்னை 'மோதலும் காதலும்' என்கிற பெயரில் ஒரு படம் கூட வந்த மாதிரி தெரியலையே' என்கிறீர்கள்தானே? கரெக்ட். இந்தப் பெயரில் எந்தவொரு படமும் இல்லைதான். ஆனால் 'மோதலும் காதலும்' சீரியலுக்கு ஆரம்பத்தில் வைத்திருந்த பெயர் 'விக்ரம் வேதா'. இப்போது புரிந்திருக்குமே.. மேட்டருக்குள் செல்வோமா ?

சில வாரங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ப்ரோமோ, 'விக்ரம் வேதா' என்கிற பெயரில் புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாகத்தான் சொன்னது.

ப்ரொமோ வெளியான சில தினங்களிலேயே விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி மற்றும் தயாரிப்பாளர் 'ஒய்நாட் ஸ்டூடியோ' சசிகாந்த் ஆகியோர் சீரியலின் அந்தத் தலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேனலுக்குப் பேசினார்களாம்.

இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விசாரித்த போது, 'சீரியல்களுக்கு சினிமாப் பெயர்களை வைக்கிற பழக்கம்  ஆரம்பிச்சப்ப, சிலர் எதிர்ப்புத் தெரிவிச்சாங்க. அந்த எதிர்ப்புக்கு பெரியளவுல ஆதரவு இல்லாததால சீரியல் தயாரிப்பாளர்களும் சேனல்களும் அதைப் பெரிசாக் கண்டுக்கலை. விளைவு.. வரிசையா சினிமா டைட்டிலகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகிட்டே வந்தன.

ஆனா 'விக்ரம் வேதா'ங்கிற டைட்டில்ல சீரியல் வரப்போகுதுன்னு தெரிஞ்சதுமே சம்பந்தப்பட்டவங்க விஷயத்தை ரொம்பவே சீரியஸா எடுத்துக்கிட்டாங்க.

'பழைய படங்களின் டைட்டில்களைப் பயன்படுத்தறது மாதிரி இல்லீங்க இது, படம் வெளியாகி சில வருஷங்கள்லயே இந்த மாதிரி டைட்டிலைப் பயன்படுத்தினா எப்படி? இது முறை கிடையாது. நாங்க சீக்கிரமாகவே இந்தப் படத்தின் பார்ட் 2 எடுக்கலாம்னு இருக்கோம். அந்த நேரத்துல, இதே பெயரில் சீரியலும் ஒளிபரப்பாகிட்டிருந்தா, அது எங்களுடைய படத்தின் வியாபார விஷயங்களைப் பாதிக்காதா? அதனால இதை அனுமதிக்க முடியாது' என கறாராகச் சேனலிடம் பேசியிருக்காங்க அவங்க.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ரெண்டு தரப்புல இருந்தும் ஒருசேர எதிர்ப்பு வந்ததுலதான் சேனல் தரப்பு யோசிக்கத் தொடங்கியது' என்றார்கள், இந்த விவகாரம் தெரிந்தவர்கள்.

இன்னொரு புறத்திலிருந்து இன்னொரு சிக்கலும் வந்திருக்கிறது. 'விக்ரம் வேதா' படத்தின் ஒ.டி.டி உரிமை போட்டி சேனலான 'ஜீ' டிவி குழுமத்திடம் இருப்பதால், அவர்களுமே இந்த டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதுவரை ஏகப்பட்ட சீரியல்களுக்கு சினிமாப் பெயர்களை வைத்த போதெல்லாம் இப்படியொரு எதிர்ப்பைச் சந்தித்திராத விஜய் டிவிக்கு இந்த எதிர்ப்பு புதிதுதான். ஆனாலும் வளர்ந்து வரும் இயக்குநர்கள், பெரிய தயாரிப்பு நிறுவனம், இன்னொரு சேனல் என எதிர்ப்பு பல முனைகளிலிருந்து வந்ததால் வேறு வழியில்லாமல், சீரியலின் தலைப்பை மாற்றும் முடிவுக்கு வந்ததாம்.

அதேநேரம், ப்ரொமோ மூலம் 'விக்ரம் வேதா' என்கிற அந்தப் பெயர் ஓரளவு ரீச் ஆகிவிட்டதால், அந்தப் பெயரையும் (விக்ரம் வேதாவின் காதல் கதை)  என சப் டைட்டில் போலப் போட்டுக் கொள்ளலாம் என முடிவு செய்து ஒருவழியாக பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அடுத்த வாரம் பார்க்கலாம்.

- அய்யனார் ராஜன்.