America
America  timepass
Lifestyle

America : 2 வயதில் 99% IQ - Mensa வின் இளம் உறுப்பினரான அமெரிக்க குழந்தை!

டைம்பாஸ் அட்மின்

2 வயதிலேயே 99% நுண்ணறிவுத் திறன் பெற்றுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த 2 வயது குழந்தை, உலகின் மிகப் பழமையான நுண்ணறிவுத் திறன் அமைப்பான மென்சாவில் உறுப்பினராகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மென்சா இன்டர்நேஷனல் என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான லாப நோக்கற்ற உயர் நுண்ணறிவு (IQ) சமூக அமைப்பாகும். இந்த அமைப்பின் விதிகளின்படி, ஒருவரின் நுண்ணறிவுத் திறன் 98 சதவீதத்துக்கு மேல் இருந்தால் மட்டுமே இந்த அமைப்பில் உறுப்பினராக முடியும். இத்தகைய அமைப்பில்தான் 2 வயதான இஸ்லா என்ற அமெரிக்க குழந்தை மிக இளவயது பெண் உறுப்பினராகி உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்காக அவர்கள் ஸ்டான்ஃபோர்ட்-பினெட் நுண்ணறிவு அளவுகோலைப் பயன்படுத்தி, நுண்ணறிவுத் திறனை ஆய்வு செய்கின்றனர். அதன்பின்பே தங்களது அமைப்பில் உறுப்பினராக சேர்க்கின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள க்ரெஸ்ட்வுட் பகுதியைச் சேர்ந்த இஸ்லா மெக்னாப் (Isla McNabb) என்ற 2 வயது பெண் குழந்தை மிகவும் குறைந்த வயதிலேயே உறுப்பினராகியது உலக சாதனைப் புத்தகமான கின்னஸில் இடம் பிடித்துள்ளது.

குழந்தை இஸ்லா, 1 வயதாக இருக்கும்போதே நிறங்கள், எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளார். குழந்தையின் இந்த அசாதாரணத் திறன்களை உணர்ந்த பெற்றோர், அப்போதே குழந்தையின் சாதனையை கின்னஸில் பதிவு செய்தனர்.

இக்குழந்தை ஏழு மாதமாக இருக்கும்போதே படப் புத்தகங்களில் உள்ள சில பொருள்களைக் காட்டி, அதனை நிஜமாக எடுத்து வரச் சொன்னால் சரியாக எடுத்து வருவாராம். மேலும், 18ஆவது மாதத்தில், அதாவது ஒன்றரை வயதில் எழுத்துக்களையும் கற்றுக் கொண்டுள்ளார். சரியாக 2 வயதில் படிக்கத் தொடங்கியுள்ளார் என இஸ்லாவின் தந்தை ஜேசன் மெக்னாப் தெரிவித்துள்ளார்.

இஸ்லாவின் 2வது பிறந்தநாளின்போது அவரது அத்தை வழங்கிய பரிசுப் பொருளில் எழுதியிருந்த 'சிவப்பு' என்ற வார்த்தையைப் படித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து இஸ்லாவின் தந்தை தொடர்ச்சியாக 'நீலம்,' 'மஞ்சள்,' 'பூனை,' 'நாய்' என எழுத, அதையும் இஸ்லா எவ்விதத் தயக்கமுமின்றி சத்தமாகப் படித்துள்ளார்.

இதையடுத்து, இஸ்லாவின் அசாதாரண ஆற்றலை பார்த்து வியந்த அவரது பெற்றோர், அவரை பரிசோதிப்பதற்காக குழந்தைகள் உளவியலில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரை அணுகினர். ஆனால் அவரோ 2 வயது குழந்தையைப் பரிசோதிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இஸ்லாவின் திறமைகளை எடுத்துக் கூறியதையடுத்து, மருத்துவர் ஓர் விதிவிலக்காக இஸ்லாவை பரிசோதனை செய்து, அவருக்கு நுண்ணறிவுத் திறன் அதிகம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது தனது 3 வயதில் அப்பகுதியில் உள்ள ஓர் பாலர் பள்ளியில் இஸ்லா கல்வி பயின்று வருகிறார். மேலும், இஸ்லாவின் தனித் திறமைகளை வளர்க்கும் வகையிலான கல்வியை அவருக்கு வழங்க வேண்டுமென அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். தற்போது, அனைத்து பாடங்களிலும் சராசரி மாணவர்களை விட ஒரு படி மேலே படிக்கும் இஸ்லா, கணிதத்திலும், வாசிப்புத் திறனிலும் சிறந்து விளங்குகிறார். மேலும், தினம் தினம் ஏதேனும் புதிதாகச் செய்து, அவரது பெற்றோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் இஸ்லா.

- மு. ராஜதிவ்யா.