Newzealand டைம்பாஸ்
Lifestyle

Newzealand : 'எந்த வயசுலயுமா?' - மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் உலக சாதனை படைத்த 97 வயது முதியவர் !

தனது 64 வயது மகன் ராட் மற்றும் 21 வயது பேத்தி ஒலிவியாவுடன் போட்டியிட்டு இந்த சாதனையைப் படைத்ததன் மூலம் அதிக வயதுடைய மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

டைம்பாஸ் அட்மின்

சாதனைக்கு வயது தடையில்லை... வயது என்பது வெறும் எண்தான் என்று நிருபித்துள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த 97 வயதான மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் லெஸ்லி ஹாரிஸ்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனது 97வது வயதில் - தனது 98வது பிறந்தநாளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு லெஸ் ஆக்லாந்தில் நடந்த புகேகோஹே 43வது கிளாசிக் மோட்டார் சைக்கிள் திருவிழாவில் பங்கேற்றுள்ளார்.

தனது 64 வயது மகன் ராட் மற்றும் 21 வயது பேத்தி ஒலிவியாவுடன் போட்டியிட்டு இந்த சாதனையைப் படைத்ததன் மூலம் அதிக வயதுடைய மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். 

ஹாரிஸ் இதற்கு முன்பு 2019 இல் 93 வயதில் இந்த சாதனையை படைத்தார். ஆனால், அதற்கு பிறகு இடுப்பு பகுதியில் செய்துக்கொண்ட அறுவை சிகிச்சையின் காரணமாக அவரால் மீண்டும் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

பின்னர் தனது பட்டத்தை பாதுகாக்க 2020 கிளாசிக் விழாவில் சேர்ந்தார். ஆனால் நிகழ்வின் போது அவர் காயமடைந்ததால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அந்த விபத்தில் ஆறு விலா எலும்புகள் உடைந்தன. இருப்பினும் அவர் அதிர்ஷ்டவசமாக குணமடைந்தார். பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் எந்த போட்டிகலும் நடைபெறவில்லை.

இதனால், 2023 ஆம் ஆண்டு புகேகோஹே பார்க் ரேஸ்வேயில் நடந்த இந்த போட்டியில் முதல் முறையாக அவரது மகன் ராட் மற்றும் பேத்தி ஒலிவியா உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் பந்தயத்தில் கலந்து கொண்டார்.

ஹாரிஸ் இந்த போட்டியில் நான்காவது இடத்தில் முடித்தார். ராட் எட்டாவது இடத்தையும், ஒலிவியா 21வது இடத்தையும் பிடித்தனர். மேலும் ஹாரிஸ் இந்த ஆண்டில் மேலும் பல போட்டிகளில் கலந்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அவர் 44வது கிளாசிக் திருவிழாவை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

- மு.குபேரன்.