Kerala
Kerala timepass
Lifestyle

Kerala : தன்னை பற்றி அவதூறாக பேசியவர்களை மைக்செட் போட்டு திட்டிய நபர் ! - ஓ இதான் காரணமா?

டைம்பாஸ் அட்மின்

ஒருவரைப்பற்றி யாராவது தப்பாக பேசினால் அவர்களிடம் நேரில் சென்று திட்டுபவர்களைப் பார்த்திருப்போம். சிலர் நேரில் சென்று தகராறு கூட செய்வதை பார்த்திருப்போம். ஆனால், கேரள மாநிலத்தில் தன்னை பற்றி டீக்கடையில் அவதூறு பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மைக்செட் வாடகைக்கு எடுத்து திட்டித் தீர்த்த ஒரு மகானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

பைக்கில் மைக் செட்டுடன் வந்த அந்த நபர், மைக்கைப்பிடித்து, "உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னிடம் நேரடியாக வந்து பேசுங்கள். அதைவிட்டுவிட்டு இங்கு இருந்து புறம்பேசாதீர்கள்" என காதே வெடித்து சிதறும்படியான வார்த்தைகளால் திட்டித்தீர்த்தார். இதுகுறித்து புகார் எழுந்ததால் அந்த மைக் செட்டை போலீஸார் பறிமுதல் செய்து வைத்து விசாரித்து வருகின்றனர்.

மைக் செட் எடுத்து திட்டிதீர்த்த நபர் ஆலப்புழா மாவட்டம் காயாங்குளம் பகுதியைச்சேர்ந்த டோன் என்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி டோன் கூறும்போது, "நான் காய்கறி, இறைச்சி வியாபாரம் செய்து வருகிறேன். அதிகாலை 3.30 மணிக்கு எழுந்தால் தூங்க இரவு 11 மணி ஆகும். அதுவரை கடுமையாக வேலை செய்வேன். மிகவும் கஷ்டப்பட்டு இந்த வீட்டை கட்டினேன். வீடு வேலை தொடங்கிய நாள் முதல் இங்குள்ளவர்கள் இல்லாததும், பொல்லாததும் பேசி வருகிறார்கள். நானும் பொறுமையாக இருந்தேன். ஒருகட்டத்தில் வேறு வழியில்லாமல் மைக்கில் திட்டும் நிலைக்குச்சென்றுவிட்டேன். அது சரியா, தவறா என்பது எனக்கு தெரியவில்லை" என்றவர் என்னவெல்லாம் அவதூறு கிளப்பினார்கள் என பட்டியலிட்டார்.

"என் மனைவி என்னிடம் சண்டையிட்டுவிட்டு அவரது அம்மா வீட்டுக்கு போனதாக சொன்னார்கள். வீடு பால்காய்பிற்கு 25 லட்சம் ரூபாய் கலெக்‌ஷன் ஆனது எனச் சொன்னார்கள். வீட்டில் உள்ள பசுவை விற்க இரண்டு புரோக்கர்கள் வந்துபோனார்கள். அதைபார்த்துவிட்டு, அவனுக்கு நிறைய கடன் இருக்கிறது வீட்டை விற்கப்போகிறான் எனச் சொன்னார்கள்" என அவர் கூறும்போது 'பஞ்சாயத்து பால்டாயிட் குடிச்சுட்டானாம்டா' காமெடி நம் நினைவுக்கு வந்து போகிறது.

"நான் வீடு கட்ட என் சித்தப்பா பண உதவி செய்ததாகவும், அந்த பணத்தை அவர் திரும்ப கேட்டதால் எங்களுக்குள் பிரச்னை எழுந்துள்ளதாகவும், நான் அவரை தாக்கியதாகவும் சொன்னார்கள். என் அப்பா இறந்தபிறகு என் சித்தப்பாவிடம்தான் நான் ஆலோசனைகள் கேட்டுவருகிறேன். அப்படிப்பட்ட சித்தப்பாவுக்கும் எனக்கும் பிரச்னை என அவதூறாக பேசுவதாக ஒரு ஆட்டோ டிரைவர் என்னிடம் கேட்டார்.

என் தந்தையின் ஸ்தானத்தில் இருப்பவரை அவதூறாக பேசியதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒருவர், இரண்டுபேர் அவதூறாக பேசியிருந்தால் நான் சாதாரணமாக திட்டியிருப்பேன். ஆனால், நிறைய பேர் அவதூறாக பேசியதால் அவர்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்பதற்காக மைக்செட் எடுத்து வந்து பேசினேன். மாலை வேளையில் அந்த டீக்கடையில் அனைவரும் கூட்டமாக இருப்பார்கள் என்பதால் மாலை 5.30 மணியளவில் நான் அந்த டீக்கடைக்கு முன்பு நின்று பேசினேன். அதை யாரோ வீடியோ எடுத்து பரப்பியிருக்கிறார்கள். அது இப்படி வைரலாகும் என நான் நினைக்கவில்லை. நான் யாரைப்பற்றியும் எதுவும் பேசுவதில்லை. அதுபோல அவர்கள் என்னைப்பற்றி அவர்கள் அவதூறாக பேசக்கூடாது என நான் நினைக்கிறேன்" என்றார்.

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே இந்த சேட்டன்மார்.

-ஆர்.சிந்து.