ரவிவர்மா டைம்பாஸ்
Lifestyle

'தேசிய சினிமா தினம் - ரவி வர்மாவும் பால்கேவும்' - பழைய பேப்பர் கடை | Epi 3

சுதந்திரத்துக்கு முன்பு ரவிவர்மா ஓவியங்களை மையமாக வைத்தே பல சலனப்படங்களை எடுத்தார் பால்கே. இவ்வாறு கேன்வாஸிலிருந்து செல்லுலாய்டிற்கு இந்திய சினிமா நகர்ந்தது.

Saran R

செப்டம்பர் 23 தேசிய சினிமா தினம். 

இந்த நாளில் நாம் இரு பெரும் ஆளுமைகளை நினைவில் கொள்வோம். முதலில் இந்தியாவின் தலைசிறந்த ஓவியர் ராஜா ரவி வர்மா, இரண்டாவது இந்திய சினிமாவின் தந்தை தாதா சாகேப் பால்கே. 

இவர்கள் இருவரையும் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்  வரலாற்று முக்கியத்துவமான ஒரு கொள்ளைச் சம்பவத்தைப் பார்ப்போம். 19-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒரு கொள்ளைச் சம்பவம் அது. கேரளத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குச் சொந்தமான மாவேலிக்கரா என்ற இடத்தில் ராஜ மாளிகையில் அது நடந்தது. இளவரசி மகாபிரபாவின் வைர வைடூரிய ஆபரணங்கள் களவு போய்விட்டது. மாதவன் என்ற அந்த மாளிகையின் வேலைக்காரர்தான் இந்த திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இளவரசர் ரவி வர்மாவால் தண்டிக்கப்பட்டார்.

தண்டனை என்றால் 'அன்னந்தண்ணி புழங்கக்கூடாது!' டைப் தண்டனை அல்ல. ஒரு பெரிய பலாப்பழத்தால் தொடர்ந்து தலையில் அடிக்கப்பட்டு, கண்கள் பிதுங்கி, கபாலம் திறந்து இறந்து போனார் அந்த பரிதாபத்துக்குரிய வேலைக்காரர்.  

ஆனால், ரவி வர்மா என்ன நினைத்தாரோ, இதை தற்கொலையாக மாற்றிவிடலாம் என்றெண்ணி தன் வேலையாட்களை வைத்து உடலை சுத்தம் செய்து, ஓரளவு நேர்த்தியாக்கினார். 

தலைப்பாகை கட்டி தூக்கில் தொங்கவிட்டனர். ஆனால், காவல்துறை தன் முதற்கட்ட விசாரணையில் இது கொலை என்பதைக் கண்டறிந்தார்கள். Modus Operandi என்றழைக்கப்படும் கொலை செய்த விதம் கொடூரமாக இருந்ததால் ராஜா ரவி வர்மாவுக்கு தண்டனை கிடைத்தது. 

நீண்ட விசாரணைக்குப் பிறகு கொள்ளைச் சம்பவத்திலேயே ராஜா ரவி வர்மாவுக்கு சம்பந்தம் உண்டு என்பதும் தெரிய வந்தது. தன் செல்வாக்கைப் பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளில் விடுதலையானார் ராஜா ரவி வர்மா. அதற்கு முக்கியக் காரணம் இளவரசருக்கு அப்போது வயது 18 தான் ஆகியிருந்தது. அதன் பிறகு ராஜ வம்சத்துப் பெண்ணை  திருமணம் முடித்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப மெனக்கெட்டார். ஆனால், அவர் மனசாட்சி அவரைத் துன்புறுத்தியது.

அந்தக் கொலைப்பழி மனசாட்சி ரூபத்தில் சுற்றித் தொடர, மது மாது என அலைந்து திரிந்து கடைசியில் தன்னிடம் உள்ள ஒரு திறமையை இனம் கண்டுகொண்டு கொலை, கொள்ளைச் சம்பவத்தை மறந்தார். அது ஓவியம் வரைதல்! 

ஆம், தத்ரூபமான போர்ட்ரெய்ட் வகைப் படங்களில் முத்திரை பதிக்க ஆரம்பித்தார். குற்ற உணர்வு முழுவதையும் ஓவியமாக்கித் தள்ளினார். கவலைகள் கலைகளாகின. ஒருகட்டத்தில் சாப்பிடக்கூட மனம் இல்லாமல் அந்த ஓவியக் கலையில் மூழ்கி முத்தெடுத்தார். அப்போது அவருக்கே தெரியாது, உலகமே அவரது ஓவியத் திறமைக்காக அவரை கொண்டாடப் போகிறதென்று! வரைவதில் அடுத்தடுத்த இலக்குகள் என அவர் மனம் வேகமாக ஓடத் துவங்கியது.

லக்னோ, முர்சிதாபாத் மற்றும் பாட்னாவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் இவரது ஸ்டைலைப் பின்பற்றியதுடன்  ஐரோப்பிய தாக்கத்தோடும், சாலைகள், கட்டடங்கள் என வெளிப்புற அமைப்புகளையும் சேர்த்து வரைய ஆரம்பித்தார்கள். எப்போதும் தன் சீடர்கள் தன்னைத் தாண்டி யோசித்தால் குருவுக்கு எல்லைகள் விரிவடையும் தானே! 

இம்முறை ஆயில் பெயிண்டிங்கில் இவர் ஐரோப்பிய ஓவியர்களை மிரள வைத்த சம்பவங்கள் நடந்தன. இதனால் மகாராஷ்டிராவில் லித்தோகிராபி பிரஸ் ஒன்றைத் துவங்கினார் ரவி வர்மா. இந்து புராணக்கதைகளையும், அந்நாளைய பெண்களின் அழகியல் தோற்றங்களையும் யதார்த்தமாக விரசமில்லாமல் வரையத்தொடங்கினார். 'ராஜா ரவிவர்மா ஆர்ட் மூவ்மெண்ட்'  என்ற புது இயக்கமே ஓவியக் கலையில் உருவானது. 

வர்மாவின் இந்த வாழ்க்கைக் கதை, அவர் ஓவியராக உருமாறிய சம்பவங்களைக் கேள்விப்பட்ட நாசிக்கைச் சேர்ந்த பால்கே என்ற தாதா சாகேப் பால்கே அந்த பிரஸில் வேலை கேட்டுப் போனார். லித்தோகிராபி, டார்க் ரூம் பிரிண்டிங் போன்ற விஷயங்களை வர்மாவிடமிருந்து பால்கே கற்றுக் கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக 'போட்டோ லித்தோகிராபி' எனப்படும் 3 வர்ண போட்டோ பிரிண்டிங் அங்குதான் முதன்முதலில் இந்தியாவில் பிரிண்ட் செய்யப்பட்டது. இந்தியாவில் முதல் பிலிமை டெவலெப் செய்து பிரிண்ட் போட்டவரும் இந்த பால்கே தான்.  

அடுத்தடுத்த மூவ்மெண்ட்டுகளோடு ஓவியங்களை வரைந்து அதை ஏன் அசையும் படங்களாக மாற்றக் கூடாது என மெனக்கெடுவார் பால்கே. ஆனால், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் 'தி லைஃப் ஆஃப் க்ரைஸ்ட்' என்ற முதல் அசையும் படங்களாக ஃபிலிமில் எடுத்து முதல் சினிமாவை உருவாக்கிக் காட்டினார். ஆனால், அதில் நேர்த்தி கொஞ்சம் மிஸ் ஆனதால், இந்திய புராணக் கதைகளை அசையும் சலனப் படங்களாக உருவாக்கலாம் என தயாரிக்க ஆரம்பித்தார்.   

'ராஜா ஹரிச்சந்திரா' என்ற அந்த முதல் சலனப் படத்தை 1913-ல் இயக்கும்போது அதை வெறும் சட்டகங்களாக காட்டக்கூடாது என்பதற்காக தன் குடும்ப உறுப்பினர்கள் 18 பேரை வைத்தே இயக்கினார். ஒருவகையில் இந்திய சினிமாவின் முதல் படமே முதல் குடும்பப் படம் தான். 

அதன்பிறகு சுதந்திரத்துக்கு முன்புவரை ரவி வர்மாவின் ஓவியங்களை மையமாக வைத்தே பல சலனப்படங்களை இயக்கினார் பால்கே. இப்படித்தான் கேன்வாஸிலிருந்து செல்லுலாய்டிற்கு இந்திய சினிமா நகர்ந்தது.

(தூசு தட்டுவோம்...)