தொடர்: பழைய பேப்பர் கடை - 'பாகிஸ்தான் பிரிவினையும் அப்பளத்தின் வரலாறும்'

ராஜஸ்தானில் சிந்தி இன மக்களின் வீட்டுக்கு நீங்கள் போனீர்கள் என்றால் 'பப்பட்' எனப்படும் 'அப்பளம்' மற்றும் ஒரு குவளைத் தண்ணீரும் கொடுத்து உபசரிப்பார்கள்.
அப்பளம்
அப்பளம்டைம்பாஸ்
Published on

அத்தியாயம்:2

வெந்து தணிந்தது நாடு!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையும்...'அப்பளம்' எனும் 'பப்பட்' உருவான வரலாறும்! 

நீங்கள் 'பப்படம்' 'பப்பட்' என்று வட இந்தியாவில் அழைக்கப்படும் நம்ம ஊர் 'அப்பளம்' என்ற வஸ்துவின் பிரியரா..? நானும் அப்பளத்தின் தீவிர ரசிகன் தான். பல நேரங்களில் பொரித்த அப்பளங்களை வீட்டில் தட்டெடுத்து வைக்கும் முன்னரே கபளீகரம் பண்ணிவிடுவேன்.

சில நேரங்களில் பொரிக்காத 'பச்சை' அப்பளத்தை அப்படியே சாப்பிடுவேன். அந்த உப்புச் சுவை அந்த நேரத்து பிரியமாக இருக்கும். நாக்கில் கரையும் அந்த உப்புச் சுவைக்குப் பின்னர் நிஜமாகவே சிலரின் கண்ணீர்த் துளிகள் கலந்திருக்கின்றன தெரியுமா..? நாம் வரலாற்றைக் கொஞ்சம் புரட்ட வேண்டியிருக்கிறது.  

தமிழர்கள் நமக்கு அப்பளத்துடனான பந்தம் சுவையோடும் வாழ்வியலோடும் பிணைந்தது என்றாலும் சிந்தி இன மக்களுக்கு ஒரு படி மேலே.

ஏனென்றால் இப்போதும் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ரா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் வசிக்கும் சிந்தி இன மக்கள் அப்பளத்தை விரும்பி உண்கின்றனர். ஆனால், அதற்கு சுவை மட்டும் காரணமில்லை. அது அதற்கும் மேலே. 

அப்பளம்
தொடர்: பழைய பேப்பர் கடை - 'கென்யக் காடு, மர உச்சியில் தேனிலவு, இளவரசி எலிசபெத்'

ராஜஸ்தானில் சிந்தி இன மக்கள் வசிக்கும் ஒரு வீட்டுக்கு நீங்கள் போனீர்கள் என்றால் 'பப்பட்' எனப்படும் 'அப்பளம்' மற்றும் ஒரு குவளைத் தண்ணீரும் கொடுத்து உபசரிப்பார்கள். தெற்கு பாகிஸ்தானில் வறண்ட பருவமும் அனல் காற்றும் கூடவே தார் பாலைவனமும் இயல்பாகவே அப்பளம் தயாரிக்க ஏதுவான காலநிலையை அமைத்துக் கொடுக்கிறது.

குறிப்பாக பலுசிஸ்தானத்தின் குன்றுகள், சிந்து மாகாணத்தின் பாலை நிலத்தோடு கொஞ்சம் கடலும் கலந்த அந்த சீதோஷ்ணமே அப்பளத் தயாரிப்புக்கு அந்நாளில் உதவிகரமாக இருந்தது. அப்பளம் ஏழைகளின் எளிய உணவு. அரேபியப் பாலைவனத்தில் எப்படி 'குப்பூஸ்' என்ற வஸ்து பலரின் பசியைப் போக்கியதோ, அதேபோல சிந்திக்கள் பலரை பசிப்பிணியிலிருந்து விரட்டியடித்தது இந்த அப்பளம் தான். 

அப்பளம் தயாரிப்பது எளிது. உளுந்து, எள், கரு மிளகு என எளிதில் கிடைக்கும் பொருட்கள் இருந்தால் போதும் வெறும் கைகளில் தயாரிக்கலாம்.  காய வைப்பதும், பேக் செய்து எங்கும் எடுத்துச் செல்வதும் எளிது.

பச்சையாக சாப்பிட்டாலுமே தண்ணீர் குடித்து விட்டால் உடலுக்குத் தேவையான உப்பு மற்றும் நீர்ச்சத்துக்களை இந்த அப்பளம் தரும் என்பதால் பசிக் கொடுமையிலிருந்து கடும் பாலைவனப் பிரதேசத்தில் தப்பிப் பிழைக்கலாம் என்பதை சிந்திக்கள் கண்டறிந்தனர். 

சிந்திக்கள் ஆரம்பத்தில் ஒன்றுபட்ட இந்தியாவில் வறண்ட நிலமெங்கும் பல்வேறு தொழில்கள் செய்து வசதி வாய்ப்பு கொண்டவர்களாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். குறிப்பாக வியாபாரம் அவர்கள் ரத்தத்தில் கலந்துள்ளது.

தாது மணல், ஆடை வியாபாரம், கிரானைட் பிசினஸ் என பலர் செல்வந்தர்களாக வாழ்ந்து வந்தார்கள்.  ஆனால், யார் கண் பட்டதோ எல்லாமே தலைகீழாகிப் போனது. சுதந்திரத்தின் இன்னொரு முகமாக, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டபோது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு பேர் வீடு வாசல், கால்நடைகளை அப்படியே விட்டுவிட்டு புலம்பெயர்ந்தார்கள்.

அப்பளம்
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'ஆட்டுக்கார அண்ணாமலை'

ஒரு சிலர் இந்தியாவுக்குள்ளும், மறுசிலர் பாகிஸ்தானின் வட மாகாணங்களில் காலடி எடுத்து வைத்தனர். அதிகம் பேர் அதாவது நான்கில் மூன்று பங்கினர் இந்தியாவின் தெற்கு ராஜஸ்தான் பகுதிக்குத் தஞ்சமாக வந்தனர். உயிர் வாழ அவர்கள் கைவசம் இருந்தது கொஞ்சம் கோதுமை மாவும், நிறைய அப்பளமும் தான். பாகிஸ்தான் அகதிகள் முகாமில் பலர் உணவும் மருந்துகளும் இல்லாமல் செத்து மடிந்தனர். எஞ்சிய சிலர் அப்பளத்தோடு முகாமிலிருந்து தப்பித்து ராஜஸ்தானுக்குள் நுழைந்தார்கள்.

பல மாதங்கள் அப்படி வந்த சிந்திக்களின் பசியைப் போக்கியது வெறும் இந்த அப்பளமும் தண்ணீரும்தான். வசதியாக இருந்த காலங்களில் இனிப்பும் காரமுமாய் உணவு சமைத்து உபசரித்த சிந்தி இன மக்கள் வறுமையிலும் உபசரிப்பில் மேன்மக்களாகவே வாழ்ந்தார்கள். அதன் அடையாளமாக ஒரு குடிசை வீட்டுக்கு நீங்கள் போனாலும், 'பப்பட் காவ்' என்று வாஞ்சையோடு உபசரிக்கிறார்கள். எல்லாமே பிரிவினையின் போது அப்பளம் என்ற உண(ர்)வு! 

இன்று அந்தப் பெண்களுக்கு 'பப்பட்' தயாரிப்பது குடிசைத் தொழில், பல இடங்களில் ஜென்டில் மேன் படத்தில் 'கிச்சா' அர்ஜூன் நடத்தும் அப்பளக் கம்பெனி போல விஸ்தாரமாக இருக்கிறது.

அப்பளம்
தொடர்: 90-ஸ் கிட்ஸ் கிரிக்கெட் - கிரிக்கெட் கார்ட் அலப்பறைகள்

கூடவே கைப்பக்குவமும் கூட்டுப் பொருட்களும் அப்பள மேக்கிங்கில் சேர்ந்துவிட, சிந்திக்கள் தயாரிக்கும் அப்பளத்துக்கு இன்று உலகம் முழுவதுமே ரசிகர்கள் உண்டு.

பாகிஸ்தானிலிருந்து மகாராஷ்டிராவின் உல்லாஸ்நகர் மற்றும் கல்யாண் மாவட்டங்களில் இருக்கும் புலம் பெயர்ந்த சிந்திக்கள் மிகப்பெரிய அப்பளத் தயாரிப்பு பிசினெஸில் கொழிப்பதன் பின்னணியில் இருப்பது பிரிவினைதான்.

டோர் டெலிவரி அப்பள வியாபாரத்தை இந்தியாவில் முதலில் ஆரம்பித்தது இவர்கள் தான். இப்படி 'பப்பட்' எனும் அப்பளத்தின் பின்னணியில் ஓர் இனத்தின் வீழ்ச்சியிலிருந்து எழுச்சிக்குப் போன வரலாறும் கலந்து இருக்கிறது. 

அப்பளத்தை அடுத்தமுறை நீங்கள்  சாப்பிடும்போது இந்தக் கதை நினைவில் வரும் தானே?

(தூசு தட்டுவோம்..!) 

அப்பளம்
தொடர்: நான் நிருபன் - 'Charming இசையமைப்பாளர்!'

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com