ரஷ்யாவில் பெண்மணி ஒருவர் பூனை குட்டி என நினைத்து சிறுத்தை குட்டியை வளர்த்து வந்ததாக ஒரு பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு 9.1 மில்லியன் பார்வையாளர்களும் 14 லட்சத்திற்கும் மேலான லைக்குகளும் குவிந்து வருகின்றன.
ரஷ்யாவில் பெண் ஒருவர் பூனை குட்டி என தவறாக நினைத்து சாலையோரத்தில் சிக்கி தவித்த கருப்பு பாந்தர் குட்டி ஒன்றை மீட்டு தன் வீட்டிற்குக் கொண்டு வந்தார். மீட்டு வரப்பட்ட கருப்பு சிறுத்தைக்கு "லூனா" என பெயர் வைத்து வளர்க்கத் தொடங்கினார். லூனா வளர வளர அது பூனைக்குட்டி அல்ல சிறுத்தை குட்டி என்பதனை அவர் உணர்கிறார்.
இருப்பினும், தன் செல்ல நாயோடு சேர்த்து அந்த சிறுத்தைக் குட்டியையும் அன்போடு வளர்த்து வருகிறார். அந்தப் பெண் சிறுத்தையைக் கண்டுபிடித்து வீட்டிற்குக் கொண்டு வந்த தருணம் முதல் அதன் ஒவ்வொரு வளர்ச்சி பருவம் வரை அனைத்தையும் வீடியோ பதிவாக பதிவு செய்து கொண்டார். சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இந்த சிறுத்தையின் வீடியோ, அப்பெண்மணி அவரது செல்ல நாய் மற்றும் மீட்கப்பட்ட கருப்பு சிறுத்தை ஆகியோருக்கும் இடையே உள்ள அன்பை வெளிப்படுத்துகிறது.
இன்ஸ்டாகிராமில் @Factmayor என்ற பயனாளரால் செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று இந்த வீடியோ பகிரப்பட்டது. இதுவரை இந்த வீடியோ 9.1 மில்லியன் பார்வையாளர்களையும் 14 லட்சத்திற்கும் மேலான லைட்களையும் பல அன்பார்ந்த கமெண்ட்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பற்றி பலர் கருத்து கூறி வருகின்றனர்.
"நன்றி! இந்த சிறுத்தை நாயுடன் வளர்க்கப்பட்டுள்ளது. எனவே, அது நல்ல நெறிகளை கற்று இருக்கும்", "லூனாவை வளர்ப்பதற்காக உங்களை ஆசீர்வதிக்கிறேன். நீங்கள் மூவரும் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்வீர்கள் என நம்புகிறேன்", "நீங்கள் அவ்வீட்டில் இருக்கக் கூடிய மோசமான ஒரு விலங்கு என்றால் அது நாயாக இருக்கும் என்று நினைப்பீர்கள். ஆனால், இந்த வீட்டில் நீங்கள் நேருக்கு நேர் சிறுத்தையைக் காணுவீர்கள்" என்று கருத்து வந்துள்ளன.
- க.ஆர்த்தி.