Tanjore
Tanjore  Tanjore
Lifestyle

Tanjore : 'உலகம் பூரா போஸ்டர் இருக்கு' - ஹெல்மட் விழிப்புணர்வை கலகலப்பாக்கிய ஆய்வாளர்!

டைம்பாஸ் அட்மின்

”உலகம் பூரா மேயரோட போஸ்டர் இருக்கு தெரியலையா” ஹெல்மட் விழிப்புணர்வில் கலகலப்பூட்டிய போக்குவரத்து ஆய்வாளர்!

தஞ்சாவூரில் மேயர் இராமநாதன் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன், இளம் பெண் ஒருவரிடம் யார் இது தெரியுதானு கேட்க அந்த பெண் தெரியாது என்றார். உடனே ரவிச்சந்திரன், மேயர் பா, ஏம்பா உலகம் பூரா அவரோட போஸ்டர் இருக்கு என சொல்ல, வடிவேலு கணக்கா அவரை பார்த்த மேயர் ”ஏங்க வைரல் ஆகிடும் நீங்க வேற சும்மா இருங்க” என்றார்.

தஞ்சாவூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மேயர் சண்.இராமநாதன் ஹெல்மட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று 50 நபர்களுக்கு விலையில்லா ஹெல்மட் வழங்கினார்.

தஞ்சாவூர் பெரியகோயில் சிக்னல் அருகே ஹெல்மட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை சண்.இராமநாதன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் இருவரும் மறைத்து நிறுத்தினர். உடம்பில் எங்கு அடிப்பட்டாலும் பிழைத்து விடலாம் தலையில் அடிப்பட்டால் பிழைக்க முடியாது எனவே வீட்டில் உள்ள அனைவரையும் டூவீலர் ஓட்டும் போது அவசியம் ஹெல்மட் அணிய வலியுறுத்துங்கள்.

அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தன் சொந்த பணத்தில் 50 நபர்களுக்கு மேயர் விலையில்லா ஹெல்மட் தருகிறார் என்ற ரவிச்சந்திரன் வாகன ஓட்டிகளை ஹெல்மட் அவசியம் குறித்த கோஷங்கள் எழுப்ப வைத்தார். பின்னர், தாய்குலமே வாங்க ஹெல்மட் வாங்கி தலையில் மாட்டிக்கங்க என டூவிலருடன் நின்ற பெண்களிடம் ரவிச்சந்திரன் சொல்ல மேயர் இராமநாதன் ஹெல்மட்டை கொடுத்தார்.

பின்னர் இருவரும் சிரித்தபடி குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். இதனை தொடர்ந்து அடுத்த முறை ஹெல்மட் அணியாமல் வரக் கூடாது என அன்பாக அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தார் மேயர். அப்போது ஹெல்மட் அணியாமல் வந்த இளம் பெண் ஒருவரிடம், ரவிச்சந்திரன் எதனால் ஹெல்மட் அணிய வேண்டும் என கேட்டு கொண்டிருக்க, ஏன் அணியவில்லை என்றார் மேயர்.

அதற்கு அந்த பெண் என்னிடம் ஹெல்மெட் இருக்கு என சொல்ல எங்கு இருக்கு என மேயர் கேட்க, டூவீலர் சீட்டின் அடிப்பகுதியில் இருந்த ஹெல்மட்டை எடுத்து அந்த பெண் காட்டினார். ஹெல்மட்டை கையில் வாங்கி மேலும், கீழும் திருப்பி பார்த்தார் மேயர்.

அப்போது ரவிச்சந்திரன் அந்த இளம் பெண்ணிடம் "யார் இது தெரியுதா"னு மேயரை காட்டி கேட்க அதற்கு அவர் "தெரியாது" என்பது போல் தலையாட்டினார். அதற்கு ரவிச்சந்திரன், "மேயர் பா, ஏம்பா உலகம் பூரா அவரோட போஸ்டர் இருக்கு" என சொல்ல சிரித்து கொண்டே சொல்ல வடிவேலு கணக்காக அவரை பார்த்த மேயர் ”ஏங்க வைரல் ஆகிடும் நீங்க வேற சும்மா இருங்க” என ஹெல்மட்டை அணிய வைத்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தார். இதனால் அந்த இடத்தில் எழுந்த சிரிப்பலை அடங்குவதற்கு நீண்ட நேரம் ஆனது.

சில தினங்களுக்கு முன்பு மேயர் இராமநாதன் பிறந்தநாள் கொண்டாடினார். அதற்கு அவருடைய ஆதரவாளர்கள் நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி அவரை வாழ்த்தி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். அதை தான் ரவிச்சந்திரன் அந்த பெண்ணிடம் சொல்லியிருக்கிறார் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

- கே.குணசீலன்.