Lovers Day
Lovers Day டைம்பாஸ்
Lifestyle

ரஷ்யா பெண்ணையும் தஞ்சாவூர் இளைஞரையும் இணைத்த காதல் ! | Lovers Day

டைம்பாஸ் அட்மின்

காதலுக்கு நாடு, மொழி, மதம், சாதி, இனம் என்ற எந்தப் பேதமும் கிடையாது. காதல் என்பதே சந்தோஷத்தைத் தரக்கூடியதுதான். அதுவும் காதலிக்கும் பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்கிற வாய்ப்பு கிடைக்கிறவர்கள் பாக்கியசாலிகள். அந்த வகையில் தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை தமிழ் முறைப்படி, காதல் திருமணம் செய்து கொண்டது பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். வயது 33. இவர் ரஷ்யா நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யோகா ஆசிரியராக வேலை செய்து வருகிறார். ரஷ்யாவைச் சேர்ந்தவர் அல்பினாலுக்கு வயது 31. இன்ஜீனியரான அல்பினால் பிரபாகரனிடம் யோகா கற்றுக் கொள்ள சென்றிருக்கிறார்.

அப்போது இருவருக்கும் மலர்ந்த காதல் நீயின்றி நானில்லை என்ற நிலைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்கள். அலிபினாலின் அம்மா மயூரா உள்ளூர் காதல் என்றால் பரவாயில்லை, வெளிநாட்டு காதல் புதிய ஊர், புது மனிதர்கள் சரியாக அமையுமா என தயங்கியிருக்கிறார்.

பிரபாகரன் மயூராவுடனும், தன் பெற்றோரிடமும் முறைப்படி பேசி சம்மதம் பெற்ற பிறகு திருமண ஏற்பாடுகள் களைக்கட்டின. அழைப்பிதழ் தொடங்கி உடை, உணவு வரை அனைத்தும் தமிழ் கலாச்சார முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உறவுகள் கூடி நிற்க பட்டுப்புடவை அணிந்து வந்த அல்பினால் தமிழ் பெண்களுக்கே உரிய வெட்கத்துடன் தலைகுனிந்து அமர்ந்திருக்க ஓதுவார்கள் தமிழில் வேதங்கள் வாசிக்க பிரபாகரன் அல்பினால் கழுத்தில் தாலி கட்டினார்.

பூக்கள் தூவி வாழ்த்திய அனைவரும் காதலுக்கு சாதி, மதம், மொழி, நாடு என எந்த அடையாளமும் கிடையாது என்பதை இந்த ஜோடியும் உணர்த்தியுள்ளனர் என பேசி சென்றனர். இது குறித்து புதுமாப்பிள்ளை பிரபாகரன் கூறியதாவது, "யோகா டீச்சரான என்னிடம், யோகா கற்றுக்கொள்ளும் மாணவியாக வந்த அல்பினால் இப்போது மனைவியாக நிற்கிறாள்" என்றார்.

மேலும், "பார்த்த உடனேயே அவள்தான் என் உலகம் என்று எனக்கு தோன்றியது. கொஞ்ச நாளில் அவளும் என்னைக் காதலிக்க தொடங்கினாள். தமிழ் கலாச்சாரத்தின் மேல் அவளுக்கு இருந்த ஈடுபாடும் எங்களை மேலும் இணைத்தது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் இரு வீட்டார் சம்மதத்துடன் எங்கள் ஊரான மதுக்கூர் கிராமத்தில் உறவினர்கள் சூழ திருமணம் செய்து கொண்டோம்" என்று தெரிவித்தார்.

அல்பினால் கூறியதாவது, ரஷ்யா கலாச்சாரத்தை விட எனக்கு தமிழ் கலாச்சாரம் ரொம்பவே பிடிக்கும். தமிழக மக்கள், விவசாயம், இயற்கை சார்ந்த வாழ்வியல் முறை என் மனசுக்கு எப்போதும் நெருக்கமானவை. தஞ்சாவூரின் மருமகளான நான் தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். சீக்கிரமே எல்லார்க்கிட்டேயும் சகஜமாக தமிழில் பேசுவேன். இனிமேல் நானும் ஒரு தமிழ் பெண் என பிரபாகரனை பார்த்து கண் சிமிட்டியபடி தெரிவித்தார்.

- கே.குணசீலன்.