குடை அர்ச்சகர் timepass
Lifestyle

'குடை வண்டி அர்ச்சகர் பராக் பராக்' - கரூரைக் கலக்கும் 'குடை அர்ச்சகர்' பாபு நடராஜன் !

"ஆஹா, குடை அர்ச்சகர் இந்தா குடைபவனி கிளம்பிட்டாருல்ல..', 'வெண்கொற்றக் குடை வண்டி அர்ச்சகர் பராக் பராக்' என்றெல்லாம் கமெண்ட் அடிக்க, அதை கேட்டு ரசித்தபடியே வண்டியை ஓட்டிக் காட்டினார்.

டைம்பாஸ் அட்மின்

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதிக்கு ரெகுலராக செல்பவர்களுக்கு, குடை அர்ச்சகரை ஒருமுறையாவது பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். தனது இருசக்கர வாகனத்தில், வெயிலின் உக்கிரத்தில் இருந்து தனது திருமேனியை பாதுகாக்கும் பொருட்டு, குடை மாதிரியான வஸ்துவை மாட்டி வைத்துக்கொண்டு அவர் சின்னதாராபுரத்து வீதிகளில் பவனி வரும் அழகை பார்க்கவே தனிக்கூட்டம் இருக்கிறது.

நாமும் ஒரு 'நல்ல நாளில்' வைத்துதான், அந்த 'குடை அர்ச்சகர்' பாபு நடராஜ குருக்களை வண்டியும், குடையுமாக பிடித்தோம். வெளியில் நின்ற தனது வண்டிக்கு தோதான அந்த குடை மாதிரியான அமைப்பை வீட்டுக்குள் இருந்து எடுத்து வந்து, சடுதியில் தனது வண்டியில் ஃபிட் செய்து, தனது வண்டிக்கு வெண்கொற்றக் குடையை(கருங்கொற்றக் குடை என்று விளிப்பதே சாலப்பொருந்தும்) தயார் செய்தார். நீள்வட்ட வடிவத்தில் அந்த குடை வண்டி மீது பரந்து விரிந்திருக்க, அதன் கீழ் அமர்ந்து, ராஜபவனி வரும் ராஜாக்கள்(?) கணக்காக அந்த வண்டியில் வலம் வந்தார்.

அந்த காட்சியைப் பார்த்த அங்கிருந்தவர்கள், "ஆஹா, குடை அர்ச்சகர் இந்தா குடைபவனி கிளம்பிட்டாருல்ல..', 'வெண்கொற்றக் குடை வண்டி அர்ச்சகர் பராக் பராக்' என்றெல்லாம் கமெண்ட் அடிக்க, அதை கேட்டு ரசித்தபடியே அந்த குடை வண்டியை, ஸாரி வண்டியை ஓட்டிக் காட்டினார். அவரை நிறுத்தி, "உங்க வண்டி புராணம் பாடுங்களேன்..." என்று கேட்டோம். தொண்டையைச் செருமியபடி, தனது வண்டி 'குடைகொண்ட வரலாறு' குறித்து விவரித்தார்.

"எனக்கு சொந்த ஊர் சின்னதாராபுரம்தான். இங்குள்ள அக்ரஹாரம் பகுதியில் தான் வீடு இருக்கிறது. எங்கப் பரம்பரைக்கே கோயில்களில் அர்ச்சகர் பணி செய்வது தான் தொழில். நான் எம்.ஏ சோசியாலஜி படிச்சு முடிச்சாலும், என்னோட 19 ஆம் வயதில் இருந்தே அர்ச்சகராகதான் பணிபுரிஞ்சுக்கிட்டு இருக்கிறேன்.

சுத்தியுள்ள கிராமங்களில் இருக்கும் கோயில்களில் பூஜைகள், திருமணம் நடத்தி வைப்பது, வீடு கிரகபிரவேசம், கோயில் கும்பாபிஷேகம் என்று சகல வைபோகங்களுக்கும் போவேன். இந்நிலையில்தான், கடந்த 10 வருஷத்துக்கு முன்னாடி இந்த வண்டியை வாங்கினேன். அதை வைத்து, எல்லா வைபோக நிகழ்ச்சிகளை நடத்த சென்றுவர ஆரம்பிச்சேன்.

கடந்த எட்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊரில் கோடை காலத்தில் கடுமையான வெயில் அடிக்க ஆரம்பிச்சது. கோடைக்காலத்தில் வண்டியில் பத்து கிலோமீட்டர் போய் வந்தாலே, அடிக்கும் வெயில் தரும் வெப்பத்தில், தலை கிறுகிறுத்துப்போய்விடும். அதோடு, வியர்வையில் உடல் தெப்பம் போல் ஆயிரும். இதனால், அந்த வெப்பத்தால் என்னோட சாரீரம் அல்லாட ஆரம்பிச்சது.

அப்போதுதான், 'இந்த வண்டியில குடை மாதிரி செஞ்சு மாட்டினா என்ன?'னு தோணுச்சு. வண்டி மெக்கானிக்குகள்கிட்ட கேட்டேன். 'அது சரியா வராது சாமி'னு சொன்னாங்க. அப்பதான், நான் சந்திச்ச கோயமுத்தூரைச் சேர்ந்த ஒருத்தர், 'தைவான்ல இதுபோல் இருசக்கர வாகனங்களில் மாட்டிச் செல்ல குடை இருக்கு. அது உங்களுக்கு வேணுமா?'னு கேட்டார்.

கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி அவர் எனக்கு தெரிஞ்சார். உடனே, அவர் கைகளை பிடிச்சுக்கிட்டு, 'எனக்காக ஒரு குடையை ஆர்டர் போடுங்க'னு கேட்டேன். ரூ. 2,200 வாங்கிகிட்டு, 15 நாள்ல இந்த குடையை எனக்கு அவர் தருவிச்சுக் கொடுத்தார். அதை மெக்கானிக் ஒருத்தர்கிட்ட எடுத்துக்கிட்டு போய், லேத் ஒர்க் மூலம் எனக்கு தகுந்தமாதிரி இந்த வண்டியில அந்த குடையை மாட்டுற மாதிரி கம்பியை ரெடி செய்து பிட் பண்ணினேன். சாதாரண குடை போல் இதை மடக்கி வைத்துக்கொள்ளலாம்.

வண்டியில் மாட்டும்போது அதை விரித்து, வண்டிக்கு முன்பு ஃபிட் செய்த கம்பியில் நுழைத்து, போல்டை டைட் பண்ணனும். நீள்வட்டம் வடிவில் விரியும் குடையின் பின்னே இருபக்கமும் தொங்கும் இரண்டு நாடாக்களை வண்டியோட பின்பகுதியில் இரண்டு பக்கமும் கட்டணும். அப்புறம், குடை ரெடியாயிரும். வண்டியில் ஏறி ஜம்முனு பயணிக்க வேண்டியதுதான். இப்படித்தான், கடந்த ஏழரை வருஷமா வெயில் வெப்பத்தால் என் உடல்நலத்துக்கு எந்த ஏழரையும் வராத அளவுக்கு வண்டியில பயணிக்க இந்த குடை உதவுது.

இந்த குடையை வண்டியில மாட்டிக்கிட்டு போனப்ப முதல்ல மக்கள், 'பொழப்பத்து போய் திரியிறார் குருக்குள்'னு கேலி பேசினாங்க. ஆனால், நடிகர் தனுஷை பார்க்கப் பார்க்க பிடிக்கும்ங்கிற மாதிரி, என்னோட இந்த குடை வண்டியை பார்க்கப் பார்க்க மக்களுக்கு புடிச்சுப் போய்ட்டு. அதன்பிறகு, எல்லோரும், 'குடை அர்ச்சகர்'னு என்னை அன்போடு அழைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த குடை வண்டியில பயணிச்சதால், சுத்துப்பட்டு மக்கள் மத்தியில சீக்கிரம் ஃபேமஸாயிட்டேன்

எல்லோரும் என்கிட்ட அன்னியோன்யம் காட்ட ஆரம்பிச்சாங்க. வீட்டுலயும் இதுக்கு எதுவும் சொல்லலை. சப்போர்ட்தான் பண்ணினாங்க. ஏழரை வருஷமா இந்த குடை பெருசா எந்த பழுதும் இல்லாம இருக்கு. இரண்டு முறை குடையோட துணி கிழிஞ்சது. அதை உடனே மாத்திட்டேன். ஆனால், குடையில் உள்ள கம்பிகள் எதுவும் ஆகாமல் அப்படியே இருக்கு. வீட்டுக்கு வந்ததும் குடையை கழட்டி வீட்டுக்குள் வைத்துவிடுவேன். மறுநாள் வண்டியை எடுக்கிறப்ப, மறுபடியும் குடையை மாட்டுவேன். வெயிலுக்கு மட்டுமல்ல, மழைக்காலத்துக்கும் இந்த குடை வண்டி என்னை ஜோராக பாதுகாக்குது.

அதேபோல், வண்டியில் இந்த குடையை ஃபிட் பண்ணியிருப்பதால், வண்டியில் நான் அமர்ந்து பயணிப்பதற்கோ அல்லது வண்டியை ஓட்டுவதற்கோ எந்த தொந்தரவும் ஏற்படாது. காத்து பலமா அடிக்கும் ஆடி மாசங்கள்ல மட்டும் குடைக்கு சேதாரம் ஆகாத அளவுக்கு வண்டியை ஒரு தினுசா ஓட்டுவேன். அதாவது, அதிக வேகம் போகாமலும், காத்து அடிக்கிற திசைக்கு தக்கவாறும் வண்டியை 'பேலன்ஸ் பண்ணி' ஓட்டுவேன்.

இப்போது, சின்னதாராபுரத்தில் உள்ள பெருமாள், விநாயகர் கோயில்கள், புல்லாகவுண்டன்பாளையம், மூலப்பட்டி கிராமங்களில் உள்ள முருகன் கோயில்கள் என்று 4 கோயில்களுக்கு ரெகுலராக பூஜை பண்ணிக்கிட்டு இருக்கிறேன். அதற்கு, தினமும் இந்த வண்டியில்தான் போய் வருகிறேன். தினமும் குறைஞ்சது 30 கிலோமீட்டர் தூரம் இந்த வண்டியில் பயணிச்சுருவேன்.

வெயில் அதிகம் என்றுதான் ஏழரை வருஷத்துக்கு முன்னாடி என்னோட வண்டியில் இந்த குடையை ஃபிட் பண்ணினேன். நான் குடையை ஃபிட் பண்ணின நேரமோ, என்னவோ கடந்த மூணு வருஷமா தமிழ்நாட்டிலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக எங்க ஊரை உள்ளடக்கிய க.பரமத்தி முதல்ல வந்திருக்கு. எத்தனை டிகிரி வெயில் பிச்சு எடுத்தாலும் எனக்கு கவலையில்லை. ஏன்னா, சூரியபகவான் கக்கும் வெப்பத்தில் இருந்து என்னை இந்த வண்டி குடையும், என் அப்பன் முருகனும் காப்பாத்துவாங்க. தொடர்ந்து, இந்த வண்டியில் குடையை மாட்டிக்கொண்டு காலம் முழுக்க விடாமல் பயணிப்பேன்" என்றார்.

வண்டி 'குடை'சாயாமல் ஓட்டும் இந்த அர்ச்சகர், சின்னதாராபுரத்து மக்களுக்கு செல்லப்பிள்ளை!

- துரை வேம்பையன்.

போட்டோக்ராபர் : ராஜமுருகன்