திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க.வின் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், பழனி எம்.எல்.ஏ., ஐ.பி.செந்தில்குமாரின் மனைவியுமான மெர்சி சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். வாட்ஸ்-அப் குழுக்களில் மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுப்பார்.
பத்து பேர் அடங்கிய குழு வைத்து இந்து கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளுக்கு சென்று கண்ணீர் வடித்து வேண்டுவது போல படம் காட்டுவார். அவ்வப்போது தனது முகநூலில் ஏதேனும் கருத்துகளை கூறி பரபரப்பு கிளப்புவார். என்னவென்று விசாரித்தால், முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டது என விளக்கமளிப்பார்.
அண்மையில் கூட, டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டவுடன், அமைச்சராக வாய்ப்பு கொடுக்கப்பட்ட புதியவரைவிட 25 ஆண்டுகால அனுபவம் உள்ள என் கணவருக்கும் அமைச்சராகும் வயது வந்துவிட்டது’ எனவும், 'என் கணவர் அமைச்சராவதற்கு அவரது தந்தையேகூட மனது வைக்கவில்லை’ என்றும் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக ‘மாமனாருடன் பேச விடாமல் தடுக்கிறார்கள். கணவர் வீட்டில் இருக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. என்னை மாமனார் குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் சேர்த்து வைக்க வேண்டும்’ என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார். பிறகு தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும் அந்தப் பதிவுகள் தான் போடவில்லை எனவும் மறுத்தார்.
இந்நிலையில், ஐ.பி.செந்தில்குமார் மற்றும் மெர்சி இருவரும் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் 'வலையோசை கலகலவென கவிதைகள் படித்திட தென்றல் காத்து வீசுதே' என பாடிய வீடியோவை அவர்களது ஆதரவாளர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். ஐ.பி.செந்தில்குமார் அவரது சொந்த ஊரான வத்தலகுண்டு பகுதியில் உள்ள நண்பர் ஒருவர் ஆர்க்கெஸ்ட்ரா நடத்தி வருகிறார்.
அவர் நடத்திய மேடை கச்சேரிகள் சிலவற்றில் பாடுவதில் ஆர்வம் கொண்ட ஐ.பி.செந்தில்குமாரும் பாடியுள்ளார். இதனால் தனியார் மஹாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தன் மனைவியுடன் சேர்ந்து பாடி அசத்தியதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதேவேளையில், தனது கட்சி அலுவலகத்தில் பார்க்க வந்த ஆதரவாளர்களை காக்க வைத்து போனில் பேசிமுடித்துவிட்டு, பிறகு அவர்கள் காலில் விழுவது போன்ற வீடியோ வெளியாகியது. இந்த வீடியோவுடன் விக்ரம் பட 'நாயகன் மீண்டும் வர்றான்' என்ற பாடலை இணைத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
சமூக நீதி பேசும் கட்சியில் இருந்து கொண்டு காலில் விழவைக்கிறார் என்ற விமர்சனமும், தொகுதியில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க தொகுதி பக்கமே எட்டி பார்க்காமல் மேடை கச்சேரிகளில் பாட்டு பாடுகிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.