TV Serials  timepass
Lifestyle

TV Serials : டிவி நடிகர்கள் ஏன் விவாகரத்து செய்கிறார்கள்?|சிறிய இடைவேளைக்குப் பிறகு Epi 11

செலிபிரிட்டிங்கிறதால இவங்க விஷயம் ஊருக்குத் தெரியுது என விவகாரத்தைக் கடக்க நினைக்கலாம். சினிமாவை விட அதிக விவாகரத்துக்களைச் சந்திக்கிற இடமாக சின்னத்திரை இருக்கிறது என்பதால்தான் பேச வேண்டி இருக்கிறது.

அய்யனார் ராஜன்

நடிகை ஷாலினியின் 'டைவர்ஸ் ஃபோட்டோஷூட்'தான் சீரியல் ஏரியாவில் இப்போதைய ஹாட் டாபிக். 'கல்யாணத்தை ஃபோட்டோ எடுப்பாங்க, இப்ப 'ப்ரீ வெட்டிங்'னு கல்யாணத்துக்கு முன்னாடியே போட்டோ எடுக்கிறாங்க. இதென்ன புதுசா? சண்டை போட்டுப் பிரிஞ்சாலும் போட்டோஷூட்டா' என இந்த நடவடிக்கையை பலரும் விமர்சனம் செய்த நிலையில், சிலர் ஷாலினிக்கு ஆதரவு தெரிவித்து அவர்பக்கமும் நின்றார்கள். 'எவ்வளவு கொடுமைப் படுத்தியிருந்தா இந்த மாதிரி ஒரு போட்டோஷூட் செய்யத் தோணியிருக்கும்னு நினைச்சுப் பாருங்க' என்கிறார்கள் ஆதரவு தெரிவிப்பவர்கள்.

'திருமணம், விவாகரத்து போன்றவை ஒருவரது தனிப்பட்ட விஷயம்' என்பது, பிரபலம் என்கிற இடத்துக்கு ஒருவர் செல்கிற போது செல்லாக்காசாகி விடுகிறது. சினிமாவோ, சீரியலோ அதிலிருக்கும் நட்சத்திரங்களின் வாழ்க்கையில் ஒரு பிரச்னை என்றால் அதைத் தெரிந்து கொள்ளத்தான் எல்லாருமே ஆர்வம் காட்டுகிற யுகம் இது.

'சாதாரண மக்களிலேயே பிடிக்காத திருமண பந்தங்களிலிருந்து தினமும் எவ்வளவோ பேர் விலகிப் போயிட்டுதான் இருக்காங்க, செலிபிரிட்டிங்கிறதால இவங்க விஷயம் ஊருக்குத் தெரியுது' என இந்த விவாகரத்து விவகாரத்தைக் கடக்க நினைக்கலாம் சிலர். ஆனால் சினிமாவை விட அதிக விவாகரத்துக்களைச் சந்திக்கிற இடமாக இப்போது சின்னத்திரை இருக்கிறது என்பதால்தான் இதுகுறித்துப் பேச வேண்டி இருக்கிறது.

இன்றைக்கு மொத்தச் சேனல்களிலும் சேர்த்து நாளொன்றுக்கு சுமார் ஐம்பது சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நான்கில் ஒருவர் திருமண உறவில் பிரச்னையில் இருப்பவராகவோ அல்லது இருந்தவராகவோதான் இருக்கிறார்.

நடிகை ரம்யா, தொகுப்பாளர் ரம்யா, டி.டி. பிரியங்கா, மகேஸ்வரி, நட்ராஜ், ஈஸ்வர், அசீம், திவ்யா, எனத் திருமண வாழ்வில் பிரச்னையைச் சந்தித்தவர்களின் பட்டியல் ரொம்பவே பெரியது.

முறைப்படி விவாகரத்து ஆகாத போதும் பிரிந்து வாழும் ரச்சிதா உள்ளிட்ட வேறு சிலரின் பட்டியலும் உள்ளது. 'தாடி'பாலாஜி -நித்யா போன்ற சிலரது விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் தற்போதும் நிலுவையிலிருக்கின்றன. ஏன் இப்படி? அதிகமான செலிபிரிட்டிகளின் விவாகரத்து வழக்குகளில் ஆஜராகி வரும் அந்தப் பெண் வழக்கறிஞரிடம் பேசினோம்.

''விவாகரத்து கேட்டு வருகிற செலிபிரிட்டிகள்ல பெரும்பாலானவர்களின் திருமணம், சம்பந்தப்பட்டவர்களுக்கு பிடித்தமான ஒரு திருமணமா முதல்லயே அமையாததுதான் பிரச்னையின் தொடக்கப்புள்ளியா இருக்கு. அதாவது ஏதோவொரு நிர்ப்பந்தத்துல நடக்கிற கல்யாணமா இருக்கு. கணவன் மனைவி ரெண்டு பேரும் செலிபிரிட்டியா இருந்தா, ஈகோ, யார் அதிகமா சம்பாதிக்கிறதுங்கிறதுல பிரச்னைன்னு தொழில் ரீதியாகவே வில்லங்கம் தொடங்கிடுது. ஒருத்தர் செலிபிரிட்டியா இருந்து இன்னொருவர் சாதாரணமானவரா இருந்தா ரெண்டு பேருடைய வாழ்க்கை முறைகள் ஒத்துப் போக மாட்டேங்குது.

அதனால என்னதான் கவுன்சிலிங் கொடுத்தாலும் இவங்களால சுமூகமாப் போக முடியறதில்லை. குழந்தை இருக்கிற சில தம்பதிகள் மட்டும் பிரிஞ்சாக் கூட அந்தக் குழந்தைக்காக சில விஷயங்களை ஓரளவு அட்ஜஸ்ட் செய்துட்டுப் போயிடுறாங்க'' என்கிறார் இவர்.

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் பேசிய போது, "விவாகரத்தாகிற எல்லா சின்னத்திரை ஆட்களுக்கும் பொதுவான ஒரு காரணம்னு இருக்க முடியாதுன்னு நான் நினைக்கிறேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னை. என்னைப் பொறுத்தவரை பாலாஜி ஏற்கெனவே திருமணமாகி அந்த உறவை முறிச்சுகிட்டுத்தான் என்னை ரெண்டாவதா திருமணம் செய்திருக்கார்னு நினைச்சேன். ஆனா அவர் எங்க திருமணத்துக்குப் பிறகும் முதல் மனைவி தரப்பில் தொடர்பிலிருந்ததாலதான் பிரச்னை.

முதல் திருமண பந்தத்தை மறக்க முடியாதபட்சத்துல சின்னச் சின்னச் சண்டைக்காக அவங்களைப் பிரிஞ்சுட்டு இன்னொருத்தர் கூட எதுக்குப் பழகணும்? கல்யாணம் செய்து ஏமாத்தணும்? அதனால அவங்கவங்களுக்கு இப்படித் தனிப்பட்ட காரணம் நிறைய இருக்கும். மத்தபடி பிரபல முகம்கிறதால இவங்க பிரச்னை ஈசியா பேசுபொருளாகிடுது'' என்றார்.

டிவி ஏரியாவில் காதலித்துக் கரம் பிடித்து சுமார் நாற்பதாண்டுகள் கடந்து வாழ்ந்து வருகிற ராஜேந்திரன்-ஶ்ரீலேகா தம்பதியினரிடம் பேசினோம்.

''ரொம்ப சுலபமான தீர்வு ஒண்ணு இருக்கு. அது வேற ஒண்ணுமில்ல, தொழில் வேற, குடும்ப வாழ்க்கை வேறன்னு நினைக்காம வாழறதுதான் பிரச்னைக்கான முதன்மையான காரணம். ஒரு சீரியலோ ரெண்டு சீரியலோ ஹிட் ஆகிடுச்சுன்னா வாழ்க்கையே மாறிட்டதா இப்ப இருக்கிற நடிகர் நடிகைகள் நினைச்சிக்கிடுறாங்க. அது தவறானது.

அந்த ரெண்டு சீரியலுக்குப் பிறகு ரெண்டு வருஷத்துக்கு வாய்ப்பேதும் இல்லைன்னா யாரும் நம்மைத் தேட மாட்டாங்க. சம்பாதிச்ச நாட்கள்ல ஆடம்பரமா வாழப் பழகியிருந்தா அந்த வாழ்க்கைக்கும் சிக்கல் வரும். கல்யாணமானவங்களா இருந்தா பொருளாதாரச் சிக்கலே மத்த எல்லாப் பிரச்னையையும் கொண்டு வந்திடும்'' என ராஜேந்திரன் சொல்ல, குறுக்கிட்டார், அவரது மனைவி ஶ்ரீலேகா..

''நடிகைகள் ஒரேயொரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். எவ்வளவு பெரிய நடிகையா இருந்தாலும், எவ்வளவு பெயர், புகழ் சம்பாதிச்சாலும் குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமா வச்சுக்கிட வேண்டியது பெண்களுக்கு அவசியம். கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகலாம். அதுக்காக கணவன்னா அடிச்சிட்டே இருப்பான், நாம பணிஞ்சே போகணும்னு எடுத்துக்க வேண்டியதில்லை. திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிற போது நடிகைகள் கூடுதல் அக்கறை ப்ளஸ் எச்சரிக்கையுடன் இருந்தாப் போதும்'' என்கிறார்.

எப்படியிருந்தபோதும் அவரவர் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது அவரவர் முடிவே.

அடுத்த வாரம் பார்க்கலாம்.