ஹீரோ ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருப்பார். அந்த வீட்டுக்கு வேலைக்காரியாக வருவார் ஹீரோயின். இருவருக்கும் இடையில் காதல் உருவாகும். அந்தக் காதல் நிறைவேறி ஹீரோவும் ஹீரோயினும் வாழ்க்கையில் இணைவார்களா என்பதை மூன்று நான்கு வருடங்கள் நீட்டிப்பார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி', 'ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' ஆகிய இந்த இரண்டு சீரியல்களின் கதையும் மேலே சொன்ன ஃபார்மட்தான்.
கதையைப் பட்டி டிங்கரிங் செய்து ஒளிபரப்பிய காலமெல்லாம் பழசாகி விட்டது. இப்போதெல்லாம், 'ஹிட் சீரியலா, அதில் நடிச்சிட்டிருக்கிற ஆர்ட்டிஸ்டுகளைத் தூக்கிட வேண்டியதுதான்' எனக் களம் இறங்கி விட்டன சேனல்கள்.
ஒருவேளை அவங்களை இழுக்க முடியலையா, அந்த சீரியல் முடியறதுக்குக் காத்திருந்து, முடிஞ்சதும் சூட்டோடு சூடாக் கூட்டி வந்து புது புராஜெக்டுக்குப் பூஜையைப் போட்டுட வேண்டியது.
'வியாபாரமென வந்து விட்டால் போட்டி இருக்கத்தான் செய்யும்' என்கிறீர்கள்தானே, கரெக்ட். ஆனா சேனல்களுக்கிடையிலான இந்தப் போட்டி, ஆர்ட்டிஸ்டுகள் சிலரை தலைகால் புரியாம ஆட வச்சிடுதுங்கிறதுதான் இதில் ஹைலைட்.
அப்படி ஆடத் தொடங்கி இருக்கும் ஒரு ஹீரோ மற்றும் நாயகியின் கதையைத்தான் பேசப் போகிறது, இந்த வார 'சிறிய இடைவேளைக்குப் பிறகு'
முன்னணி சேனலில் வருடக் கணக்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த சீரியல் அது. சமீபத்தில் முடிவடைந்தது. அதில் நடித்த ஹீரோயினுக்கு உடனடியாக வலை வீசியது போட்டி சேனல் ஒன்று.
'நீங்கதான் வேணும்' என சேனல் நிற்பதைப் புரிந்து கொண்ட ஹீரோயின், 'பண்ணிக்கலாம், ஆனா கால்ஷீட்னெல்லாம் நீங்க எங்கிட்டக் கேக்கக் கூடாது, நான் எத்தனை நாள் சென்னையில இருக்கேனோ, அத்தனை நாள் ஷூட்டிங் வச்சுக்கோங்க' என எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி வார்த்தைகளை வீசி இருக்கிறார், ஐதராபாத்தைச் சேர்ந்த அந்த ஹீரோயின்.
தொடர்ந்து, 'ஷூட்டிங்கிற்கு வந்து போக பிரைவேட் கார்தான் வேணும்', 'லீவுல இருந்தா யாரும் ஃபோன் பண்ணக் கூடாது'.. என்கிற ரீதியில் அடுக்கடுக்காக சில கன்டிஷன்களைப் போட்டாராம்.
பழைய சேனலில் வாங்கிக் கொண்டிருந்ததை விட நிறையவே சம்பளமும் பேசிவிட்டதால், 'இந்த நிபந்தனைகளையெல்லாம் ஏத்துக்கணுமா' என முதலில் யோசித்தார்களாம் சேனல் தரப்பினர். பிறகு 'சீரியல் ஹிட் ஆனா போதும்' என மனசைத் தேத்திக் கொண்டு எல்லாவற்றிற்கும் தலையாட்டி இருக்கிறார்கள்.
'எல்லாம் அந்தத் தயாரிப்பு நிறுவனத்துக்காரங்க பண்ணினது. கேட்டதையெல்லாம் கொடுத்து, கெடுத்து வச்சிருக்காங்க' என நாயகி நடித்த அந்த பழைய சீரியலின் தயாரிப்பாளர்களை இப்போது திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாயகியோ எது குறித்தும் அலட்டிக் கொள்ளாமல் பிரைவேட் காரில் இப்போது ஷூட்டிங் போய் வந்து கொண்டிருக்கிறார்.
'நீங்க ஹீரோயினைப் பிடிச்சிட்டீங்களா, நாங்க அந்த ஹீரோவைத் தூக்குறோம் பாருங்க' என இன்னொரு போட்டி சேனலில், புதிதாக தொடங்கப்பட இருந்த 'சீசன் 2' சீரியலுக்காக அந்த ஹீரோவிடம் தூண்டிலை வீசினார்கள்.
மேற்படி ஹீரோ ஒரு உஷார் பார்ட்டி எனத் தெரிந்தோ என்னவோ, சேனலும் கொஞ்சம் உஷார் ஆகி, ஹீரோவைத் தேர்ந்தெடுக்கிற பொறுப்பை தயாரிப்புத் தரப்பிடம் விட்டு விட்டது. ஹீரோவுமே பக்கத்து மாநிலத்துகாரர்தான்.
தயாரிப்புத் தரப்பில் அவரிடம் பேசிய போது, தன் பங்குக்கு அவரும் ரொம்பவே பிகு செய்தபடி சம்பளத்தை ரொம்பவே உயர்த்திக் கேட்டிருக்கிறார். தயாரிப்புத் தரப்பும் அந்தச் சம்பளத்தைத் தரச் சம்மதித்து விட்டது.
ஆனாலும் உறுதி செய்ய சில நாட்கள் தாமதமாக, 'தெலுங்குல என்னைக் கூப்பிடுறாங்க; அதனால நீங்க சீக்கிரம் உறுதி பண்ணுங்க' என நச்சரித்து ஒருவழியாகக் கமிட் ஆகி விட்டார்.
'கேட்ட சம்பளத்தைக் கொடுத்துட்டோம், அதனால கொஞ்சம் ஒத்துழைப்பு தந்து சீரியலை நல்லபடியாக் கொண்டு போக உதவணும்' எனக் கேட்டுக் கொண்டு சீரியலின் ஷூட்டிங்கையும் தொடங்கினார்களாம்.
அந்த சேனலில் லேட் நைட் ஷூட் என்பதெல்லாம் வழக்கமானதுதான். ஆனால் இந்த ஹீரோவோ 'ராத்திரி ஒன்பது மணி ஆச்சுன்னா, அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட நான் இருக்க மாட்டேன்' என்கிறாராம்.
அதேபோல் இங்கு கமிட் ஆனதும் சைலண்டாக தெலுங்கில் வந்த சீரியல் வாய்ப்பையும் ஏற்றுக் கொண்டாராம். அதாவது மாதத்துக்கு 15 நாள் இங்கு, 15 நாள் அங்கு என பிரித்துக் கொண்டார்.
'சம்பளத்தையும் அதிகமாக் கொடுத்து இந்த ஆளாள பெரிய பிரச்னையா இருக்கு; இதனாலதான் ஆரம்பத்துலயே சொன்னோம்' என சேனல் தரப்பு முணுமுணுக்க, தயாரிப்பாளரோ எப்படி இந்தப் பிரச்னையைச் சரி செய்வது எனத் தெரியாமல் குழம்பிப் போய்க் கிடக்கிறார்.
'வாசம் தருகிற பூவுல முள்ளும் இருக்கும்'தானே, நாமதான் பார்த்துச் சூதானமா செயல்பட்டிருக்கணும் என இப்போது இரண்டு சேனல் ஆட்களும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஹீரோ ஹீரோயின் யாருன்னுதானே கேக்கறீங்க, கடந்த வாரம் மாதிரி இந்த வாரமும் ஒரு க்ளூதான் நீங்க தான் கண்டு பிடிக்கணும். க்ளூ..கட்டுரையின் கடைசி பத்தியில்..
ஓ.கே. அடுத்த வாரம் பார்க்கலாம்.
- அய்யனார் ராஜன்.