Dhoni timepass
Lifestyle

Dhoni : உலக்கோப்பை தோல்வி - IPL 2020 இல் தோனி சொன்னது நினைவிருக்கா? | Ind vs Aus

ராகுல் டிராவிட் அந்தத் தோல்விக்கு அப்புறமா, "நாளை காலை சூரியன் எப்பவும் போல எழும், நாங்கள் அதில் இருந்து கற்றுக் கொள்வோம்"னு கிட்டத்தட்ட தோனி கூறியது போன்ற வார்த்தைகள தான் சொல்லியிருந்தாரு.

Ayyappan

உலுக்கி எடுத்த உலகக்கோப்பை தோல்வியிலிருந்து முழுவதுமாக மீண்டு வர இந்திய வீரர்கள் தற்சமயம் நினைவுல வச்சுக்க வேண்டியது, 2020 ஐபிஎல் அப்போ தோனி சொன்ன வார்த்தைகளைத் தான்.

2022 சீசன்ல சிஎஸ்கே எவ்வளவு மோசமாகத் தோத்ததுன்னும், ஒன்பதாவது இடத்துல முடிச்சதுன்னும் எல்லோருக்கும் தெரியும். அந்தத் தொடர் நடந்துட்டு இருக்கப்போ வரிசையா தோத்துட்டு இருந்த சிஎஸ்கே டில்லிக்கு எதிரா ஒரு பெரிய வெற்றியை பதிவு பண்ணுச்சு. அப்போவும் எட்டாவது இடத்துக்கு தான் முன்னேற முடிஞ்சது. அப்போ அதற்கடுத்து மூன்று போட்டிகளையும் ஜெயிச்சா ஒருவேளை ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான கதவு திறக்கப்படாடியும் ஜன்னல் திறக்கும்ன்ற நிலைமை.

அப்போ டில்லிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, தோனிகிட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பு சிஎஸ்கேவுக்கு இருக்கா அப்படின்னு கேட்கப்பட்டுச்சு. அதற்கு தோனி, "ப்ளே ஆஃப் ஆடினா சிறப்பாக இருக்கும், அப்படி ஆட முடியாமலே போனால் கூட, அது உலகத்தோட முடிவு கிடையாது"னு பதில் சொல்லி இருந்தாரு.

உண்மைதான், அந்த சீசன்ல வெற்றி கிடைக்கல, சிஎஸ்கே மறக்க நினைக்கற கசப்பான சீசனாக அது முடிஞ்சது. ஆனால், அதற்கு அடுத்த சீசன்லயே கம்பேக் கொடுத்து நடப்பு சாம்பியனாகவும் ஜொலிக்குதுன்னா அதுக்கு முக்கியக் காரணம், முந்தைய சீசனின் தோல்வி தந்த வலியும், அச்சாணி உடைஞ்ச தேராக அங்கேயே தேங்கி நிற்காம தோனி அணிக்கு உத்வேகம் கொடுத்து முன்னேற வச்சதும் தான்.

சமயத்தில் லீக் தொடர்களில் இருந்து கூட சர்வதேசக் கிரிக்கெட்டுக்கான பாடம் கிடைக்கும். இதுகூட அப்படி ஒரு கதைதான். இந்திய அணி நினைவுல வச்சுக்கிட வேண்டிய பாடம் தான். 2022-ல் அவங்க நாட்டுல வச்சு நடந்த டி20 உலகக்கோப்பைல மோசமான தோல்வி அடைஞ்ச அதே ஆஸ்திரேலியா தான், இந்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக்கோப்பை ரெண்டையுமே தட்டித் தூக்கிருக்கு.

ராகுல் டிராவிட் அந்தத் தோல்விக்கு அப்புறமா, "நாளை காலை சூரியன் எப்பவும் போல எழும், நாங்கள் அதில் இருந்து கற்றுக் கொள்வோம்"னு கிட்டத்தட்ட தோனி கூறியது போன்ற வார்த்தைகள தான் சொல்லியிருந்தாரு. உலகம் முழுவதும் பல பதிப்புகள் விற்றுத் தீர்ந்த, "The Monk Who Sold His Ferrari" புத்தகத்த எழுதுன ராபின் ஷர்மாவும், ரோஹித் ஷர்மா அண்ட் கோவுக்கு அனுப்பியிருந்த செய்தியில் இதையேதான் சொல்லி இருந்தாரு, "மிகச் சிறந்த சாம்பியனா ஒருத்தர உருவாக்கி வைக்கிறது தோல்வி அல்ல, அதிலிருந்து நாம கத்துக்குற பாடமும், அதை நாம எப்படி அணுகி முன்னிலும் வலுவாக திரும்பி வர்றோம்ன்றதுல தான் இருக்கு"னு சொல்லி இருந்தாரு.

எல்லோரும் சொல்லி உள்ளதைப் போல, ஒருநாள் உலகக் கோப்பையில் விட்டதை டி20 உலகக் கோப்பையில் நேர்செய்யும் வாய்ப்பு, அடுத்த வருஷமே இந்தியாவுக்குக் காத்திருக்கு. ஆரம்பிக்கப் போற ஆஸ்திரேலியாவோட டி20 தொடர் அதுக்கான ஆரம்பப் புள்ளி. அதை ஆதாரப் புள்ளியாக வச்சு, கத்துக்கிட்ட பாடத்த மட்டும் கைல எடுத்துட்டு அடுத்த இலக்கை நோக்கி இந்தியா ஓட வேண்டும் என்பது மட்டுமே அனைவரது விருப்பமும்!

வைரமுத்துவோட வரிகள் மாதிரி,

"சுற்றும் வரை நெருப்பு,

சுழலும் வரை பூமி,

போராடும் வரைதான் மனிதன்"!