அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாகப் பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாகச் சொல்லப்படும் வழக்கில் இப்போது கைதாகியிருக்கிறார். அப்போது செந்தில்பாலாஜியைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய தி.மு.கவோ இப்போது வரிந்துகட்டிக்கொண்டு செந்தில் பாலாஜியை ஆதரிக்கிறது.
எந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி மோசடி செய்ததாகச் சொல்லப்பட்டதோ அந்த அ.தி.மு.க.வோ இப்போது செந்தில் பாலாஜியைக் கடுமையாக எதிர்க்கிறது. இதைத்தான் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்றார் கவுண்டமணி. சரி செந்தில்பாலாஜி இந்த இரண்டு கட்சிகள் மட்டும்தான் மாறினாரா என்பதைப் பார்ப்போம்.
அரசியல் மீது இருந்த ஆர்வம் காரணமாக தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய செந்தில் பாலாஜி 1994ஆம் ஆண்டு மதிமுக-வில் இணைந்தார். இரண்டே ஆண்டுகள்தான் ம.தி.மு.க.வில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி 1996ல் திமுக-வில் இணைந்தார். ஆனால் அங்கு தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் 4 ஆண்டுகளுக்கு பின் 2000ல் திமுகவிலிருந்து விலகி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் சேர்ந்த சில நாட்களிலையே செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு, அடுத்து படிப்படியாக கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், கரூர் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என தனது அரசியல் வாழ்க்கையில் உயரத்தை நோக்கி சென்றார். இதனையடுத்து 2006, 2011, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் 2011-2015 வரை அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகவும், செல்லப்பிள்ளையாகவும் இருந்தார். ஆனால் 2015 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜிக்கு இறங்கு முகம் தொடங்கியது, அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவால் செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் காரணமாக எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து தினகரன், சசிகலா மன்னார்குடி குடும்பத்தை அதிமுகவில் இருந்து நீக்கிவைத்தனர். அப்போது தினகரனின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டவர்தான் செந்தில்பாலாஜி. எடப்பாடி ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் 2017ஆம் ஆண்டு சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக செந்தில் பாலாஜி இருந்தார்.
டிடிவி தினகரனோடு ஏற்பட்ட அதிருப்தி மற்றும் தனது அடுத்தகட்ட அரசியல் வாழ்க்கையை கருத்தில் கொண்டு தனது ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்தார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் இப்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார் செந்தில்பாலாஜி.
வைகோ, கலைஞர், ஜெயலலிதா, தினகரன், ஸ்டாலின் என்று தன் தலைமையை மாற்றிக்கொண்டே வந்த செந்தில்பாலாஜி இனியாவது தி.மு.க தலைமைக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பாரா என்பதைக் காலம்தான் சொல்லும்.