ஆசியாவின் குட்டி நாடான சிங்கப்பூரின் அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் நிறைவடைந்ததால், சிங்கப்பூரின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம், இங் கொக் சொங், டான் கின் லியான் ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சுமார் 27 லட்சம் வரையிலான மக்கள் வாக்களித்தனர்.
பின்னர், இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அன்னாசிப் பழம் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70.40% (1,746,427 வாக்குகள்) வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இங் கொக் சொங் 15.72% (390,041 வாக்குகள்) மற்றும் டான் கின் லியான் - 13.88% (344,292 வாக்குகள்) மட்டுமே பெற முடிந்தது.
சிங்கப்பூரில் ஆதிக்கம் செலுத்தும் இந்த தர்மன் சண்முகரத்னம் யார்?
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களான தர்மன் சண்முகரத்னத்தின் குடும்பம் காலப்போக்கில் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தது. இவர் சிங்கப்பூரில் ’நோயியலின் தந்தை’ என்று அழைக்கப்படும் மருத்துவ விஞ்ஞானியான கனகரத்னம் சண்முகரத்னதின் மகனாக சிங்கப்பூரில் பிப்ரவரி 25, 1957 ஆம் ஆண்டு பிறக்கிறார். இவரின் பள்ளிப்படிப்பை சிங்கப்பூரில் உள்ள ஆங்கிலோ - சீனப் பள்ளியில் முடித்தார்.
மேலும், கல்லூரி படிப்பை லண்டன் கூல் ஆப் எக்னாமிஸில் இளங்கலை பொருளாதார் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வொல்ப்சன் கல்லூரியில் முதுகலை பொருளாதார் (தத்துவம்) பட்டமும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் (MPA) பெற்றார். பின்னர் இவர் சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யுமிகோ இட்டோகியை திருமணம் செய்தார்.
தர்மன் சண்முகரத்னத்தின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கை:-
பிறகு அரசியல் பயணத்தை ஆளும் மக்கள் செயல் கட்சியில் (PAP) சேர்ந்து, 2001ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கல்வி அமைச்சரானார், பின்னர் நிதியமைச்சர், மனிதவள அமைச்சர் மற்றும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார். பிறகு 2011 முதல் 2019 வரை துணைப் பிரதமராகவும், 2019 முதல் 2023 வரை மூத்த அமைச்சராகவும் இருந்தார்.
2023 இல், தர்மன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இதைச் செய்ய, அவர் தனது அனைத்து அரசாங்க பதவிகளையும் விட்டுவிட்டு, மக்கள் செயல் கட்சியின் (PAP) உறுப்பினராக இருப்பதை நிறுத்த வேண்டியிருந்தது, ஏனெனில் ஜனாதிபதி பதவி ஒரு கட்சி சார்பற்ற பணியாகும்.
அரசியல் வாழ்க்கையை தாண்டி தர்மன் ஒரு தீவிர விளையாட்டு ஆர்வலர். இவர் ஆங்கிலோ-சீனப் பள்ளியில் மாணவராக இருந்தபோது, அவர் தனது படிப்பில் , முற்றிலும் ஆர்வமற்றவராக இருந்தார். இதனால் அவர் படிப்பில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட், தடகளம், கைப்பந்து, செபக் தக்ரா மற்றும் ரக்பி போன்ற ஏராளமான விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தினார். இவர் சிங்கப்பூர் கிரிக்கெட் கிளப் மற்றும் சிங்கப்பூர் ரிக்ரியேஷன் கிளப்பிற்காக முதன்மையான ஹாக்கி லீக்கில் விளையாடியுள்ளார்.
இருப்பினும் இவர் ஆர்வத்தை காலம் விட்டுவைக்கவில்லை, இவரின் 17 வயதில் அவருக்கு கடுமையான இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை ஏற்பட்டபோது அவரது விளையாட்டு முயற்சிகள் முடிவுக்கு வந்தன. அந்த நோய் அவரது இதயத்தை கடுமையாக பாதித்தது, எனவே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாளைக்கு சுமார் 25 மாத்திரைகளை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் உடல்நிலை காரணமாக விளையாட்டிலிருந்து விலகியவர் பின்னர், புத்தகங்கள் வாசிப்பிலும், கவிதை எழுதுவதிலும் திரும்பியது. அவர் மலேசிய மற்றும் சிங்கப்பூர் கவிதைகளை விரும்பிப் படிக்கும் தீவிர ரசிகராக இருந்தார். 1978 ஆம் ஆண்டில், அவரின் பள்ளித் தோழர்கள் இருவருடன் இணைந்து, " ஆனால் எங்களிடம் புராணக்கதைகள் இல்லை" என்ற தலைப்பில் ஒரு கவிதைப் புத்தகத்தைத் தொகுத்துள்ளார். மேலும் அவர் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் இளம் எழுத்தாளர்கள் வட்டத்தின் உறுப்பினர்கவும் இருந்தார்.
- மு.குபேரன்.