AIIMS  AIIMS
அரசியல்

Madurai AIIMS vs Guindy Hospital : 8 ஆண்டு கால எய்ம்ஸும் 15 மாத கிண்டி மருத்துவமனையும்!

ராதிகா நெடுஞ்செழியன்

அறிவித்து எட்டு ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத மதுரை எய்ம்ஸ், இரண்டே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை இரண்டுக்குமான வித்தியாசத்தைப் பார்ப்போமா?

2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் எட்டு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. 2018 எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தேர்வு நடைபெற்றது‌.

அதே ஆண்டு தோப்பூர் என்ற இடத்தை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடமாக தேர்ந்தெடுத்தனர். கிட்டத்தட்ட 1264 கோடி ரூபாய் மதிப்பில் 201.75 ஏக்கரில் இந்த மருத்துவமனை அமையும் என்று கூறப்பட்டது. அதற்கு அடுத்த வருடமே அதாவது ஜனவரி 2019ல் பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மோடி அடிக்கல் நாட்டிவிட்டுப் போனாரே தவிர, ஒரு துரும்பையும் அசைக்கவில்லை.

சில செங்கற்கள் மட்டுமே கொட்டிக்குவிக்கப்பட்ட நிலையில் கிடைந்தது. இதைத்தான் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது ஒத்தைச் செங்கலைத் தூக்கிக்காட்டி உதயநிதி கலாய்த்து பிரசாரம் செய்தார். அதற்குப்பிறகு இரண்டு ஆண்டுகள் கழிந்தபிறகும் இன்னும் மதுரை எய்ம்ஸ் கட்டப்படவில்லை. 2022 செப்டம்பர் மாதத்தில் கட்சி நிகழ்வில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வேலைபாடுகள் 95 சதவிகிதம் முடிவடைந்ததாக தெரிவித்தார்.

இந்த பேச்சு தமிழக மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் அப்போதும் செங்கல்தான் இருந்ததே தவிர கட்டடப் பணிகள் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி, இப்பொழுது நான்கு வருடம் ஆகிவிட்டது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. மத்திய அரசிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நடப்பு சூழலைப்பற்றி கேட்டபோது, டிசம்பர் 2024 தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் எனவும், 2028 ஆம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2015ல் அறிவிப்பு வெளியாகி 2019-ல் அடிக்கல் நாட்டி 2028ல் கட்டுமான பணிகள் முடிவடையும் என்னும் அளவுக்கு மத்திய அரசு இப்படி சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்குக் காரணம், மத்திய பா.ஜ.க அரசுக்குத் தமிழ்நாட்டின்மீது உள்ள அலட்சியம்தானா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் தமிழ்நாட்டுக்கு எம்ய்ஸ் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில்தான் இமாசலப்பிரதேசத்துக்கும் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது. அங்கே எய்ம்ஸ் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு மோடி திறந்தும் வைத்துவிட்டார். அதுவும் இமாசலப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது மோடி திறந்துவைத்தார். ஆனால் மதுரையிலோ எம்ய்ஸ் பணிகள் இன்னும் முடிவடையவே இல்லை.

இதேநேரத்தில்தான் இரண்டே ஆண்டுகளில் கிண்டியில் தமிழ்நாடு அரசு மருத்துவமனையைக் கட்டி முடித்துள்ளது. சென்னை, கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ரூபாய் 230 கோடியில் 4.89 ஏக்கரில் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2021 ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.

அதன்படி 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த பன்னோக்கு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் இந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையின் கட்டிட வேலை முடிவடைந்தது.

மேலும், இந்த மருத்துவமனையின் தொடக்க விழா ஜூன் 5ஆம் தேதி திட்டமிடப்பட்டது. ஆனால் குடியரசு தலைவர் திரௌபதி மூர்ம் வெளிநாடு பயணம் சென்றதால் ஜூன் 15க்கு இந்த தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் குடியரசு தலைவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் ஜூன் 15ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படுகிறது.

6 வருடத்திற்கும் மேல் இழுபறியில் இருக்கும் மதுரை எய்ம்ஸ் ஒருபுறம், பதினைந்தே மாதத்தில் தொடக்க விழா நடைபெறும் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை மற்றொரு புறம்...