'அதிசய ராகம்: ஒரு அபூர்வ காதலின் கீதம்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 10

முதல் இரண்டு சரணங்களில் மஹதி ராகத்தைப் பயன்படுத்திய எம்.எஸ்.வி. மூன்றாவது சரணத்தில் பைரவி ராகத்திற்கு மாறினார். ஏனெனில் மூன்றாவது சரணத்தில்தான் கமல் நேரிடையாக ஶ்ரீவித்யாவிடம் தனது காதலை தெரிவிப்பார்.
அதிசய ராகம்
அதிசய ராகம்டைம்பாஸ்

22 வயது பாலு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிஎஸ்ஸி அக்ரிகல்ச்சர் படித்துவிட்டு, அந்த தேயிலை எஸ்டேட்டில் அசிஸ்டென்ட் மேனேஜர் ட்ரெய்னியாக சேர்ந்தபோது மேனேஜரிடம் ஜாயினிங் லெட்டரைக் கொடுத்தான். மேனேஜர் என்றவுடன் சட்டென்று உங்கள் மனத்தில் தோன்றும் காதோரம் நரைத்த, தடித்த ஃபிரேம் கண்ணாடியணிந்த, கோட் சூட் போட்டுக்கொண்டு “கெட் அவுட்…” என்று கத்தும் மேஜர் சுந்தரராஜனை மறந்துவிடுங்கள். இந்த மேனேஜர்… பெண். பெயர் அனுரேகா. வயது 35.

       பெண்களின் அழகில் பல்வேறு பருவங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வயதில் தங்கள் அழகின் அதி உச்சத்தில் இருப்பார்கள். சிலர் 18 வயதில். சிலர் 20 வயதில். அது இளமை பொங்கி வழியும், பகல்கனவுகளும் ஏக்கங்களும் கண்களில் ததும்பி நிற்கும் ஆர்ப்பாட்டமான அழகு.  சில பெண்களிடம் 30 வயதுக்கு மேல், இளமையின் கனவுகள், ஏக்கங்கள், பரபரப்புகள் எல்லாம் ஓய்ந்து ஒரு அமைதியான அழகு சுடர்விடும். அனுரேகா கழுத்தில் தாலியுடன் இந்த அமைதியான அழகில் இருந்தாள்.

பாலு அனுவை முதன்முதலாக பார்த்தபோது அவள் பூ மீது பூ அமர்ந்திருப்பது போல் ரோஸ் நிற புடவை மேல் ரோஸ் நிற ஸ்வெட்டருடன், “உங்க நேட்டிவ் ப்ளேஸ் என்ன?” என்று கேட்டபோது, “நீங்கள் இருக்கும் இடம்தான்” என்று சொல்ல நினைத்தான். கடவுள் அந்த அபூர்வமான அழகை ஏழு கடல், ஏழு மலை தாண்டி இந்த எட்டாவது மலையில் பச்சைப்பசேலென்ற தேயிலைத் தோட்டத்துக்கு நடுவே தேயிலை ஃபேக்டரியில், ஒரு பத்துக்கு பத்து அறையில் ரோஸ் நிற ஸ்வெட்டருக்குள் ஒளித்து வைத்திருந்தார். திருமணமாகி, பிள்ளை பெற்ற பெண்களுக்கே உரிய சற்றே பூசினாற்போன்ற சதைப்பற்றான உடல்வாகு. முகத்தில் இன்னும் மிச்சமிருக்கும் இளமையில் முதிர்ச்சி சற்றே எட்டிப்பார்க்கும் போது உருவாகும் ஒரு புதிய அழகின் கலவையில் இருந்தாள் அவள்.

“சொந்த ஊர் தஞ்சாவூர்…” என்ற பாலு அனுவின் டேபிளிலிலிருந்த தி.ஜானகிராமனின் உயிர்த்தேன் நாவலைப் பார்த்துவிட்டு, “உங்களுக்கு தி.ஜானகிராமன் பிடிக்குமா?” என்றான் ஆச்சர்யத்துடன். அவள் அதை விட ஆச்சர்யத்துடன், “உங்களுக்கு தி.ஜானகிராமன தெரியுமா?”” என்றாள். அழகான பெண்கள் தங்கள் அகன்ற விழிகளில் ஆச்சர்யப்படும்போது மேலும் அழகாகிவிடுகிறார்கள்.

“தெரியும்ங்க…” என்றான் பாலு.

“நிஜமாவா?” என்ற அவள் கண்களில் இன்னும் ஆச்சர்யம் விலகவில்லை. அந்த ஆச்சர்யத்தில் உருவாகும் அபூர்வ அழகிற்காக அவளை வாழ்நாள் முழுவதும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டேயிருக்கலாம் என்று தோன்றியது.

அதிசய ராகம்
'பருவமே… புதிய பாடல் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 9

அவள் பழைய சினிமா கதாநாயகிகள் போல் இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்தபடி, “அய்யோ… நம்பவே முடியலங்க. நிஜமாவே நீங்க தி.ஜானகிராமன் படிச்சிருக்கீங்களா?” என்றவுடன் ‘உயிர்த்தேன்’ புத்தகத்தை எடுத்த பாலு பின் அட்டையில் இருந்த தி.ஜானகிராமனின் புகைப்படத்தின் மீது கையால் அடித்து சத்தியம் செய்து, “தி.ஜானகிராமன் மேல சத்தியமா படிச்சிருக்கன்ங்க…” என்றவுடன் சிரித்தாள். அவள் சிரித்தபோது அங்கு ஒரு சிறு இசைத் துண்டு ஒலித்தது போல் இருந்தது.

அவள் இன்னும் நம்பமுடியாமல் பாலுவைப் பார்த்தபடி, “இப்ப கூட என்னால நம்பவே முடியல…” என்றாள்.

“சத்தியம் பண்ணியும் நம்பலன்னா நான் என்னங்க பண்றது? வேணும்ன்னா நான் சொல்றெல்லாம் சரியா பாருங்க. தி.ஜானகிராமன் 1921-ல மன்னார்குடி பக்கத்துல இருக்கிற தேவங்குடில பிறந்தவரு. கொஞ்சநாள் டீச்சரா வேலைப் பாத்தாரு. அப்புறம் டெல்லிலயும், சென்னைலயும் ஆல் இன்டியா ரேடியோல வேலைப் பாத்தாரு…” என்று கூறிக்கொண்டேச் செல்ல… அவள் சிரிப்புடன், “போதும்… போதும்…” என்றாள்.

பாலு அப்போதும் விடாமல், “அவரு 23 வயசுல எழுத ஆரம்பிச்சாரு. மோகமுள் நாவல 1955-56-ல எழுதினாரு. மொத்தம் ஒம்போது நாவல் எழுதியிருக்காரு… அதுல அம்மா வந்தாள்…”

“அய்யோ… போதும்…”

“அவரோட சிவப்பு ரிக்‌ஷா, கொட்டு மேளம், அக்பர் சாஸ்திரி சிறுகதைத் தொகுப்பெல்லாம் அட்டகாசமா இருக்கும்…”

“அய்யோ… போதும்…  எனக்கு வேலை இருக்கு…”:

“அப்புறம் டாக்டருக்கு மருந்து, நாலுவேலி நிலம்ன்னு ட்ராமா கூட எழுதியிருக்காருங்க…” என்று தொடர்ந்து பாலு மூச்சைக் கட்டிக்கொண்டு கூற…. விழுந்து விழுந்து சிரித்த அனு  கையெடுத்து கும்பிட்டு, “சரி… சரி… நீங்க தி.ஜா. படிச்சிருக்கீங்க. போதுமா?” என்ற பிறகுதான் பாலு அமைதியானான்.

       அழகிய பெண்களுடனான முதல் சந்திப்பே அழகாக இருந்துவிட்டால், வாழ்க்கையே அழகாகிவிடுகிறது. பாலுவுக்கும் வாழ்க்கை அழகானது. அனுவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தன. எம்எஸ்சி அக்ரிகல்ச்சர் படித்தவள். கர்நாடகாவில் வேலை செய்துவிட்டு, இப்போது மேனேஜராக தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறாள். கணவனுக்கு வெளிநாட்டில் வேலை. குழந்தைகள் சென்னையில் அம்மா வீட்டில் வளர்கிறார்கள்.

       அவர்கள் தினந்தோறும் பேசினார்கள். சிரித்தார்கள். கணவன், குழந்தைகள் அருகில் இல்லாத சுதந்திரம், அவளை இயல்பாக அவனிடம் பழக வைத்தது. அவன் அவளுடைய அபார அழகிலும், அறிவிலும் கிறங்கிப்போயிருந்தான். மூன்று மாதப் பழக்கத்தில் பேசி, பேசியே நெருக்கமானார்கள். நெடுநாட்கள் வரையிலும் பாலு அனுவுடைய பிரமாண்ட அழகின் ரசிகனாக மட்டுமே இருந்தான்.

       பொதுவாக பாலு மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது, அலுவலக வாசலில் தனது நண்பர்களுடன் சிறிது நேரம் நின்று பேசிவிட்டுத்தான் கிளம்புவான். அனு முன்பே கிளம்பிச் சென்றுவிடுவாள். ஒருமுறை அனு அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது, தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பாலுவைப் பார்த்து யாரும் அறியாமல் லேசாக தலையை ஆட்டி அவன் கண்களுக்குள் ஊடுருவி பார்த்தவாறு, “நான் கிளம்புறேன்…” என்றபோது பாலுவின் கால்கள் நடுங்கிவிட்டது. அவ்வளவு ஆழமாக பார்த்த அனுவின் கண்களுக்குள் ஏதேதோ இருந்தது.

       மறுநாளும் அவ்வாறு விடைபெறுகிறாளா? என்று பார்த்தான். அனுவும் அவ்வாறே பார்த்து விடைபெற… பாலு அடுத்தடுத்த நாட்களில் அந்தத் தங்க நொடிகளுக்காக காத்திருந்தான். காத்திருப்பு வீண் போகவில்லை. அந்த மாதச் சம்பளம் வாங்கியவுடன் பத்து புதிய சட்டைகள் வாங்கினான். அலுவலகத்திற்கு கிளம்புவதற்கு முன்பு நீண்ட நேரம் கண்ணாடி முன்பு நின்றான்.

அதிசய ராகம்
'டி.எம்.எஸ். பாட மறுத்த கண்ணதாசனின் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 8

ஒரு நாள் அவன் அனுவிடம், “உங்களுக்கு ப்ளு கலர் சேலை ரொம்ப நல்லாருக்குங்க…” என்று கூறிய போது அந்த வாரம் முழுவதும் அனு நீல நிற ஆடையில் வர… பாலுவிற்குள் ஒரு ரகசியக் காதல் எட்டிப் பார்த்தது. இரவுகளில் தூக்கம் வராமல் தவித்தான். ரகசியமாக கவிதைகள் எழுதினான்.

அந்த ஆண்டு அந்த மலைப்பிரதேசத்தில் குறிஞ்சி மலர்கள் பூத்தன. பாலு அலுவலகம் வரும்போது பறித்து வந்திருந்த நீலக்குறிஞ்சி மலரை அனுவிடம் நீட்டி, “வர்ற வழில கிடந்துச்சு. அபூர்வமான குறிஞ்சிப் பூ தரைல கிடக்கலாமா? தலைலதானே இருக்கணும்…” என்றான். நிமிர்ந்து சில வினாடிகள் கண்களில் கேள்வியுடன் அவனைப் பார்த்த  அனு பின்னர் ஒரு புன்னகையுடன் தனது தலையில் குறிஞ்சிப்பூவை சூடிக்கொள்ள… பாலு காற்றில் மிதந்தான். வானில் பறந்தான்.

 தினந்தோறும் அனு வருவதற்கு முன்பே அலுவலகத்திற்கு வந்துவிடும் பாலு, ஒரு குறிஞ்சிப்பூவை அவள் டேபிளில் வைத்துவிடுவான். அனு அடிக்கண்ணால் அவனை சிரிப்புடன் பார்த்தபடி குறிஞ்சிப்பூவை எடுத்து தலையில் சூடிக்கொள்வாள். ஒரு நாள் தவறாமல் தொடர்ந்து குறிஞ்சிப்பூவை வைத்தான். ஒரு நாள் வேண்டுமென்றே வைக்காமல் விட்டான். அன்று தாமதமாக அலுவலகத்திற்கு வந்த அனுவை ஓரக்கண்ணால் பார்த்தான். குறிஞ்சிப்பூவைக் காணாமல் தவித்துப்போன அனு பரபரப்புடன் அங்குமிங்கும் தேடினாள்.  அவளுடைய பரபரப்பை  கவனித்துவிட்டு பாலு எழுந்துச் சென்று குறிஞ்சி மலரை அனுவிடம் நீட்ட… அனுவின் முகம் வெட்கத்தில் சிவக்க…. அப்போது முகத்தில் வீசிய ஒரு அபூர்வ ஒளியுடன் அனு அந்த மலரை வாங்கி சூடிக்கொண்டாள்.

இந்த மாதிரி வேலி தாண்டிய காதலில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலானோர் மேற்கூறிய எல்லைக்குள்ளேயே நின்று, மறைமுகமாக தங்கள் காதலை உணர்த்திவிட்டு, அதற்கு ஆணிடம் உருவாகும் எதிர் காதல் வினைகளில் ஏற்படும் கிளர்ச்சியோடு நின்றுகொள்வார்கள். அதைத் தாண்டிச் சென்று தங்கள் குடும்ப வாழ்க்கையை குழப்பிக்கொள்ள விரும்பமாட்டார்கள். ஆண்களும் அந்த எல்லைக்குள்ளேயே நின்றுகொண்டால் அந்தக் கிளர்ச்சியை நெடுநாட்கள் தொடரலாம்.

ஆனால் ஆண்களால் அவ்வாறு இருக்கமுடியாது. வெளிப்படையாக தங்கள் காதலைச் சொல்லியே ஆகவேண்டும் என்று நினைப்பார்கள். பாலுவும் நினைத்தான். நினைத்ததை கவிதையாக எழுதி ஒரு பிரபல வார இதழுக்கு அனுப்பினான். இரண்டு வாரங்களில் கவிதை பிரசுரமாக… கவிதையை அனுவிடம் காண்பித்தான். கவிதையில் நீல நிற ஆடை, குறிஞ்சி மலர் விஷயங்கள் எல்லாம் வர… அனு அதிர்ச்சியுடன் பின்வாங்கி, “பாலு… எனக்கு உன்னைப் பிடிக்கும். உன் ரசனை… எழுத்து… பேச்சு… சிரிப்பு… எல்லாம் பிடிக்கும். ஆனா… எனக்கு கல்யாணமாயிடுச்சு?”

“ஆமாம். நான் ஒண்ணும் உங்கள கல்யாணம் பண்ணிக்கச் சொல்லலியே… காதலிக்கறேன்னுதான் சொன்னேன்.”

“பாலு… அது அப்படியே காதலோட நிக்காது. ப்ளீஸ் வேண்டாம்…” என்று கண்கலங்கச் சொன்னவள் அவன் கண்களிலிருந்து மறைந்தாள். இரண்டு வாரம் விடுமுறை போட்டுவிட்டு சென்னைக்குச் சென்றாள். சென்னை தலைமை அலுவலகத்தில் சொல்லி ட்ரான்ஸஃபர் வாங்கிக்கொண்டு ரிலீவ் ஆவதற்காக வந்தாள். அப்போதும் அனு நீல நிறச் சேலையில்தான் வந்தாள். தலையில் குறிஞ்சிப்பூ.

       ரிலீவிங் ஆர்டர் வாங்கிக்கொண்டு பாலுவைக் கடந்த அனு சில வினாடிகள் யோசித்து நின்று, “பாலு… ஒரு நிமிஷம்….” என்று அழைக்க… பாலு எழுந்து வெளியே வந்தான்.

சில வினாடிகள் பாலுவை உற்றுப் பார்த்த அனு, “என்ன முகத்துல புதுசா தாடில்லாம்…” என்றாள்.

“சும்மா…”

“தினம் குடிக்கிறியாம். குவார்ட்டர்ஸ் வாட்ச்மேன் சொன்னாரு…” என்றதற்கு பாலு பதில் ஒன்றும் சொல்லவில்லை.

“என்ன…. காதல் தோல்வியா?” என்றதற்கும் பாலு பதில் சொல்லவில்லை.

“முட்டாள்… உனக்கு 22 வயசு. எனக்கு 35 வயசாவுது. கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க இருக்கு. நம்மால எதுவுமே செய்யமுடியாது. என் மேலயும் தப்பு இருக்கு. உன் இளமைலயும், அறிவுலயும் கொஞ்சம் தடுமாறிட்டேன். நீ சின்னப்பையன். உனக்கு இன்னும் நிறைய வாழ்க்கை இருக்கு. கண்டத நினைச்சு குழப்பிக்காம ஒழுங்கா இரு… என்னால ஒரு சின்னப் பையனோட வாழ்க்கை நாசமாயிடுச்சுங்கிற குற்ற உணர்வை எனக்கு ஏற்படுத்திடாத…” என்ற அனு சட்டென்று கண்களைத் துடைத்துக்கொண்டு திரும்பி நடந்தாள். மெதுவாக நடந்து சென்ற அனுவை பாலுவும் கண்கள் கலங்கப் பார்த்தான்.

அதிசய ராகம்
'மணிரத்னம் தவிர்க்க நினைத்த பாடல்' - நினைவே ஒரு சங்கீதம்|Epi 7

ந்த விஷயத்தை என்னிடம் சொன்னபோதும் பாலுவின் கண்கள் கலங்கியிருந்தன.

“அன்னைக்கி கூட அவங்க ப்ளு கலர் ஸாரிதான் கட்டியிருந்தாங்க சார்… நீலக்கலர் புடைவைல, தலைல குறிஞ்சிப்பூவோட அவங்க என்னை திரும்பி திரும்பி பாத்துகிட்டே போனது இந்தக் கண்ணுல மண்ணப்போட்டு மூடற வரைக்கும் அப்படியே இருக்கும் சார்…” என்று கூறி முடித்த பாலுவை நான் பெருமூச்சுடன் பார்த்தேன்.

       இது போன்ற காதல் எல்லாம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது. ஏற்றுக்கொள்ளப்பட்டால் குடும்ப அமைப்புகள் சிதைவுறும். குழந்தைகள் நசியும். இந்தியா போன்ற ஒரு இறுக்கமான சமூகத்தில் இவ்வகையான உறவுகள், தற்கொலைகள்… கொலைகள்… வரை சென்றுவிடுகிறது.

ஆண்-பெண் உறவுகளின் அபூர்வமான சிக்கல்களை எல்லாம் தமிழில் வெற்றிகரமாக திரைப்படமாக்கியவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்.  பாலச்சந்தரின் முக்கியமான படங்களுள் ஒன்று ‘அபூர்வ ராகங்கள்’. அபூர்வ ராகங்களில் இடம்பெற்ற அழகிய பாடல்களுள் ஒன்று… அதிசய ராகம்.

ஒரு இருபது வயது பெண்ணின் தாயிடம் இளைஞனான கமல் தனது காதலைத் தெரிவித்து பாடும் பாடல் அது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில், ஜேசுதாஸின் குரலில் கண்ணதாசனின் வரிகளில் உருவான அப்பாடல் இன்றும் மிகச் சிறந்த காதலைத் தெரிவிக்கும் பாடலாக விளங்குகிறது.  

இப்பாடல் உருவான விதம் குறித்து மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் கூறும்போது, “கே.பாலச்சந்தர் எந்த மாதிரியான சூழ்நிலைக்கு என்னிடம் பாட்டுக் கேட்பார் என்று எதிர்பார்க்கவே முடியாது. எனக்குத் தெரிந்து பாலியல் பலாத்கார காட்சிக்கெல்லாம் பாடல் கேட்ட முதல் இயக்குனர் அவராகத்தான் இருக்கும். ‘அதிசய ராகம்’ பாடலின் சூழ்நிலையை என்னிடம் விளக்கிய பாலச்சந்தர், “படம் பேரு அபூர்வ ராகங்கள். இந்தச் சூழ்நிலைக்கு இது வரைக்கும் யாரும் போடாத ஒரு அபூர்வ ராகத்தைப் பயன்படுத்தி எனக்கு பாடல் வேணும்.’ என்றார். எனக்கு அப்போதைக்கு ஒன்றும் தோன்றவில்லை. அத்தருணத்தில் தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு அகில இந்திய வானொலியில் ஒரு நிகழ்ச்சி ஒலிப்பதிவிற்காகச் சென்றேன். அந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத பாடகர் பாலமுரளி கிருஷ்ணா பாடினார். பாலமுரளி பாடி முடித்தவுடன் நான் அவரிடம், “பாலச்சந்தர் யாரும் பயன்படுத்தாத ஒரு ராகத்துல பாட்டு வேணும்ன்னு கேக்குறாரு. இதுவரை யாரும் பயன்படுத்தாத ராகம் ஒன்றைச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், “மஹதி என்ற ராகத்தை யாரும் பயன்படுத்தியதில்லை…” என்று சொல்லி அந்த ராகத்தைப் பாடிக் காட்ட… எனக்கு அந்த ராகம் மிகவும் பிடித்துவிட்டது. அந்த ராகத்தின் அடிப்படையில்தான் நான் ‘அதிசய ராகம்… ஆனந்த ராகம்’ பாடலுக்கு இசையமைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

       இப்பாடலுக்கான சூழ்நிலையை கண்ணதாசனிடம் கூறிய எம்.எஸ.வி. “இந்தப் பாட்டோட ராகம்…. ஒரு அதிசயமான ராகமா இருக்கணும். அதே சமயத்துல ஆனந்த ராகமாவும் இருக்கணும்ன்னு பாலச்சந்தர் சொன்னாரு. படம் பேரு… அபூர்வ ராகங்கள்” என்று கூறியவுடனேயே கண்ணதாசன் எம்.எஸ்.வி. சொன்ன வரிகளையே கொண்டு ‘அதிசய ராகம்… ஆனந்த ராகம்…. அழகிய ராகம்…. அபூர்வ ராகம்…” என்று பல்லவியை கூற…. அந்த ‘அதிசய ராகம்’ பிறந்தது.  

அதிசய ராகம்
'ஈழப்போராளிகளின் எழுச்சிப் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 4

இப்பாடலின் முதல் இரண்டு சரணங்களில் மஹதி ராகத்தைப் பயன்படுத்திய எம்.எஸ்.வி. மூன்றாவது சரணத்தில் பைரவி ராகத்திற்கு மாறினார். ஏனெனில் மூன்றாவது சரணத்தில்தான் கமல் நேரிடையாக ஶ்ரீவித்யாவிடம் தனது காதலை தெரிவிப்பார். அப்படத்தில் கதாநாயகி ஶ்ரீவித்யாவின் பெயர் பைரவி. எனவே மூன்றாவது சரணத்தில் பைரவி ராகத்தில் கமல் தனது காதலைச் சொல்ல…. கண்ணதாசன் அச்சரணத்தை “அவள் ஒரு பைரவி…” என்று முடித்தபோது ஶ்ரீவித்யா அதிர்ச்சி அடைந்தார். ஆனால் தமிழர்கள் ஆனந்தத்தில் ஆழ்ந்தனர். இன்று வரையிலும் அந்தப் பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் ஆனந்தத்தில் ஆழ்கின்றனர்.

அதிசய ராகம்..
ஆனந்த ராகம்.ம்ம்
அழகிய ராகம்..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்..

அதிசய ராகம்..


வசந்த காலத்தில்
மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த
மனதினில் மோகம்.
மோகம்.ம்ம்ம்.மோகம்.

வசந்த காலத்தில்
மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த
மனதினில் மோகம்.

இசையெனும் அமுதினில்
அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில்
அவளொரு பாகம்
இந்திர லோகத்து
சக்கரவாகம்

அதிசய ராகம்..
ஆனந்த ராகம்.ம்ம்
அழகிய ராகம்..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்..

பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்

அவளது தேகம்

பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்

தேவர்கள் வளர்த்திடும்
காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால்
அது என் யோகம்
அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால்
காவிரி மாதவி

இன்னுமா புரியல

ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால்
காவிரி மாதவி

முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால்
அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி...

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com