

ஃபேஸ்புக்கில் யாராவது எழுதியிருக்கும் சினிமா விமர்சனத்தை ‘ஆ’ன்னு வாயைப் பிளந்துட்டுப் படிப்பீங்களா? ‘சூப்பர்ஜி. எப்படிடா மச்சி இப்படில்லாம் எழுதுறாய்ங்க?’னு யோசிப்பீங்களா? ரொம்ப சிம்பிள். உங்களுக்காகவே சில டிப்ஸ். இதை ஃபாலோ பண்ணினால், நீங்களும் இணைய சினிமா விமர்சகர்தான்!
படத்தின் முடிவைச் சொல்லாமல் பாதிக் கதையைச் சொல்லுங்கள். (அப்படி ஒன்று இருக்கும்பட்சத்தில்) முடிவைச் சொல்லுதல் தொழில் தர்மம் ஆகாது. மீதிக் கதையை விறுவிறுப்பான கேள்விகளோடு (ஹீரோவின் பைக்கில் பெட்ரோல் தீர்ந்ததா, வில்லனைப் பழிவாங்கினாரா, அந்த பைக்கின் சொந்தக்காரர் என்ன ஆனார்?) முடியுங்கள்.
ஹீரோவைப் பற்றி எதாவது எழுதுங்கள். அவரைப்பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லையென்றால், உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ (இசை, கேமரா, படத்தில் வரும் நாய்க்குட்டி), அதுதான் ஹீரோ என்று சொல்லிவிடுங்கள்.
காட்சியமைப்பு, லைட்டிங், எடிட்டிங். இவற்றைப் பற்றி குற்றம், குறை அல்லது ஆஹா, ஓஹோ சிலவற்றை எழுதுங்கள். அதற்குமுன் தொழில்நுட்பம் சார்ந்த சில, பல சொற்களைத் தெரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்துதல் நலம். ஏனெனில் சமூகத்துக்கு நாம் ஒரு சிறந்த பார்வையாளர் என்று புரியவைக்க வேண்டும். கூகுளாண்டவர் இதற்குத் துணை நிற்பார். கவலைப்படாதீர்கள்.
லாஜிக் மீறல்கள், ஓட்டைகள் இவற்றைப் பற்றிக் குறிப்பிடுங்கள். உதாரணம் : ஹீரோ பஸ்ல ஏறும்போது, டார்க் ப்ளூபேன்ட் போட்டிருக்கார், ஆனா பஸ்ஸைவிட்டு இறங்கிறப்போ லைட் ப்ளூ... இது எப்படி? இங்கேதான் டைரக்டரின் சாயம் வெளுத்துப்போகிறது. இப்படி ஏதாவது எழுதி நம் உற்றுநோக்கலை உலகுக்கு உணர்த்த வேண்டும்.
குறியீடுகளைக் கண்டுபிடியுங்கள்... அதாகப்பட்டது, கண்டக்டரையும் ஹீரோவையும் காட்டும்போதே ஹீரோவுக்கு சில்லரைத் தனமான பிரச்னைகள் வரும் என்று புரிந்துவிடுகிறது, இது மாதிரி ஏதாவது எழுதுங்கள். இது உங்களுடைய புத்திசாலித்தனத்தைக் காட்டுவதற்கே... டைரக்டர் அதை நினைத்துதான் அந்தக் காட்சியை வைத்தாரா என்பது பற்றிக் கவலைப்படாதீர்கள்.