மண்ணில் இந்த காதல் இன்றி: எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடியது எப்படி?

பாடலின் சரணம் 40 நொடிகளுக்கு ஓடும். அதைப் பாடுவதற்கே சிரமப்படவேண்டும். எனவே எஸ்பிபி 25 வினாடிகளில் ஒரு மூச்சை இழுத்துவிட்டு பாடலைத் தொடர்ந்து பாடுவார். ஆனால்....
எஸ்.பி.பி
எஸ்.பி.பிடைம்பாஸ்

எழுதுவது குறித்து சோர்வு ஏற்படும்போதெல்லாம், எங்கிருந்தோ யாரோ ஒருவர் வந்து, என் எழுத்துச் செடியின் வேருக்கு தண்ணீர் ஊற்றி விட்டுச் செல்வார்கள். அந்த நீரின் ஈரத்தில் மீண்டும் எழுத்துச் செடி துளிர்விடும். அவ்வாறு எனது எழுத்துச் செடிக்கு நீருற்றியவர்களில் முக்கியமானவர் வாசகர் கணேஷ்.

ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும். அலுவலகத்திலிருந்த எனக்கு மொபைலில் ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. மொபைலில் பேசியவர், “சார்… என் பேரு கணேஷ். உங்க காதல் கதைகளோட தீவிர வாசகர் சார். எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். உங்கள நேர்ல பாத்து கல்யாணப் பத்திரிகை கொடுக்கணும்… இன்னைக்கி வரலாமா?” என்றார்.

“லஞ்ச் டைம்ல வாங்க…” என்றேன்.

மதிய உணவு இடைவேளை சமயத்தில் வந்த கணேஷ், நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அவர் திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

எஸ்.பி.பி
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'செந்தூரப்பூவே பதினாறு வயதின் பாடல்'

நான், “என்னங்க நீங்க? இவங்களையும் அழைச்சுட்டு வரேன்னு சொல்லவே இல்லையே? முன்னாடியே சொல்லியிருந்தா சாயங்காலம் வீட்டுக்கு வரச்சொல்லியிருப்பேனே…” என்றேன்.

“இவதான் திடீர்னு நானும் வர்றன்னு சொல்லிட்டா சார்…”

“சாப்பிட்டீங்களா?” என்று கேட்க…. கணேஷ் தயங்கினார்.

“வாங்க… சாப்பிட்டு வந்துடலாம்…” என்று எங்கள் அலுவலக கேன்டீனுக்கு அழைத்துச் சென்றேன்.

“சாப்பிடுறதுக்கு முன்னாடி பத்திரிகை கொடுத்துடுறோம் சார்…” என்று பத்திரிகையை கையில் எடுத்த கணேஷ், “உங்களாலதான் சார் எங்க கல்யாணமே நடக்குது” என்றார்.

“என்னாலயா?” என்றேன் ஆச்சர்யத்துடன்.

“ஆமாம் சார். மூணு வருஷத்துக்கு முன்னாடி நானும், இவளும் தீவிரமா காதலிச்சுட்டிருந்தோம். அப்ப திடீர்னு எங்க ரெண்டு பேருக்கும் பெரிய சண்டையாயி பிரேக் அப்பாயிடுச்சு. ‘இனிமே நம்ம லவ் அவ்வளவுதான். நம்ம பிரிஞ்சுடலாம்’ன்னு உறுதியா சொல்லிட்டா. நான் எவ்ளவோ கெஞ்சி கேட்டுப் பாத்தும் இவ உறுதியா முடியாதுன்னுட்டா.  அதுக்கு பிறகு என் ஃபோன கூட இவ அட்டென்ட் பண்ணவே இல்ல. எனக்கு வாழ்க்கையே வெறுப்பாயி விரக்தியா வாழ்ந்துட்டிருந்தேன். அந்த வெறுப்புல இனிமே சென்னைலயே இருக்கவேண்டாம்ன்னு டெல்லிக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போயிட்டேன். கிட்டத்தட்ட ஆறு மாசம் எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த கான்டாக்ட்டும் இல்ல…”

“அப்புறம் எப்படி சேந்தீங்க?” என்றேன்.

“அததான் சார் சொல்ல வர்றேன். நான் டில்லில இருந்தப்ப “ஆனந்த விகடன்’ல வந்த உங்க ‘இளையராஜா’ சிறுகதையப் படிச்சேன். எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. அந்தக் கதைல வர்ற மாதிரியே நானும் இவளும் இளையராஜாவோட தீவிர ஃபேன்ஸ். அதுக்கு முன்னாடி உங்க கதை எதையும் நான் படிச்சதில்ல. அதனால உங்க புக்கு எதாச்சும் இருக்கான்னு நெட்டுல சர்ச் பண்ணி உங்க ‘தீராக் காதல்’ சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். அட்டைல ‘பிரிந்த காதலின் தீரா வலியின் பதிவுகள்’ன்னு பாத்தவுடனேயே புக்க விரிச்சு படிக்க ஆரம்பிச்சிட்டேன். அத்தனையும் காதல் தோல்வி கதைகள். படிக்க படிக்க … இவளப் பத்தி ஃபீலிங் பயங்கரமா வந்துடுச்சு. எப்படியாவது இவள சமாதானப்படுத்தி அடைஞ்சே ஆவணும்ன்னு முடிவு செஞ்சேன்…” என்று சற்று இடைவெளி விட்டார்.

எஸ்.பி.பி
'ஈழப்போராளிகளின் எழுச்சிப் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 4

“உடனே கிளம்பி சென்னை வந்து இவங்களப் பாத்தீங்களா?” என்றேன்.

“அப்படித்தான் முதல்ல நினைச்சேன். ஆனா இவதான் என் மேல பயங்கர கோபமா இருக்காளே… பாக்கமுடியாதுன்னு பிடிவாதமா இருந்துட்டா என்ன பண்றதுன்னு ஒரே குழப்பம். அப்பதான் திடீர்னு அந்த ஐடியா தோணுச்சு”

“என்ன ஐடியா?”

“இவ அப்பப்ப கதைல்லாம் படிப்பா. பேசாம இந்தப் புத்தகத்தை அவளுக்கு அனுப்புவோம். அட்டைல ‘தீராக்காதல்... பிரிந்த காதலின் தீரா வலியின் பதிவுகள்’ன்னு பாத்தவுடனே கட்டாயம் படிப்பா. உடனே ஃபீலிங்காயி நம்பள கூப்பிட்டாலும் கூப்பிடுவான்னு தோணுச்சு. உடனே அந்த புக்க ஒரு கவருக்குள்ள போட்டேன். லெட்டர்ல்லாம் ஒண்ணும் வைக்கல. பெறும் புக் மட்டும்தான். கவர்ல வெளிய என் பேரு, அட்ரஸ், ஃபோன் நம்பர் மட்டும் எழுதி போஸ்ட் பண்ணேன்…” என்று கூற… நான் ஆச்சர்யத்துடன், “அப்புறம் என்னாச்சு?” என்று அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.

அந்தப் பெண் லேசான வெட்கம் கலந்த சிரிப்புடன், “அன்னைக்கி ராத்திரி அந்த புக்க படிக்க படிக்க கலங்கிப்போயிட்டேன்ங்க. காதல்ல தோத்துப்போனவங்க மனசுக்குள்ள அனுபவிக்கிற வேதனைய எல்லாம் அருமையா எழுதியிருந்தீங்க. இப்படித்தானே நம்ம கணேஷீம் கஷ்டப்படுவான்னு தோணுச்சு. எனக்கும் எங்களோட பழைய காதல் நினைவுகள எல்லாம் உங்க கதைங்க கிளப்பி விட்டுடுச்சு. அதுக்கு மேல என்னால தாங்கமுடியல. அன்னைக்கி நடுராத்திரியே இவருக்கு ஃபோனடிச்சுட்டேன்” என்றார்.

“அப்புறம்?”

“அப்புறம் என்ன? ஒரே அழுகைதான்…. லவ்வுதான்…” என்று கணேஷ் சொல்லிக்கொண்டே செல்ல… எனக்கு ஒன்றும் பேசத் தோன்றாமல் சந்தோஷத்துடன் கணேஷைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

தொடர்ந்து கணேஷ், “நீங்க இல்லன்னா நாங்க மறுபடியும் சேந்துருக்கவே மாட்டோம்… அவசியம் நீங்க கல்யாணத்துக்கு வரணும் சார்.” என்ற கணேஷ் கல்யாணப் பத்திரிகையை என்னிடம் நீட்டினார். நான் பத்திரிகையை வாங்கிய அடுத்த கணம் சுற்றிலும் அத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்றும் பார்க்காமல் சட்டென்று அவர்கள் என் காலில் விழுந்து வணங்க… நான் நெகிழ்ந்துபோய்விட்டேன்.

“என்னங்க கணேஷ்… எதுக்கு இதெல்லாம்…” என்று அன்போடு  அவர் தோளை அணைத்துக்கொண்டேன்.

பின்னர் நான் அவர்களின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். வாழ்த்துவதற்கு முன் கீழே அமர்ந்தபடி மேடையில் நின்ற அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்..

பல திருமணங்களில் கவனித்திருக்கிறேன். வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளை விட, காதல் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளின் முகத்தில் கூடுதல் உற்சாகமும், சந்தோஷமும் பொங்கி வழியும். அதில் செயற்கைத்தனம் இருக்காது. பல போராட்டங்களுக்கு பிறகு வென்ற பெருமிதம் அந்த முகங்களில் தெரியும். அவர்களும் அப்படித்தான் இருந்தார்கள்.

உண்மையில் எனது புத்தகம் அவர்களை ஒன்று சேர்க்கவில்லை. அவர்களுடைய காதல்தான் அவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது. உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த அவர்களுடைய காதலை எனது புத்தகம் எழுப்பியிருக்கிறது. அவ்வளவுதான். இல்லையென்றாலும் வேறு யாரேனும் எழுப்பியிருப்பார்கள். ஒரு உண்மையான காதல் தொடர்ந்து உறங்கிக்கொண்டிருக்காது. ஏனெனில் உண்மையான காதல் மிகவும் மகத்தானது.

எஸ்.பி.பி
'கண் பேசும் வார்த்தைகள் புரியவில்லை' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 12

இந்த மகத்தான காதலைக் கூறும் அற்புதமான திரைப்பட பாடல்களுள் ஒன்று, இளையராஜாவின் ‘மண்ணில் இந்தக் காதல் அன்றி’ பாடல். இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வசந்தின் முதல் படமான ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. ‘விவேக் சித்ரா’ நிறுவனத்தின் சுந்தரம் இதன் தயாரிப்பாளர்.

இளையராஜாவிடம் படத்தின் கதையைச் சொல்வதற்காக பிரசாத் ஸ்டுடியோவிற்கு தயாரிப்பாளர் சுந்தரம் இயக்குனர் வசந்துடன் சென்றார். இளையராஜா காலை ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரை கம்போஸிங்கில் இருப்பார். அதன் பிறகு ரெகார்டிங்கிற்குச் சென்றுவிடுவார். அதற்குள் இளையராஜாவை சந்திக்கவேண்டும்.

       வசந்த் உற்சாகத்துடன் இருக்க… சுந்தரம் சற்று யோசனையாகவே இருந்தார். ஏனெனில் அப்போது இளையராஜா தனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார். அறைக்கு வெளியே தினமும் ஏராளமான தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்  கையைக் கட்டிக்கொண்டு அமைதியாக காத்துக்கொண்டிருப்பார்கள். எனவே சுந்தரத்திற்கு விரைவில் பாடல்கள் கிடைக்குமா என்ற சந்தேகம். அன்றைக்கு ஒரு பாடலுக்காவது ட்யூன் வாங்கிவிட்டாலே ஜாக்பாட்தான் என்ற நினைப்பில் இருந்தார் சுந்தரம்

கங்கை அமரன் மூலமாக இளையராஜாவை சந்திக்க அனுமதி பெற்றிருந்த வசந்த் இளையராஜாவின் அறைக்குள் நுழைந்தார். சுந்தரம் வெளியேவே காத்திருந்தார். வசந்த் படத்தின் கதையை இளையராஜாவிடம் கூறினார். இளையராஜாவிற்கு கதை பிடித்திருந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரம் இளையராஜாவுடன் இருந்துவிட்டு வெளியே வந்தார் வசந்த்,

வசந்தைப் பார்த்தவுடன் பரபரப்பாக அவர் அருகில் வந்த சுந்தரம், “ஒரு பாட்டாவது கிடைச்சுதா வசந்த்?இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்களே…” என்றார். அதற்கு வசந்த் சிரிப்புடன், “ஆறு பாட்டையும் கம்போஸிங்க் செஞ்சு வாங்கியாச்சு சார்…” என்றவுடன் அரண்டுபோன சுந்தரத்தின் முகமெங்கும் சந்தோஷம். இது குறித்து இயக்குனர் வசந்த், “அந்த ஆறு பாடல்கள் எவ்வளவு நேரம் ஓடியதோ அவ்வளவு நேரம் தான் இளையராஜா அந்தப் பாடல்களை கம்போஸிங் செய்யவும் எடுத்துக்கொண்டார். ஏனெனில் இளையராஜா ஹார்மோனியத்தைத் தொட்டால் இசை கொட்டும் அதுதான் இளையராஜா” என்கிறார்.

அப்படி மழைக்கால அருவி போல இளையராஜாவிடமிருந்து இசை கொட்டிக்கொண்டிருந்த காலத்தில், அந்த அருவியில் ஏராளமான இயக்குனர்கள் ஆசை தீர குளித்தார்கள். அவ்வாறு குளித்த இயக்குனர் வசந்துக்கும் அற்புதமான ஆறு பாடல்கள் கிடைத்தன. இதில் ஒரு சுவாரஸ்யம்: இந்த ஆறுப் பாடல்களில் ‘மண்ணில் இந்தக் காதல் இன்றி’ பாடல் கிடையாது. அப்போது அவ்வாறு ஒரு பாடல் வைக்கும் எண்ணமே வசந்துக்கு இல்லை.

‘கேளடி கண்மணி’ படப்பிடிப்பின்போது வசந்தின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கதாநாயகனாக நடிக்க வைத்துவிட்டு, அவர் பாடுவது போல் ஒரு பாட்டு வைக்காவிட்டால் நன்றாக இருக்காதே. அந்தப் பாட்டையும் வித்தியாசமாக அவர் மூச்சு விடாமல் பாடினால் எப்படி இருக்கும்?” என்று திடீரென்று தோன்றியது.

உடனே அருகில் இருந்த எஸ்பிபியிடம் வசந்த், “சார்… நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் மூச்சு விடாம பாடினா எப்படியிருக்கும்?” என்றார்.

எஸ்.பி.பி
'டி.எம்.எஸ். பாட மறுத்த கண்ணதாசனின் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 8

“நல்லாதான் இருக்கும். ஆனா நீ இந்தப் படத்தை முடிக்கமுடியாதே?” என்றார் எஸ்பிபி.

“ஏன்?”

“அஞ்சு நிமிஷம் நான் மூச்சு விடாம பாடினா மேலப் போய் சேந்துருவேன். அப்புறம் எப்படி நடிக்கிறது?” என்றார் சிரிப்புடன்.

பிறகு வசந்த் இளையராஜாவிடம் இந்த ஐடியாவைச் சொன்னபோது அதனைப் பாராட்டிய இளையராஜா, “நல்ல ஐடியா. ஆனா பல்லவியில் வேண்டாம். சரணத்தில் மட்டும் மூச்சு விடாமல் பாடுவது போல் வைத்துக்கொள்வோம்.” என்றார். அதே போல் சரணத்தில் மட்டும் மூச்சு விடாமல் பாடுவதற்கேற்ற ஒரு ட்யூனை இளையராஜா உடனே உருவாக்கிக் கொடுத்தார்.

அந்தப் பாடலின் சரணம் 40 நொடிகளுக்கு ஓடும். அதைப் பாடுவதற்கே சிரமப்படவேண்டும். எனவே எஸ்பிபி 25 வினாடிகளில் ஒரு மூச்சை இழுத்துவிட்டு பாடலைத் தொடர்ந்து பாடுவார். ஆனால் அது ரசிகர்களுக்குத் தெரியாதவாறு நேர்த்தியாக ஒலிப்பதிவு செய்தனர். அவ்வாறு ஒலிப்பதிவு செய்து வெளிவந்த அந்தப் பாடல், இன்றும் இளையராஜாவின் வெகு அற்புதமான காதல் பாடல்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...

எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு ஸ்வரம் தன் பாடுமோ....

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா....

கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா....

( பெண் :-- மூச்சு விடாம பாடுறேன்னு சொன்னீங்களே....)

வென்னிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி,
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமின்றி,
சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்...
சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்...
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்....
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்...
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்....

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு ஸ்வரம் தன் பாடுமோ

எஸ்.பி.பி
'மணிரத்னம் தவிர்க்க நினைத்த பாடல்' - நினைவே ஒரு சங்கீதம்|Epi 7

முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்....
கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்..
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்....
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்....
எண்ணி விட மறந்தால் எதற்க்கோர் பிறவி...
இதனையும் இழந்தால் அவன் தான் துறவி....
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்....
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா....

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு ஸ்வரம் தன் பாடுமோ

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com