'கண் பேசும் வார்த்தைகள் புரியவில்லை' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 12

ஒரு நாள் அதிகாலையில் கவிஞர் நா.முத்துக்குமாரை அழைத்த செல்வராகவன், 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் முழுக்கதையையும் சொன்னார். முதலில் சொன்ன சூழ்நிலைகளுள் ‘கண் பேசும் வார்த்தைகள்’ பாடல் இல்லை.
நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்டைம்பாஸ்

கண் பேசும் வார்த்தைகள்:  விழிகளின் திருவிழா

ஒரு பெண் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவளுடைய கண்கள் உங்களிடம் என்ன சொல்கிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள்.

-ஃபிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ

       மேலே சொன்ன வார்த்தைகளின் பொருளை, தனிமனித சுதந்திரத்தை ஏராளமாக அனுபவிக்கும் ஃபிரான்ஸ் நாட்டவர்களை விட, நம் நாட்டவர்கள் நன்கு உணர்வார்கள். 80-கள் வரையிலும் இந்தியாவில் ஆண்களிடம் நேரில் பேசும் இளம்பெண்களை விட, ரகசியமாக கண்களால் பேசிய பெண்கள்தான் அதிகம். தற்போதைய பெண்களுக்கு ரகசியமாக கண்களில் பேசுவதற்கான அவசியம் குறைந்துவிட்டது. யாருக்கும் தெரியாமல் மொபைலிலேயே ரகசியமாக உரையாடிக்கொள்ளும் வசதி தற்போது வந்துவிட்டது.

       ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, நம் இளம்பெண்கள் கண்களால்தான்  இளைஞர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார்கள். கடைசி வரையிலும் ஒரு வார்த்தைக் கூட பேசாமல், வெறும் கண்களால் மட்டுமே பேசிவிட்டு, தடாலடியாக ஒரு அரசு ஊழியரை அல்லது பிசினஸ்காரரைக் கல்யாணம் செய்துகொண்டு, பின்னர் திருவிழாக் கும்பலில் நம்மைக் காணும்போது ஒரு இறந்த பார்வையை பார்த்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். நம்மாட்கள் ஆடிப்போய் விடிய விடிய உருக்கமாக கவிதை எழுதிக்கொண்டிருப்பார்கள்.

நம் பெண்கள் ஏன் கண்களால் மட்டும் பேசினார்கள்? ஏனெனில் அப்போதெல்லாம் ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலே, உடனடியாக திருமணம் செய்துவைத்துவிட்டுதான் ‘’அப்பாடா...” என்று திண்ணையில் துண்டை விரித்துப் படுப்பார்கள். பெண்கள் வயசுக்கு வந்த பிறகும், திருமணத்திற்கு முன்பும் ஒரு சின்ன இடைவெளி இருக்கும். இந்த இடைவெளிக்குள் யாரேனும் வேகமான ஆண்கள் குறுக்கேப் புகுந்து காதலித்தால்தான் உண்டு.

    ஏனெனில் ஒரு இளம் ஆண்-பெண் சந்திப்பே அப்போது மிகவும் அபூர்வமான விஷயம். உறவினரல்லாத ஒரு வயசுப்பையனும், வயசுப்பெண்ணும் சந்தித்துக்கொள்வதை எல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கவேமுடியாது. இளம்பெண்களை பால் வாங்க வரும்போதோ, ஊர்க்கிணற்றில் தண்ணீர் பிடிக்க வரும்போதோ பார்க்கலாம்.

இதில் பால் வாங்க வரும்போதும், தண்ணீர் தூக்க வரும்போதும் பெண்கள் பெரும்பாலும் குளிக்காமல், கலைந்த தலையுடன், சீர்குலைந்த ஆடையுடன் வருவதால், அச்சமயத்தில் அவர்கள் மீது காதல் வருவது சற்று கடினம். சில பெண்கள் தங்கள் அம்மாக்களுடன் ஆற்றுக்கு குளிக்க வருவார்கள். 

நா.முத்துக்குமார்
'பருவமே… புதிய பாடல் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 9

அப்போது குளிப்பதற்கு முன்பு பார்த்து காதல் வராவிட்டாலும், குளித்த பின்பு பார்த்து வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் அப்போதும் பூ, மை, பொட்டு, பவுடர் போன்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ் இல்லாமல் இருப்பதால் சிலருக்கு அப்பெண்கள் மீது காதல் வராமல் போகலாம்.  அப்படியென்றால் வயசுப்பெண்களை அவர்களின் முழு அழகோடு எங்குதான் பார்க்கலாம்?

கடவுள் எப்போதுமே ஆண்கள் மீது கருணை மிகுந்தவர். எனவே கடவுள் வெள்ளிக்கிழமைகளைப் படைத்தார். மற்றக் கிழமைகளில், தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிக்காமல், தேங்காய் எண்ணை வைத்துக்கொண்டு, அழுத்தமாக படிந்த தலைமுடியுடன் வரும் பெண்களை விட, தலைக்கு குளித்துவிட்டு எண்ணெய் தடவாமல், உலர்ந்த தலைமுடிகள் காற்றில் அலைப்பாய நடந்து வரும் பெண்கள் இரண்டு மடங்கு அழகாக இருப்பார்கள். மேலும் தலையில் வைக்கும் பூ, நெற்றிக் குங்குமம், சந்தனம் போன்ற சமாச்சாரங்கள் அழகின் சதவீதத்தை அதிகரிக்கும்.

இந்தப் பெண்களைப் பார்த்தும் காதல் வராத ஆண்களுக்கு கடவுள் இன்னொரு வாய்ப்பை உருவாக்கினார். அது… உறவினர் வீட்டு திருமணம் போன்ற விசேஷங்கள். இந்த விசேஷங்களில் பெண்கள் மேலே சொன்ன வெள்ளிக்கிழமைத் தோற்றத்துடன் எக்ஸ்ட்ராவாக பட்டுப் பாவாடை, ஜிமிக்கி, தங்க நகைகள்… என்று சர்வ அலங்கார தேவதையாக வருவதால் அழகின் அதி உச்சத்தில் இருப்பார்கள். இதைப் பார்த்தும் காதல் வராத ஆண்கள் இந்தக் கட்டுரையைப் படிப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

நா.முத்துக்குமார்
நினைவே ஒரு சங்கீதம்: 'காதலின் தீபம் ஒன்று' | Episode 3

இது போன்ற தருணங்களிலும் கூட அவர்களைத் தனியாக பார்க்கமுடியாது. பெண்ணின் அம்மாவோ அல்லது விதவைப் பாட்டியோ அவர்களுடன் துணைக்கு வருவார்கள். இந்த இஸட் பிளஸ் பாதுகாப்புக்கு நடுவிலும், தான் அழகாகத் தோற்றமளிப்பதை யாரேனும் கண்டு ரசிக்கவேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். பட்டுப்பாவாடையை லேசாக கைகளால் தூக்கிக்கொண்டு தலையைக் குனிந்துகொண்டு நடந்துச் செல்லும் பெண்களை விட, தலைமுடியை ஒதுக்கியபடியோ அல்லது தலைமுடியைப் முன்னால் தூக்கி வீசியபடியோ அக்கம்பக்கத்தில் கண்கள் அலைபாய நடக்கும் பெண்கள் இவ்விஷயத்தில் கூடுதல் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

இவர்கள் தங்களுக்குப் பிடித்தமான வயசுப்பையனை பார்த்துவிட்டால், அவர்களை முதலில் இரண்டு வினாடி பார்த்துவிட்டு, பிறகு கண்களாலேயே ஒரு வினாடி உரையாடி, தங்கள் கண் உரையாடல் காவியத்தின் முதல் அத்தியாயத்தை எழுதுவார்கள். அந்த ஒரு வினாடி உரையாடலுக்கே பசங்கள் உயிரை விடத் தயாராக இருப்பார்கள். அந்த ஒரு வினாடி உரையாடலை மொழிபெயர்த்தால், “நான் அழகாக இருக்கிறேனா?” என்று இருக்கும். நாம் அவர்கள் அழகை அங்கீகரிப்பது போல் உற்றுப் பார்த்தால், அவர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். பின்னர் கண்களால் அவர்கள் தொடர்ந்து பேசுவார்கள்:

நீங்கள் தொடர்ந்து விடாமல் பார்த்துக்கொண்டிருந்தால், “ஏன் இப்படி குறுகுறுன்னு பாக்குறீங்க?” என்பது போல் நடுவிழியால் உங்களிடம் கேள்வி கேட்பார்கள். நீங்கள் கையைத் தூக்கி ‘நீங்க பயங்கர அழகு’ என்பது போல் கட்டை விரலையும், ஆள்காட்டிவிரலையும் இணைத்து சைகை செய்தால், அதுவரையிலும் சிரிப்பதற்கு உதடுகளையும், பற்களையும் மட்டும் பயன்படுத்தி வந்த பெண்கள், சிரிப்பதற்கு கண்களையும் பயன்படுத்தும் அபூர்வ காட்சியை உங்கள் வாழ்க்கையில் முதன் முதலாக பார்ப்பீர்கள். தொடர்ந்து நீங்கள் கண்களை அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தால், “நான் அவ்ளோ அழகா?” என்பது போல் கண்களால் கேட்பார்கள். அதற்கு உடனே நீங்கள் புன்னகையுடன், ‘ஆமாம்…” என்பது போல் தலையை ஆட்டவேண்டும்.

நா.முத்துக்குமார்
'ஈழப்போராளிகளின் எழுச்சிப் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 4

அது புரியாமல் நீங்கள் எதிர்வீட்டுக் கேட்டை பார்ப்பது போல் உணர்ச்சியில்லாமல் பார்த்தால் நீங்கள் அவுட். அப்போது திடீரென்று அந்தப் பெண்ணின் அம்மா, அண்ணன் போன்ற நம் எதிரிகள் அவர்கள் அருகில் வந்தால், சட்டென்று அவர்கள்  திகில் கலந்த பார்வையுடன் ஓரக் கண்ணால் தங்கள் அம்மா அல்லது அண்ணனைக் காண்பித்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ளும்போது நீங்கள் மனம் உடைந்துவிடக்கூடாது. இது தற்காலிகம்தான். அவர்கள் விலகியவுடன் கண் பேசும் வார்த்தைகள் தொடரும்.

இந்த மாதிரி பார்வைகள் எல்லாம் சும்மா ஒரு ரன், இரண்டு ரன்கள் எடுப்பது போல். நீங்கள் அருகில் நெருங்கிப் பேசி திகிலேற்றாமல் கண்களாலேயே தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தால், அந்தப் பெண்கள் பார்வையாலேயே பவுண்டரி, சிக்ஸர் அடிக்கும் காட்சிகளைக் காணலாம்.  

எப்போது பவுண்டரி, சிக்ஸரைக் காணலாம்?

எதிரே உங்களை தற்செயலாக கடக்கும்போது, இருவர் தோள்களும் க்ராஸ் செய்வதற்கு சற்று முன்பாக உங்களை கூர்கண்ணால் பார்த்துக்கொண்டே வந்து, உங்கள் தோள்கள் க்ராஸ் செய்யும் துல்லியமான நொடிகளில் உதட்டில் ஒரு மாபெரும் வெட்கப்புன்னகையைக் கொண்டு வந்து, சட்டென்று அந்த வெட்கப்புன்னகையை அதிவேகத்தில் தங்கள் கண்களுக்கு நகர்த்தி, அந்த  வெட்கப்புன்னகை கண்களால் உங்களை சில  வினாடிகள் பார்ப்பது ஸ்ட்ரெய்ட் பவுண்டரி.  நடுவில் ஆண்களிடம் வேறு யாரேனும் வந்து பேசிக்கொண்டிருந்தால் அந்தப் பெண்கள் வாடிவிடுவார்கள். அப்போது அவர்கள் தொண்டையைக் கனைத்தபடி ஒரு ஓரப் பார்வை பார்த்துவிட்டு, நீங்கள் திரும்பிப் பார்த்தவுடன் கள்ளச்சிரிப்புடன் விருட்டென்று பார்வையைத் திருப்பிக்கொள்வதே லெக்சைட் பவுண்டரி என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

பார்வைப் பரிமாற்றம் தொடர…. திடீரென்று அவர்கள் நடுக்கண்ணால் உங்களை கண்ணிமைக்காமல் பார்த்துவிட்டு சட்டென்று புருவத்தை மட்டும் உயர்த்தி, “என்ன?” என்று கேட்பது சிக்ஸர். உடனே நீங்கள் கையில் ஹாட்டின் சிம்பலையோ அல்லது தாலி கட்டிக்கலாமா? என்பது போன்ற சைகைகளையோ காட்டினால், மொத்த முகமும் சிவந்துபோய், கண்களில் காதல் கசிந்துருக உங்களைப் பார்க்கும் காதல் பார்வை, ஈடன்கார்டனில் மைதானத்திற்கு வெளியே அடிக்கப்படும் சிக்ஸர்.

இவ்வாறு அந்தப் பெண்கள் கண்களால் பேசியவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு நேரடியாகச் சென்று, “ஐ லவ் யூ” என்று சொன்னால், அவர்கள் அதிர்ந்துபோய், “ஆத்தாடி… நான் சும்மா பாத்தேன். உங்க பின்னாடியிருந்த என் ஃப்ரண்டப் பாத்து சிரித்தேன்” என்று கூறிவிட்டு திடுதிடுவென்று ஓடிவிடுவார்கள்.

ஏன் அப்படி இருந்தார்கள்? அந்தக் காலச்சூழல் அப்படி. அக்காலத்தில் வீட்டில் பார்க்காத ஒரு மாப்பிள்ளையை காதலித்து, திருமணம் செய்வதெல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்க்கமுடியாத காரியம். ஆனால் அவர்கள் இளமைக்காலத்திற்குள் வந்தவுடன் அந்தப் பருவத்திற்குரிய இயல்புகளான காதல், காமம் போன்றவை எல்லாம் அவர்களுக்கு வந்துவிடும். எனவே தாங்கள் விரும்பும் ஆண்களுடன் கண்களால் மட்டும் உரையாடுவார்கள். பதிலுக்கு ஆண்களும் வெறும் பார்வை பரிமாற்றத்துடன் அருகில் நெருங்காமல் இருந்துவிட்டால், அந்தப் பார்வை பரிமாற்றம் தரும் கிளர்ச்சியிலேயே சிறிது காலம் வாழ்வார்கள். பிறகு அவர்கள் பள்ளி அல்லது கல்லூரி அல்லது வீடு அல்லது ஊர் மாறிச் செல்லும்போது அந்த சிறிய காதல் கதை முடிந்துவிடும்.

நா.முத்துக்குமார்
'மணிரத்னம் தவிர்க்க நினைத்த பாடல்' - நினைவே ஒரு சங்கீதம்|Epi 7

ஏனெனில் அக்காலப் பெண்கள், ஆடி மாதம் ஓடும் காவிரி போல ஆர்ப்பாட்டமானவர்கள் அல்ல. புரட்டாசி மாத காவிரி போல அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் நதி. அதிகபட்சம் அந்நதியைப் பார்க்க… அல்லது சற்றே கால் நனைக்க வேண்டுமானாலும் அனுமதிப்பார்கள். இல்லை… நான் அந்த நதியில் தொபுக்கடீர் என்று குதித்து எதிர்கரை வரை நீந்திவிட்டே வருவேன் என்று ஆண்கள் ஆற்றில் இறங்கினால், சட்டென்று அந்நதி நீர் வற்றிவிடும். எனவே அப்போது நாங்கள் எல்லாம் கடைசி வரையிலும் கால் நனைத்துக்கொண்டே வந்துவிடுவோம். இந்த கால் நனைப்பு காலத்தில் அவர்கள் விதம் விதமான பார்க்கும் பார்வைகளே ஒரு காதல் அளவிற்கான சுகத்தைத் தந்தது.

இந்தப் பார்வை மற்றும் புன்னகை பரிமாறத்தை மிகவும் நுணுக்கமாக கவனித்து அறிபவர்கள் பெண்ணின் தாயாகவே இருப்பார்கள். அவர்களும் ஒரு பெண்ணாக அந்த இளமைப் பருவத்தை கடந்து வந்தவர்கள் என்பதால் மிகச் சுலபமாக கண்டுபிடித்து, “என்னடி… வர வர உன் நடவடிக்கையே சரியில்ல. உங்கப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னா உன்னையும், என்னையும் வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்குப் போயிடுவாரு. இல்ல… தூக்கு போட்டுகிட்டு செத்துடுவாரு…” என்று  சொன்னால் மட்டும் போதும்.  மறுநாளே அவர்கள் பார்வையிலிருந்த அத்தனை உணர்ச்சிகளும் செத்துப்போய், உங்களைக் கடக்கும்போது ஒரு உணர்ச்சியற்ற வெற்றுப் பார்வை பார்ப்பார்கள். நம் ஆண்கள், ‘நேத்து வரைக்கும் இப்படி பாத்துச்சே… இன்னைக்கு ஏன் இப்படி பார்க்குது…” என்று குழம்பிப்போவார்கள். தண்ணியடிப்பார்கள். தாடி வளர்ப்பார்கள். கவிதை எழுதுவார்கள். சினிமா கதாநாயகர்கள் பாடல் பாடுவார்கள்.

இம்மாதிரியான ஏராளமான பாடல்கள் தமிழ் சினிமாவில் உள்ளன. அதில் டாப் 10 பாடல்களுள் ஒன்று,  ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ பாடல்.  

 ரு முறை கவிஞர் நா. முத்துக்குமார் ஊட்டி சென்றிருந்தார். அவருக்கு ஒரு பழக்கம் உண்டு. வித்தியாசமான ஊர்ப் பெயரைப் பார்த்தால் உடனே அந்த ஊருக்குச் சென்றுவிடுவார். ஒரு நாள் மாலை முத்துக்குமார் ஊட்டி பேருந்து நிலையத்தில் நின்றபடி பேருந்துகளை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ‘உள்ளத்தீ’ என்ற பெயர் பலகையோடு ஒரு பேருந்து நின்றுகொண்டிருந்தது. ஊட்டியிலிருந்து ஒன்றரை மணி நேர தூரம் என்றவுடன் இரவுக்குள் திரும்பிவிடலாம் என்று பேருந்தில் ஏறிவிட்டார். அன்று பௌர்ணமி தினம் என்பதால் முழு நிலவின் வெளிச்சத்தில் மலைக்காட்சிகள், தேயிலைத் தோட்டங்கள், கேரட் தோட்டங்கள், பனியில் நனைந்த உருளைக்கிழங்குத் தோட்டங்கள்… என்று அந்தப் பயணத்தின் பாதை வழிக் காட்சிகள் முத்துக்குமாரிடம் ஒரு படைப்பு மனநிலையை உருவாக்கிவிட்டது.

மாலை ஏழு மணி போல் ‘உள்ளத்தீ’யில் நின்ற பேருந்திலிருந்து இறங்கினார். மலைச்சரிவில் ஒரு பத்து வீடுகள் கூட இருக்காது. கடைகள் ஒன்றும் இல்லை. முத்துக்குமார் அந்த சிறிய ஊரை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்து பார்த்தால் பேருந்து இல்லை. உள்ளுர் நபரிடம் எப்படி மீண்டும் ஊட்டிக்குச் செல்வது? என்று கேட்டார். “பனிக் காரணமாக இந்த ஊருக்கு இனிமேல் பேருந்து வராது” என்றவர் அருகிலிருந்த ஒரு மலையைக் காட்டி, “அங்கு மேலூர்ன்னு ஒரு ஊரு இருக்கு. அங்கருந்து ஊட்டிக்கு எஸ்டேட் ஜீப்புங்க போகும்” என்றவுடன் குளிரில் நடுங்கியபடி அந்த மலையை நோக்கி நடந்தார்.

நா.முத்துக்குமார்
'அதிசய ராகம்: ஒரு அபூர்வ காதலின் கீதம்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 10

இருளில் கசியும் நிலவொளியில் தெரியும் மலைப்பாதையைப் பார்த்த முத்துக்குமாரின் மனதில், “எங்கிருந்தோ வீசும் வெளிச்சம், அந்தப் பாதைக்கு எப்படி சொந்தமாகும்?” என்ற வரிகள் தோன்றியது. வானத்தில் அற்புதமாக காய்ந்துகொண்டிருந்த பௌர்ணமி நிலாவை ரசிப்பதற்கு அந்த ஊரில் யாரும் இல்லையே என்ற முத்துக்குமாருக்கு, “கண்டுகொள்ள யாரும் இல்லா காட்டிலும் பொழிகிறது நிலா…” என்ற வார்த்தைகள் தோன்றியது. அப்படியே நடந்து மேலூரை அடைந்த முத்துக்குமார் ஒரு ஜீப்பை பிடித்து ஊட்டி வந்து சேர்ந்தார்.

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு:

ஒரு நாள் அதிகாலையில் கவிஞர் நா. முத்துக்குமாரை அழைத்த இயக்குனர் செல்வராகவன், 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் முழுக்கதையையும் சொன்னார். முத்துக்குமாருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. செல்வராகவன் முதலில் சொன்ன சூழ்நிலைகளுள் ‘கண் பேசும் வார்த்தைகள்’ பாடல் இல்லை. முத்துக்குமார் ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்…’, ‘கனாக் காணும் காலங்கள்…’, ‘இது போர்க்களமா?’ ஆகிய பாடல்களை எழுதி பதிவு செய்த பின்பு முடிவான பாடல்தான் ‘கண் பேசும் வார்த்தைகள்’. “கதாநாயகன் ஒருதலையாக காதலிக்கும் கதாநாயகியின் நிச்சயதார்த்தத்தில் பாடுவது போன்ற பாடல். உன்னுடன் ஒரு நாளாவது வாழ மாட்டேனா என்ற ஏக்கம் அப்பாடலில் தெரியவேண்டும்” என்று செல்வராகவன் சொல்ல… இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அதற்கு ஒரு அற்புதமான மெட்டை அளித்தார்.

அந்தப் பாடலுக்கான பல்லவியை ‘கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை…” என்று ஆரம்பித்து எழுதிய முத்துக்குமார் முதல் சரணத்திற்கு வந்தபோது அன்று ஊட்டி, மேலூருக்குச் சென்றபோது கண்ட காட்சியும், அப்போது தோன்றிய வரிகளும் நினைவுக்கு வர… முதல் சரணத்தில்

காட்டிலே காயும் நிலவை

கண்டுகொள்ள யாருமில்லை

தூரத்தில் தெரியும் வெளிச்சம்

பாதைக்குச் சொந்தமில்லை…

என்ற அற்புதமான வரிகளை எழுதினார். ஒரு எழுத்தாளன் தனது வாழ்க்கை அனுபவங்களை ஒரு பூ மொட்டுக்குள் சேகரித்துக்கொண்டே வருகிறான். தகுந்த வசந்த காலம் வரும்போது மொட்டு வெடித்து அந்த அனுபவங்கள் வார்த்தைகளாக வெளிவருகிறது. அவ்வாறு வெளிவரும்போது நமக்கு ‘கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை…” போன்ற அற்புதமான பாடல்கள் கிடைக்கின்றன.

கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை

ஒரு முகம் மறைய

மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை (2)

காற்றில் இலைகள் பறந்த பிறகும்

கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை

ஒரு முறைதான்
பெண் பார்ப்பதினால் வருகிற
வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை…

காட்டிலே
காயும் நிலவு கண்டு
கொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை

தூரத்தில் தெரியும் வெளிச்சம்

பாதைக்கு சொந்தம் இல்லை

மின்னலின் ஒளியை பிடிக்க

மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை

விழி உனக்கு சொந்தமடி

 வேதனைகள் எனக்கு சொந்தமடி

 அலை கடலை கண்ட பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே
சொந்தமடி

கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை

உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது

ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது

இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது

பனி துளி வந்து மோதியதால்

இந்த முள்ளும் இங்கே துண்டானது

பூமியில் உள்ள பொய்கள் எல்லாம்

அடபுடவை கட்டி பெண் ஆனது

ஏ புயல் அடித்தால் மலை இருக்கும்.

 மரங்களும் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்

ஒரு முறைதான்
பெண் பார்ப்பதினால் வருகிற
வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

ஹே….

கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை…

நா.முத்துக்குமார்
'இது ஒரு பொன்மாலைப் பொழுது' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 11

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com