அண்ணன் – தங்கச்சி, அக்கா – தம்பி சென்டிமென்ட் சினிமா ’பாசமலர்’ல தொடங்கி ’அண்ணாத்த’ வரைக்கும் குறைஞ்சது ஐநூறு படங்களாச்சும் வந்திருக்கும். சிவாஜிகிட்டெல்லாம் தங்கைக்கான சீன் சொல்ல வாயைத் திறந்ததுமே ஃபீல் பண்ண ஆரம்பிச்சிருவார். சூட்டிங் டேக்குல ’அம்மா.’.னு தொடங்கினார்னா.. நான்ஸ்டாப் ’வைப்ரட்’ மோடுதான்.
தலையில தண்ணீர் பாட்டிலை மாட்டின மாதிரி சட்டை நனைஞ்சு, பேன்ட் நனைஞ்சு செருப்புல கண்ணீர் தேங்கி நிக்கிற அளவுக்கு அழகாச்சி ஃபெர்பாமென்ஸ் பின்னுவாரு. இப்போ ஹீரோக்கள் தங்கை ஆசைபட்டதுக்காக ’திருப்பாச்சி’ படத்துல அடுத்த பொண்ணு ஜடைய ‘கட்’ பண்ற அளவுக்கு நெறைய மெனக்கெடுறாங்க. அப்படிப்பட்ட சில ஹீரோக்கள் படங்களைப் பார்ப்போம்.
1 . விஜய் ஹீரோவாக நடிச்ச படம் ’வேலாயுதம்’. அந்தப் படத்துல விஜய்யோட பாசமிகு சிஸ்ட்டரா சரண்யா மோகன் நடிச்சிருப்பாங்க. தங்கச்சி ஆசையா வளர்த்த கோழியைப் புடிக்க வீட்டுமேல ஏறி ஓட்டை ஒடைக்கிறது, தங்கச்சிக்கு அண்ணன் முதன்முதலா போட்டுவிட்ட மோதிரத்தை தேட, தங்கம் இருக்கிறதா ஊர்க்காரங்களை உசுப்பேத்தி கிணத்தை தூர் வார வைக்கிறதுன்னு ஊருக்குள்ள பண்ற அலப்பரைய தாங்க முடியாம அண்ணன் – தங்கச்சியை ஊரைவிட்டு கிளப்பறதுக்கு முடிவு பண்ற அளவுக்கு கொடைச்சலைக் கொடுப்பாரு விஜய்.
அதையெல்லாம் கூட ஏதோ பொருத்துக்கலாம் ஆனா, படம் ஓபனிங்ல வாயில அரிவாளைக் கவ்விக்கிட்டு ஓடுற ரயிலை ஓடிப்போயி தவி தங்கச்சிக்காக சீட்டு புடிப்பாரு பாருங்க. ரெயில்வே டிபார்ட்மெண்டே கிடுகிடுத்துப்போயிடும். அவ்ளோ ரிஸ்க்கு எடுத்து ரெயிலை எதுக்கு நிறுத்துறார்னு பார்த்தா அதுவும் தங்கச்சிக்காகத்தான். தங்கச்சி மேரேஜுக்கு பைனான்ஸ்ல போட்ட சீட்டு பணத்தை வாங்க சென்னைக்கு போவாரு. ஓடுற ரெயில்ல தாவுறதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குன்னு நம்ம மனசாட்சி கொஸ்ட்டின் பண்ணாலும் விஜய் படம் அப்டித்தான்னு மனச தேத்திக்கிட்டோம்ல.
2 . ’தளபதி’ யோட ‘வேலாயுதம்’ ஒரு விதமான சிஸ்டர் சென்டிமென்டைக் காட்டினா, ’தல’ யோட ‘வேதாளம்’ வேற ஒரு டைமன்ஸன்ல காட்டுது. கல்கத்தாவுல இருக்கிற காலேஜ்ல தங்கச்சியான லட்சுமி மேனனை சேர்க்க வர்றாரு. வந்த இடத்துல டாக்ஸி ஓட்டுறாரு. தங்கையை காலேஜ்ல ட்ராப் பிக்கப்னு பாசம் மிகுந்த அண்ணானா இருக்காரு. அப்றம், ஒரு கேங்ஸடாரோட தம்பியையும் அவர்கூட இருக்கிற இருநூறு ஃபைட்டர்களையும் துவம்சம் பண்றார். அதைப் பார்த்த ஹீரோயின் சுருதிஹாசன் ’இந்த அளவுக்கு மெட்டீரியலையும், மனுஷங்களையும் கொல்றியே உன் சிஸ்டருக்காகவா..?’ ன்னு கேட்க, ’அந்த பொண்ணு ஏ தங்கச்சியே இல்லை’ ன்னு சொல்றாரு.
அப்போ அந்த பொண்ணு யாரு..? ன்னு நமக்கும் கொக்கிபோட்ட கொஸ்ட்டீன் நெஞ்சுல நிக்கிது. காரணம் என்னென்னு காலங்காலமா நம்மளை தரத்தரன்னு பின்னாடி இழுத்துட்டுப்போயி ஃபிளாஸ்பேக்லதான சொல்றாங்க. அதே மாதிரி இதுலயும்.. காசுக்காக கொலை பண்ற ரவிடியான அஜித் அடிபட்டுக்கிடக்க, லட்சுமி மேனன் காப்பாத்தி, பிளட் கொடுத்து,, வீட்டுக்கு கூட்டுப்போயி அப்பா அம்மாகிட்ட அறிமுகம் பண்ணி சோறு போடுறதுன்னு கூட பொறக்காட்டியும் பாசத்தை டன் கணக்குல கொட்ட, ’தல’ யும் தங்கச்சியா ஏத்துக்கிட்டு இணை பிரியாத ரத்த உறவா மாறிடுவாங்க.
3 . சிவகார்த்திகேயன் தனக்கு கொஞ்சமும் பிடிக்காத நட்டிக்கு தன்னோட உடன்பிறவா சகோதரியான ஐஸ்வர்யா ராஜேஷை மேரேஜ் பண்ணி வெச்சிட்டு படாதபாடு படுற படம்தான் ’நம்ம வீட்டுப்பிள்ளை’ அண்ணன் – தங்கை பாசத்தை வாஷிங்மிஷின்ல போடாம கல்லுல அடிச்சி துவைச்சி, அலசிப் காயப்போட்ட படம். எந்த நேரமும் ’அண்ணே… அண்ணே’ னு ஐஸ்வர்யா ராஜேஷ் உருகுறதும், ’தங்கை… தங்கை’னு சிவகார்திகேயன் தாங்கறதுன்னு படம் முழுக்க அழுகாச்சியோ அழுகாச்சி.
தங்கை திருமணத்துக்கு துட்டு சேர்க்கிறதுக்கு சித்தப்பா பெரியப்பாகிட்ட அவமானப்பட்டு நிக்கிறது, தங்கை வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு அண்ணனை அழைக்காட்டியும் சீர் செஞ்சிட்டு திங்காமப் போறதுன்னு, சிவகார்த்திகேயன் ஒவ்வொரு சீன்லயும் கண் கலங்கினபடி டயலாக் பேசணும்னு கண்டிஷன் போட்டிருப்பாங்கபோல கிளைமாக்ஸ் வரைக்கும் மூக்கு சிந்தினபடியே இருப்பாரு.
எல்லாம் யாருக்காக..? தங்கை ஐஸ்வர்யா ராஜேஷுக்காக… ஒரு பாட்டுல இது ’பாசமலர்’ படத்தோட பார்ட் டூனு சொல்ற தைரியம் படத்தோட இயக்குனர் பாண்டியராஜுக்குத்தான் வரும்.
4 . தன்னோட ஐம்பதாவது படம் அண்ணன் – தங்கை படமா இருந்தா நல்லா இருக்கும்னு ஜோதிகா ஆசைப்பட்டதால வந்த படம்தான் ’உடன்பிறப்பே’. ஜோதிகாவோட அண்ணன் சசிகுமார். ஸ்கூல் வார்தியார், பொறுப்பான குடும்பஸ்தன், காலேஜ் புரொபஷர், நேர்மையான வக்கீல் இப்டி ஸாப்டான கேரக்டருக்குன்னே செஞ்சவர் சமுத்திரக்கனி. இந்தப் படத்துல ஜோதிகா கணவரா வர்றார். சசிகுமார் – ஜோதிகா பாசப்போராட்டம் பெரும்போராட்டமா இருக்கும். தங்கச்சிக்கு வீட்டோட மாப்பிள்ளை வேணும்னு சமுத்திரக்கனிக்கு கட்டிவைக்கிறார் சசி.
குடும்பமும் ஒண்ணாதான் இருக்கு. ஆனா, சசி ஊர்ல பஞ்சாயத்து பண்றது, நியாயத்துக்குப் போறாடுறது, அடிதடின்னு இறங்கறது பிடிக்காம இருக்கிறாரு. அந்த நேரத்துல நடந்த அசம்பாவிதத்துல இனிமே மச்சான் வீட்டுல இருக்கிறது மானம்கெட்ட பொழப்புன்னும், சசிகுமார் ஸ்ஃபேஸ்ல ஜென்மத்துக்கு முழிக்கமாட்டேன்னு பிரிஞ்சுப் போயிடறாங்க. இவங்களை ஒண்ணு சேர்க்க போராடின ஜோதிகா காவேரிக்காக போராடியிருந்தாக்கூட தமிழ்நாட்டுக்கு தண்ணியே வந்திருக்கும் அந்த அளவுக்கு அண்ணனுக்கு கணவருக்கும் பாசத்தை மனு மாதிரி எழுதி குவிக்கிறார்.
5 . ’பிச்சைக்காரன்’ படத்துல அம்மா பாசத்தை போதும்.. போதும்ங்கிற அளவுக்கு உருட்டிக் உருட்டிக்கொடுத்தவர் விஜய் ஆண்டனி, இப்போ ’பிச்சைக்காரன் – 2’ படத்துல அண்ணன் – தங்கை பாசத்தை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கார். ஆட்டோ ஓட்டுன அப்பாவும் அம்மாவும் ஆக்ஸிடெண்டுல செத்துப்போக பசிக்காகவும், டாக்டருக்குப் படிக்க ஆசைப்படுற தங்கைக்காகவும் சின்ன வயசுலயே பிச்சை எடுக்கிறார் விஜய் ஆண்டனி.
சின்ன வயசுல ஒரு கும்பல் படிக்க வைக்கிறேன் கூட்டிட்டுப்போன தங்கை காணாமல்போக… எப்பவோ வரைஞ்ச பாஸ்போர்ட் சைஸ் ஓவியத்தை வெச்சிக்கிட்டு தெருத்தெருவா தங்கையைத் தேடி அலையிறாரு. பாசமா வளர்த்த தங்கையை ஒரு நாள் கண்டுப்பிடிப்போம்ற நம்பிக்கை மட்டும் இருக்கு. காரணம் தங்கை கைல சத்யா அண்ணான்னு குத்தின பச்சை, அதே மாதிரி தங்கை தன்னை அடையாளம் கண்டுப்பிடிக்க இவர் கையிலயும் தங்கை பேரை பச்சை குத்தியிருப்பார்.
நல்ல வேளை ஃபோமலி ஸாங் போட்டு தெருவுல பாடிக்கிட்டுப்போற மாதிரி பண்ணலை. அப்றம், தங்கை கிளைமாக்ஸ்ல கிடைச்சாப் போதும், அதுக்கு முன்னால கிடைச்சு எந்த புண்ணியமும் இல்லைங்கிறதால கடைசில தங்கை அவள் கணவர், குழந்தையை கண்டுப்பிடிக்கிறார் விஜய் ஆண்டனி.
- உத்தமபுத்திரன்.