பாடகர் எஸ்.பி.பி-யை இருவேறு சந்தர்ப்பங்களில் பேட்டியெடுத்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால், அந்த அனுபவத்தைச் சொல்லப்போவதில்லை. இவர் வேறொரு ஆசாமி. இளம் தலைமுறையின் பிரதிநிதி. நல்ல திறமைசாலி. இன்றைய தேதியில் GenZ தலைமுறையினரின் ஏகபோக பெரு விருப்பம் அவர். ஆனால், ஆள் கழுவுற மீனில் நழுவுற மீனாய் இருப்பார். ஊடகம் என்றில்லை. அவர் சார்ந்த சினிமாத்துறையில், அவருக்கு நெருக்கமான நண்பர்களே, 'அவரையா..? அவ்ளோ சீக்கிரம் உங்களால பார்க்க முடியாதே பாஸ்!' என்று பயமுறுத்துவார்கள். அவர்கூடவே ஒரே வீட்டில் வசித்த இன்னொரு இசை ஆளுமை என்னிடம் அவரைப் பற்றி சொன்னது இன்னும் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
"ஹலோ பிரதர்...அவர் ஒரு சித்தர். அவ்ளோ ஈஸியா கண்ணுக்குப் புலப்பட மாட்டார். நீங்க பேட்டியெடுக்கணும்னா ரொம்ப நாளா அவரை ஃபாலோ பண்ணணும். இந்த நிமிஷம் பேசுனதை அடுத்த நிமிஷம் மறந்துடுவார். அவருக்கு அப்படியொரு வினோதமான ஞாபக மறதி பிரச்னை இருக்கு. எதுக்கும் வீட்டுல இருந்து கிளம்புறப்போ எக்ஸ்ட்ரா ஒரு செட் டிரெஸ் கூட எடுத்துட்டுப் போங்க. அவர் பள்ளியெழுந்து பேட்டி கொடுக்க ஒருநாள் அவர்கூட சும்மா டிராவல் பண்ண வேண்டியிருக்கும்..!"
- இப்படி திருவாய் மலர்ந்தால் விளங்குமா? பேட்டியெடுக்கும் எண்ணத்தை அடியோடு குழிதோண்டி புதைத்துவிட்டேன். ஆனால், விதி வலியது என்று சும்மாவா சொன்னார்கள். ஒருமுறை அவரை ஒரு நண்பரின் படத்தின் பாடல் ரெக்கார்டிங்கில் பார்க்கும் சூழல் ஏற்பட்டது.
சம்பிரதாயமாக நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சிரித்து ஹலோ சொன்னவர் அதன்பிறகு 'அதுக்கு என்ன இப்போ' என்பதுபோல அதன்பிறகு நடந்து கொண்டார். என்னுடைய வாழ்த்துகளையும், நான் அவர் பாடிய ஒரு பாடலை ரிங்டோனாக வைத்திருக்கும் விஷயத்தை சொன்னபோதும் ரியாக்ட் செய்தார். சத்திய சோதனை என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
அதன்பிறகு ஒருமுறை அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்து நேரில் சந்திக்கப் போனேன். அந்த இசை பிரபலத்துக்கு சொந்தமான ஃப்ளாட்டில் அவர் என்னை சந்திக்க அப்பாய்ண்மெண்ட் கொடுத்த நேரம் எப்போது தெரியுமா? நம்ப மாட்டீர்கள்...நள்ளிரவு 1.30 மணி. 'இந்தா வந்துடுறேன். நீங்க கேட்ல வெய்ட் பண்ணுங்க!' என்று 10 மணியிலிருந்து ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் போன் பண்ணி கன்ஃபார்ம் செய்தபடி இருந்தேன். உண்மையில் இரவு 9 மணிக்குத்தான் முதலில் வரச் சொல்லியிருந்தார்.
அப்புறம் அவரே போன் பண்ணி, 'ஒரு மணி ஆகும் பிரதர். ஒரு ரெக்கார்டிங் இருக்கு' என்றார். எப்படியாவது அவரை சந்தித்தே ஆக வேண்டிய அலுவல் நெருக்கடிவேறு எனக்கு அன்றைய தினம் இருந்தது. அதனால் அந்த கொட்டும் பனியில அந்த இசைபிரபலத்தின் வீட்டின் முன் 1.30 மணிவரை காத்திருந்தேன். மணி 2.30 ஆகிவிட்டது. செக்யூரிட்டி என்னை வினோதமாக பார்க்க ஆரம்பித்தார்.
அவருக்கு எப்படி புரியும் என் நிலைமை. இன்று அவரை சந்திக்காவிட்டால் எடிட்டருக்கு பதில் சொல்லி ஆக வேண்டும். 'பரவாயில்லை... காத்திருந்து தொலைப்போம். நாளை நிம்மதியாக இருக்கலாம்!' என நினைத்துக் கொண்டேன். அதிகாலை 2.50-க்கு ஒரு ஸ்விஃப்ட் கார் வந்தது.
கண்ணை இடுக்கியபடி ரோட்டின் ஓரம் நின்றுகொண்டிருந்த நான் காரை உற்றுப் பார்த்தேன். அப்பாடா என்று இருந்தது. நம் பாடகர்தான் ஓட்டிவந்தார். என்னை செக்யூரிட்டியாக நினைத்துவிட்டார். 'கேட்டைத் திறங்க!' என்று உத்தரவிட்டார். செக்யூரிட்டி பாத்ரூம் போய்விட்டதால் நான் கேட்டைத் திறந்துவிட்டு உள்ளே நுழைந்த காரின் பின்னால் நாய்க்குட்டி போல ஓடினேன். கார் கதவைத் திறந்து மாடிப்படியில் ஏற முயன்றவர் முன் போய் நின்று, 'ஹலோ சார்...நான் தான் இவ்ளோ நேரம் உங்களுக்கு கால் பண்ணியது!' என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
"எனக்கு நீங்க சொல்றது புரியல!" என்றார்.
"உங்களைச் சந்திக்க ஈவினிங்கில் இருந்து கால் பண்ணும் நிருபர் நான் தான்!" என்றேன்.
"ஓஹோ...நான் என்ன சொன்னேன்னு மறந்துட்டேன். ஸாரி நண்பா... நீங்க எந்த மீடியானு சொன்னீங்க?" என்று கேட்டார். தூக்கி வாரிப்போட்டது எனக்கு.
"நிஜமாவே என்னை ஞாபகம் இல்லையா..? இன்னிக்கு மட்டுமே பத்துவாட்டி கால் பண்ணி பேசியிருக்கோம். 1.30-க்கு ராத்திரி சந்திக்கலாம்னு சொன்னீங்களே...!" என்றேன்.
"ஸாரி பிரதர்... மறந்துட்டேன். நாம நாளைக்கு சந்திக்கலாமே! நைட் திருவண்ணாமலை போறேன்... இப்ப பேச முடியாது!" என்றார்.
எனக்கு தலை சுற்றியது. இயலாமையில், "சார்...நிஜமாவே மறந்துட்டீங்களா...பேட்டி எடுக்க வரலை... உங்ககிட்ட ஒரு பொருளைக் கொடுத்துட்டு ஒரு போட்டோ எடுத்துட்டுப் போகணும். தெளிவா மார்னிங்கே போன்ல சொல்லியிருந்தேனே...?" என்றேன்...
"ஓ...அவரா நீங்க... ஸாரி சார்...காக்க வெச்சதுக்கு!" என்று அந்த நேரத்திலும் கைகளைப் பிடித்து மன்னிப்புக் கேட்டு வெளிச்சமான ஒரு அறைக்கு அழைத்துப்போய் போட்டோ எடுத்துக்கொண்டார். நான் கொடுத்த அந்த வஸ்துவுக்கு முத்தம் கொடுத்தபடி,
"ஸாரி சார்... ஞாபக மறதி!" என்றார்.
சம்பிரதாயங்கள் முடித்து வெளியே வந்து பைக்கை எடுத்தபோது, செக்யூரிட்டி வந்துவிட்டார்.
"என்ன சார்...ஆளைப் புடிச்சீங்களா இல்லையா..? சரியான டோப்பு பார்ட்டி சார் அந்த ஆளு...ஆனா சரஸ்வதி தாண்டவம் ஆடுவா...டோப்பு இல்லாம சோறு இறங்காது. மனுஷன் வாழ்றதே டோப்பால தான்... அவர்கிட்ட எப்பவும் வினோதமான ஒரு வாசம் வரும். எந்த ஊர்லருந்து வாங்கியாராறோ தெரியலை!" என்றவர், "எனக்கே ஒருவாட்டி கொடுத்தார்.ப்ப்பா.. தெய்வ லெவல் போதை சார் அது!"- எனக்கு பாய்ண்ட் எடுத்துக் கொடுத்தார்.
அந்த வசீகரக் குரலோன் ஏன் சாமியார் போல அலைகிறார் என்ற கேள்விக்கு அந்த அதிகாலை எனக்குப் பதில் கிடைத்தது. அதே திருப்தியில் வீட்டை நோக்கி பைக்கைக் கிளப்பினேன்..!
(சம்பவங்கள் Loading..!)