கடந்த அத்தியாயத்தில் பேட்டி எடுக்கப் போன இடத்தில் நம் முன் தர்மசங்கடத்துக்கு உள்ளான பிரபலத்தைப் பற்றி சொல்லியிருந்தேன். இந்த அத்தியாயத்திலும் அப்படியொரு வி.ஐ.பி பற்றி சொல்லவா..?
சென்னையில் அஜீத் குமார் வசிக்கும் ஏரியாவைப்போல ஈசிஆரில் கடல் பார்த்த வீட்டில் வசிக்கிறார் அந்த வி.ஐ.பி. தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு துறையில் கவன ஈர்ப்புக்கு உள்ளானவர். இப்போது சைலண்டாய் இருந்தாலும் ஒருகாலத்தில் அவரும் பிஸியாகவே இருந்தார்.
தெக்கத்திப்பக்கம் பெரிய ஊரின் முக்கியமான ஏரியா பெயரைக் கொண்ட படத்தில் கவனத்துக்குரிய ஒரு விஷயத்தை பண்ணிய நபர். நல்ல பேச்சாற்றல் கொண்ட ஆளும்கூட. தேனொழுக பேசுவார். சமயங்களில் கலாய்த்தும் விடுவார். அவரை இரண்டுமுறை பேட்டி எடுத்திருந்தாலும் முதல்முறை போனபோது நடந்த சம்பவம் இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறது.
''வாய்யா...எப்படி இருக்கே?'' என்று வாஞ்சையுடன் உபசரித்தார். நுங்கு கலந்த இளநீரை வரவழைத்துக் கொடுத்தார்.
''எப்படிய்யா இருக்கு...தெக்கத்தி ஸ்பெஷல்...ஆமா நீ ராம்நாடு தானே?'' என்று அன்பொழுக உபசரித்தார்.
பேட்டி ஆரம்பித்து போய்க்கொண்டிருந்த போதுதான் திமுதிமுவென ஏதோ சத்தம். பக்கத்து வீட்டு சுவர் மீது ஏறி நின்று வீட்டுக்குள் கேட்கும் அளவு மைக் வைத்து கத்தாத குறையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. நான்கைந்து பேர்....நடுநாயகமாக நைட்டி அணிந்த ஒரு பெண்மணி. டர்ட்டி வாசகங்கள் அவர்களிடமிருந்து சரளமாக வந்தன.
''ஏய்... போடி...போலீஸைக் கூப்பிடுவேன்!'' என நம் ஆள் எகிறத் துவங்கினார். அந்தப் பெண்மணியோ 'போடா வாடா'க்களை சரளமாக பேசிக் கொண்டு, நடுநடுவே கெட்டவார்த்தையும் கலந்து பேசியபடி இருந்தார். செந்தமிழ் கமழும் நம் வி.ஐ.பி வாயிலிருந்தும் பதிலுக்கு தமிழின் உச்சபட்ச இரண்டு மூன்று கெட்டவார்த்தைகள் வந்து விழுந்தன. சண்டை இப்போதைக்கு முடியாது போலத் தோன்றியது.
இவர் வீட்டிலிருந்த இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இவரை சமாதனப்படுத்துவதிலேயே குறியாய் இருந்தார்கள். இதனாலேயே அந்தப் பெண்மணியின் வாய்ஸ் கூடியிருந்தது. அப்புறம் அரைமணிநேரத்துக்குப் பிறகு யார்யாரோ வந்தார்கள். சமாதானப் படலம் தோல்வியில் முடிந்து, 'கொலை பண்ணிடுவேன்' என்ற சவாலுடன் தான் முடிவுக்கு வந்தது அந்த சண்டை!
ஏரியாவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தான் ஹைலைட். கொஞ்சநேரம் வாசலில் நின்று கத்திவிட்டு உள்ளே வந்து நம் முகத்தைப் பார்த்தார். ''ஒண்ணுமில்லை... சின்னதா லேண்ட் பிராப்ளம். காம்பவுண்ட் சுவரை என் இடத்தையும் ஒரு அடி வளைச்சு கட்டிருச்சு அந்த பொம்பளை. சர்வேயர் வெச்சு அளந்து பார்த்துட்டு தன்மையா வீட்டுக்குப் போயி பேசினேன். எடுத்த எடுப்புலேயே அசிங்கமா பேசிடுச்சு. நானும் பதிலுக்கு திட்டி விட்டுட்டேன். அதுக்குப்பிறகு வேணும்னே குப்பைகளை என் காம்பவுண்டுக்குள்ல கொட்டுறது, காயப்போட்ட துணிமணி மேல அழுக்குத் தண்ணிய ஊத்திவிடுறதுனு ரொம்ப ரவுசு பண்ணுது.
ஆளு வெச்சு பேசுனாலும் மண்டைக் கர்வமா பேசுது. மகன் லண்டன்ல பெரிய ஆளாம். இருந்துட்டுப் போகட்டும். நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வாங்கிய வீடு இது. அநியாயமா இப்படி டார்ச்சர் பண்ணி என் நிம்மதியைக் கெடுத்துருச்சு அந்த பொம்பளை!'' என்று அழாத குறையாக பேசினார்.
மனைவி மக்கள் இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல டிவி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பேட்டியை பாதியில் முடித்துவிட்டு கிளம்பினேன். அவர் முகம் ஏகத்துக்கும் டல்லாகிக் கிடந்தது.
அந்த வாரம் சின்ன அளவில் பேட்டி வந்தது. போன் பண்ணி,
''தம்பி.... இன்னொருவாட்டி வீட்டுக்கு வா... உன்னை சரியா கவனிக்காம அனுப்பிடேன்!'' என்றார் வாஞ்சையுடன்.
அதன்பிறகு நானும் மறந்து விட்டேன். அவரும் மறந்து விட்டார். அந்த சண்டைப் படலம் அதோடு முடிந்து நம் ஆள் நிம்மதியாக இருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், அடுத்த சில மாதங்களில் அந்தப் பெண்மணி கொடுத்த புகாரின்பேரில் நம் ஆளை போலீஸ் வீடுபுகுந்து குண்டுக்கட்டாய் தூக்கிப்போய் கைது செய்தது.
பாவம் அவர் மீது பாலியல் புகாரைச் சொல்லியிருந்தார் அந்தப் பெண். நம் ஆள் மீது நிர்வாணமாக நின்று சைகை காட்டினார் என்பது புகார். கேரளாவைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு சப்போர்ட் ஒருவர் என அலுவலகத்திலும் கிசுகிசுத்தார்கள். அப்போது கமிஷனராக இருந்தவரும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் தன் பவரை பயன்படுத்தி நம் ஆளைக் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டது என்று மீடியாக்களில் செய்தி வந்தது. எப்படியோ இது பொய்யான அபாண்டமான குற்றச்சாட்டு என்பதை நிரூபித்து வெளியில் வந்தார்.
'70 வயசு கிழவிகிட்ட நான் எப்படிங்க தப்பா நடந்துக்க முடியும்?'' என்று ஊடகங்களிடம் அவர் பேட்டி கொடுத்ததை செய்திச் சேனல் ஒன்றில் காண நேரிட்டது. அதன்பிறகு தன் துறையில் இன்னொரு பிரிவில் ஆழம் தெரியாமல் காலைவிட்டு சூடு போட்டுக் கொண்டார். இப்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் அதே வீட்டில்தான் வசிக்கிறார். ஒரு நாள் ஒரு விழாவில் அவரைச் சந்தித்தேன்.
''என்ன தம்பி...எப்படி இருக்கே?'' என்று நலம் விசாரித்துச் சென்றார். ஆளும் கொஞ்சம் தளர்ந்து போயிருந்தார். பி.ஆர்.ஓ ஒருவரிடம் இவரைப் பற்றிக் கேட்டேன். ''ஜெயிலுக்கு போயிட்டு வந்தபிறகு ஆள் கொஞ்சம் அப்செட். சினிமா மேல ஈடுபாடு இல்லாம போயிடுச்சு. அஜீத்குமார் மாதிரி கடல் பார்த்து வீடு கட்டுனாரு... ஆனா ராசி இல்லா வீடு போல...நிறைய வில்லங்கம். நிறைய செலவு பண்ணி ஓய்ஞ்சிட்டார்.. ஃபேமிலிக்குள்ளயும் நிறைய பிரச்னை. பிஸியான ஆளா ஆவார்னு பார்த்தா இப்படி ஆகிட்டாரு!'' என உச் கொட்டி வருத்தப்பட்டார்.
பக்கத்து வீட்டுக்காரர் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான் போல. அந்த மனிதருக்காக இதை டைப் பண்ணி முடித்துவிட்டு பத்து செகண்ட் பிரார்த்தனை செய்யலாம் என்றிருக்கிறேன்.
(சம்பவங்கள் Loading..!)