கங்கை அமரன்
கங்கை அமரன்கங்கை அமரன்

நித்தம் நித்தம் நெல்லு சோறு - நினைவே ஒரு சங்கீதம் | Epi 17

கங்கை அமரன் அவர்கள், “ஒரு ரூபாய்க்கு மாடர்ன் பிரெட்டை வாங்கி, நாட்டு சர்க்கரை தொட்டுகிட்டு, நான், ராஜா அண்ணன், பாஸ்கர் அண்ணன், பாரதிராஜா நாலு பேரும் பங்கு போட்டு சாப்பிடுவோம்” என்று கூறியுள்ளார்.

நித்தம் நித்தம் நெல்லு சோறு: லொகேஷனால் உருவானப் பாட்டு

1980கள். அப்போது நாங்கள் அரியலூரில் இருந்தோம். எனக்கு எத்தனை வயதென்று நினைவில்லை. ஆனால் அப்போது இன்னும் சைட்டடிக்க ஆரம்பிக்கவில்லை என்பதால் ஆறாம் வகுப்பிற்குள் இருக்கலாம்.

ஒரு முறை எதற்காகவோ தஞ்சாவூர் சென்ற அம்மா நானும், என் தம்பி தினகரனும் மறு நாள் 3 வேளையும் சாப்பிடுவதற்காக புளிசோறு கட்டி வைத்துவிட்டுச் சென்றிருந்தார். புளிசோறு என்றால் எனக்கு உயிர். அம்மா எங்ளுக்கு புளிசோறு செய்வதற்காக புளிக் காய்ச்சியபோது வாசனைக் கிளம்பிய வனாடி முதல், அந்த புளிசோறை தின்பதற்காக வறியோடு காத்துக்கொண்டிருந்தேன்.

மறுநாள் காலையில் நானும், என் தம்பியும் ஆசையோடு புளிசோறு சாப்பிட்டுவிட்டு, இன்னும் இரண்டு வேளை புளிசோறு சாப்பிடப்போகும் உற்சாகத்துடன் இருந்தோம். அப்போது எனது புளிசோறு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக தஞ்சாவூரிலிருந்து அந்த தந்தி வந்தது. தஞ்சாவூரிலிருக்கும் எஙகள் உறவினர் பாலகிருஷ்ணன், “மதர் இன்லா எக்ஸ்பயர்டு” என்று தந்தி கொடுத்திருந்தார்.

கங்கை அமரன்
'ஈழப்போராளிகளின் எழுச்சிப் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 4

தந்தியைப் படித்தவுடன் என் அப்பாவுக்கு ஏகப்பட்ட குழப்பம். எனது அப்பாவின் மாமியார் இறந்துவிட்டார் என்றால், அவர் சென்னையில் என் மாமாவோடு இருக்கிறார். அதனால் அவர் இறந்திருக்க வாய்ப்பு குறைவு. தஞ்சையில் எனது பாட்டியின் அக்கா இருக்கிறார். அவரும் என் அப்பாவிற்கு மாமியார் முறைதான் என்பதால், அந்த பெரிய பாட்டிதான் இறந்திருக்கவேண்டும். அல்லது எனது பாட்டி எதற்கோ தஞ்சை வந்த சமயத்தில் இறந்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்து நாங்கள் தஞ்சை புறப்பட்டபோது எனக்கு இரண்டு பிரச்சனைகள் 

பிரச்னை 1: சின்ன பாட்டி என்றால் என் அம்மாவின் சொந்த அம்மா. நான்தான் பெரிய பேரன் என்பதால் என் மீது மிகவும் பாசமானவர். எனக்கு லிட்டர் லிட்டராக குணங்குடிதாசன் சர்பத்தும், ஹோட்டல் ஹோட்டலாக எண்ணற்ற ரவாதோசைகளும் வாங்கித் தந்தவர். எனக்காக சென்னையிலும், தஞ்சாவூரிலுமாக என்னைப் பல தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று, அப்படத்தின் தயாரிப்பாளர்களே மறந்து போயிருக்கும் ‘நன்றிக் கரங்கள்’, ‘அன்னப்பறவை’, ‘வா கண்ணா வா’ என்பது போன்ற ஊர் பேர் கேள்விப்படாத படங்களை எல்லாம் காண்பித்தவர். அந்த நன்றி உணர்வு எனக்கு எக்கச்சக்கமாக இருந்ததால், நியாயமாக கதறி கதறி அழுதிருக்கவேண்டும். ஆனால் அவர்தான் உறுதியாக இறந்தார் என்று தெரியாததால் சுத்தமாக அழுகையே வரவில்லை.

ஒரு வேளை பெரிய பாட்டி என்றால், அவர் எப்போதாவது தஞ்சாவூர் ஞானம் தியேட்டரில் முட்டை போண்டாதான் வாங்கித் தந்திருப்பதால் லைட்டாக அழுதால் போதும். ஆனால் இறந்தவர் அவர்தான் என்றும் உறுதியாக தெரியாததால் அந்த லைட் அழுகையும் வரவில்லை.  சரி… தஞ்சாவூர் சென்று உடலைப் பார்த்துவிட்டு, ஆளுக்குத் தகுந்தாற் போல் அழுதுகொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்

பிரச்னை 2: இன்னும் இரண்டு வேளைக்கான புளிசோறு மிச்சம் இருக்கிறது. அவ்வளவு சுவையான புளிசோறை என்ன செய்வது? என்று  புரியவில்லை. அப்படியே போட்டுவிட்டு வரவும் மனசில்லை. எனவே என் அப்பாவிடம், “புளிசோறை என்ன செய்யலாம்?” என்று அந்த நூற்றாண்டின் முக்கியமான தத்துவக் கேள்வியைக் கேட்க… அவருக்கும் தத்துவக் குழப்பம் வந்துவிட்டது. புளிசோறையும், எங்களையும் மாறி மாறி நெடுநேரம் பார்த்தார்.  என்ன நினைத்தாரோ? “புளிசோறையும் எடுத்துட்டு கிளம்புங்க” என்றார். நான் ஒரு மாதிரியான சந்தோஷ துக்கத்துடன்,  புளிசோறு தூக்கு வாளியை தூக்கிக்கொண்டு கிளம்பினேன்.

கங்கை அமரன்
'டி.எம்.எஸ். பாட மறுத்த கண்ணதாசனின் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 8

பஸ்சில் புளிசோறு வாசனை தூக்க… நாக்கில் எச்சில் ஊறியது.  அடுத்து எப்போது அந்த  புளிசோறை எடுத்து சாப்பிடுவேன் என்று தெரியவில்லை. மரண வீட்டுக்குச் சென்றால் கட்டாயம் உடலை எடுக்கும் வரையில் சாப்பிடமுடியாது. அப்படியே அதற்கு பிறகு சாப்பிட்டாலும், ஏராளமான பேர் பங்குக்கு வர வாய்ப்பிருந்ததால் என் பங்குக்கு புளிசோறு குறைவாகத்தான் கிடைக்கும். இந்தக் குழப்பத்துடன் நான் என் தம்பியைப் பார்க்க, அவனும் அதே குழப்பத்துடன் தூக்கு வாளியையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஞ்சை, வெள்ளை பிள்ளையார் கோயில் ஸ்டாப்பில் இறங்கி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.  மனதில் ஒரு பக்கம் சின்ன பாட்டியோ அல்லது பெரிய பாட்டியோ இறந்த துக்கம். இன்னொரு பக்கம்… பாடியை எடுக்க எப்படியும் சாயந்திரமாகிவிடும். அதற்குப் பிறகுதானே தூக்கு வாளியை ஓப்பன் பண்ணமுடியும்…. என்ற துக்கத்துடன் எங்கள் வீடிருக்கும் பிள்ளையார் கோயில் வார்காரத் தெரு முனையை அடைந்தோம்.

தெருவிற்குள் நுழைந்தவுடன் பார்த்தால், தெருவில் ஒரு பந்தல் இல்லை. அழுகைச் சத்தம் இல்லை. நாங்களும், அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே சந்தில் நுழைய…. எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தவுடன் அதிர்ந்தோம். அங்கு நாங்கள் இறந்ததாக கருதிய பெரிய பாட்டி காலை நீட்டி அமர்ந்துகொண்டு, வெத்தலைப் பாக்கு போட்டபடி என் அம்மாவிடம் சிரித்து பேசியபடி அமர்ந்திருந்தார்.

என் அப்பா என்னிடம், “டேய்… இப்பதான்டா புரியுது. இங்க எல்லாம் நார்மலா இருக்காங்க. செத்தது… தந்தி அனுப்பின பாலகிருஷ்ணனோட மாமியாரா இருக்கும்” என்று கூற…. எனது பெரிய கவலை நீங்கியது. புளிசோறு சாப்பிடுவதில் இனி எந்த பிரச்னையும் இருக்காது.

கங்கை அமரன்
'இது ஒரு பொன்மாலைப் பொழுது' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 11

எங்களை எதிர்பாராமல் திடீரென்று பார்த்தவுடன் என் பெரியபாட்டி, அம்மா, புருஷோத் மாமா…. என்று அனைவரும் ஒரு குழப்ப சந்தோஷ சந்தேகத்துடன் எங்களை வரவேற்றார்கள். நான் மடியில் தூக்கு வாளியை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தேன்.

என் அப்பா விஷயத்தைக் கூற…. என் மாமா, “செத்தது பாலகிருஷ்ணன் மாமியார்தான்”  என்று உறுதிபடுத்தினார். உடனே என் அப்பா தம்மடிப்பதற்காக வெளியே சென்றுவிட்டார். என் மாமா, “என்னாடா… காட்டுப் பயலே….” என்று முதுகில் செல்லமாக ஓங்கி ஒரு அடி அடித்தவர், அப்போதுதான் என் மடியில் இருந்த தூக்கு வாளியைக் கவனித்துவிட்டு, “மடில என்னடா தூக்கு வாளி?” என்றார்.

நான் சிரிப்புடன், “புளிசோறு. அம்மா கட்டி வச்சிருந்தாங்க. எடுத்துட்டு வந்துட்டோம்” என்றவுடன் என் மாமா எங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொன்னார்:

“புளிசோறா? ஏன்டா டேய்… பாட்டி செத்துப்போய்ட்டாங்கன்னு வந்துருக்கீங்க. புளி சோற தூக்கிகிட்டாடா எழவு வீட்டுக்கு வருவீங்க.. எனக்குத் தெரிஞ்சு இந்த தஞ்சாவூர் ஜில்லாவிலேயே எழவு வீட்டுக்கு புளிசோறு கட்டிகிட்டு வந்த ஒரே ஃபேமிலி நீங்கதான்டா….” என்று கூற… அனைவரும் சிரித்தனர்.

“சரி…. ஓப்பன் பண்ணுங்கடா…” என்று மாமா கூற… சந்தோஷத்துடன் பிரித்தோம். நாங்கள் இறந்துவிட்டதாக கருதிய எங்கள் பெரிய பாட்டி, முதல் ஆளாக ஒரு கை புளிசோறை அள்ளி தன் வாயில் போட்டுக்கொண்டார்.

னிதர்களின் உணவு மோகம் என்பது காலம் காலமாக தொடரும் விஷயம். காமத்தைக் கூட ஒரு கட்டத்தில் துறந்துவிடும் முதியவர்கள், உணவு மீதான மோகத்தை துறப்பதில் மிகுந்த சிரமப்பட்டு, எதையாவாது ஆசையில் தின்றுவிட்டு டாக்டருக்கு வேலை வைப்பார்கள்.

கங்கை அமரன்
'கண் பேசும் வார்த்தைகள் புரியவில்லை' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 12

தமிழ் திரைப்படங்களில் உணவு குறித்தப் பாடல்கள் எத்தனை உள்ளன என்று பார்த்தால், ‘கல்யாண சமையல் சாதம்’, ‘நித்தம் நித்தம் நெல்லு சோறு’. ‘என்ன சமையலோ?” என்று மிகச் சிலப் பாடல்களே பிரபலமாக உள்ளன. இவற்றில் இன்று வரையிலும் மிகவும் பிரபலமான பாடல் என்றால், ‘கல்யாண சமையல் சாதம்’தான். இது 1957-ல் தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு வெளிவந்த ‘மாயா பஜார்’ படத்தில் இடம் பெற்ற பாடல் ஆகும்.

இது ‘மாயா பஜார்’ படத்தில், பீமனின் மகனான கடோத்கஜன் வேடத்தில் நடித்த ரங்காராவ் பாடும் பாடல் ஆகும். அப்போதைய பிரபலமான இசையமைப்பாளர் கண்டசாலா அவர்கள் இசையில், தஞ்சை ராமையாதாஸ் எழுத, திருச்சி லோகநாதன் இப்பாடலைப் பாடியிருந்தார். ஆனால் இந்தப் பாட்டு இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகரான சார்லஸ் பென்ரோஸ் அவர்கள் பாடி 1922-ல் வெளிவந்த மிகவும் புகழ்பெற்ற பாடலான ‘The Laughing Policeman’ என்ற பாட்டை அப்பட்டமாகத் தழுவி உருவாக்கப்பட்ட பாடலாகும்.

மேலும் ‘கல்யாண சமையல் சாதம்’ பாடல் முதலில் தெலுங்கில் உருவாக்கப்பட்டதால், எனது பார்வையில் தமிழில் மிகச் சிறந்த உணவு சார்ந்த பாடல் என்றால் ‘முள்ளும் மலரும்’ படத்தில் இடம்பெற்ற ‘நித்தம் நித்தம் நெல்லு சோறு’ பாடல்தான். ஆனால் ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கான திரைக்கதை பேசப்பட்டபோது இப்பாடலுக்கான சூழ்நிலையே இல்லை. பிறகு எப்படி இப்பாடல் உருவானது?

‘முள்ளும் மலரும்’ படத்தை எடுப்பது என்று முடிவானவுடன், இயக்குனர் மகேந்திரன் வித்தியாசமான லொகேஷன்களைத் தேடி அப்படத்தின் தயாரிப்பாளர் வேணு செட்டியாருடன் ஏராளமான இடங்களுக்குச் சென்றார். மகேந்திரனுக்கு ஒரு பழக்கம் உண்டு. அவர் லொகேஷனைத் தேடிச் செல்லும்போது அங்கு அவர் கண்ணில் படும் காட்சிகளை ஒட்டி, புதிதாக காட்சிகளை யோசித்து அவற்றை அந்தப் படத்தில் இணைத்துக்கொள்வார். உதாரணத்திற்கு மகேந்திரன் ஒரு முறை பாண்டிச்சேரியைக் கடந்து செல்லும்போது, இரவு நேரத்தில் அங்கு உறியடி உற்சவம் நடப்பதைப் பார்த்தார். அது மகேந்திரனுக்கு மிகவும் பிடித்துப்போக… ‘முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினி உறியபடிப்பது போல் காட்சி அமைத்தார்.

கங்கை அமரன்
'காதல் பிசாசே.. காதல் பிசாசே..' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 14

கர்நாடகத்தில் கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தும் மகேந்திரன் திருப்தி அடையாமல், பெங்களுரில் வைத்து தயாரிப்பாளரிடம், “சிருங்கேரி போகவேண்டும்’ என்று கூறினார். உடனே கடுப்பான வேணு செட்டியார், “லொக்கேஷன் அது இதுன்னு என்னை ஏம்ப்பா இந்த பாடுபடுத்துற?இவ்ளோ செலவு எனக்கு கட்டுப்படியாவாதுப்பா. என்கிட்ட பணம் இல்ல. எனக்கு இந்தப் படமே வேண்டாம். வா மெட்ராஸ் போலாம்” என்று கூறிவிடடார். அப்போது அருகிலிருந்த மகேந்திரனின் நெருங்கிய நண்பரான பெங்களுர் பழனியப்பன் என்பவர் வேணு செட்டியாரின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “மகேந்திரன் முதமுதல்ல படம் டைரக்ட் பண்றாரு. அவரு விருப்பப்படி படம் பண்ணட்டும். நீங்க சிருங்கேரி போயிட்டு வாங்க. அதுக்கு ஆவுற செலவ நான் ஏத்துக்குறேன்…” என்றதால்தான் அவர்கள் சிருங்கேரி சென்றார்கள்.

சிருங்கேரி கோயில் அருகில் ஓடும் ஆற்றில் ஏராளமான மீன்கள் ஓடும். நல்ல பெரிய மீன்கள். மகேந்திரன் பொரியை அள்ளிப் போட்டால் பொரியைத் தின்பதற்காக பெரிய பெரிய மீன்கள் படையெடுத்து வரும். அந்தக் காட்சியைக் கண்டபோதுதான் ரஜினியின் ஜோடியாக வரும் படாபட் ஜெயலட்சுமி ‘மீன் பைத்தியம்’ என்று தோன்றி, பின்னர் அவர் சாப்பாட்டு பிரியையாக இருக்கட்டும் என்று அவருடைய கேரக்டர் தீர்மானிக்கப்பட்டது. அவருடைய கேரக்டரை ஒட்டியே ‘நித்தம் நித்தம் நெல்லு சோறு’ பாடல் உருவாக்கப்பட்டது.

இப்பாடலை எழுதிய கங்கை அமரன் அவர்கள், “சென்னையில் வாய்ப்புத் தேடி அலைந்தபோது நாங்கள் சாப்பாட்டுக்காக ரொம்பக் கஷ்டப்பட்டோம். ஒரு ரூபாய்க்கு மாடர்ன் பிரெட்டை வாங்கி, பத்து பைசாவுக்கு நாட்டு சர்க்கரை வாங்கி தொட்டுகிட்டு, நான், ராஜா அண்ணன், பாஸ்கர் அண்ணன், பாரதிராஜா நாலு பேரும் பங்கு போட்டு சாப்பிடுவோம்” என்று கூறியுள்ளார். பின்னர் தினம் தினம் நெல்லு சோறும், விருந்தும் சாப்பிடும் அளவிற்கு வளர்ந்ததை நினைவுகூறுவது போல் கங்கை அமரன், ‘நித்தம் நித்தம் நெல்லு சோறு…’ பாடலை எழுதினார்.

தமிழில் மிகவும் குறைவாகவே உள்ள உணவுப் பாடல்களில் அதன் எளிமையான இசைக்காகவும், சராசரி மக்கள் பயன்படுத்தும் எளிமையான வார்த்தைகளுக்காகவும் இன்றும் இப்பாடல் நினைவு கூறப்படுகிறது.

நித்தம் நித்தம் நெல்லு சோறு

நெய் மணக்கும் கத்திரிக்கா 


நித்தம் நித்தம் நெல்லு சோறு

நெய் மணக்கும் கத்திரிக்கா 


நேத்து வெச்ச மீன் கொழம்பு

என்ன இழுக்குதையா 


நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு

வந்து மயக்குதையா 

பச்சரிசி சோறு உப்பு கருவாடு

சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு 
குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா 

பாவக்கா கூட்டு பருப்போட சேத்து பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு 
சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு 
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா 
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமையா 
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா 

பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு
பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு 
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும் 
அதுக்கு என ஒலகத்துல இல்லவே இல்ல 
அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல 
இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு 
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க 

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா

கங்கை அமரன்
'நதியே நதியே காதல் நதியே' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 16

Related Stories

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com