'எதுவும் மனசுல வெச்சுக்காதீங்க - மன்னிப்பு கேட்ட முன்னாள் ஹீரோ' - நான் நிருபன் | Epi 9

''எதுவும் மனசுல வெச்சுக்காதீங்க! நிறைய கசப்பான அனுபவங்கள். அதான்'' என்றார். ''இல்லை சார். Feeling is mutual. நீங்க ரொம்ப உண்மையா இருக்கீங்க சார். உங்கள் அன்புக்கு நன்றி!'' என்று சொல்லி விடைபெற்றேன்.
நான் நிருபன்
நான் நிருபன் டைம்பாஸ்
Published on

சமீபத்தில் வந்து ஹிட்டடித்த மெகா படத்தில் நடித்த நடிகருடன் எனக்கு ஏற்பட்ட சிறு அனுபவத்தை இந்தவாரம் பகிர்ந்து கொள்கிறேன். கொஞ்சம் சுயபுராணமாய் இருந்தாலும் இதுபோன்ற அனுபவங்கள்தான் இந்த வேலையில் கிடைக்கும் மிகப்பெரிய சந்தோஷமாய் நான் நினைக்கிறேன். 

சில வருடங்களுக்கு முன் அந்த நடிகர் கம்-பேக் கொடுத்த படம் அது. இவ்வளவுக்கும் அந்தப் படத்தில் அவர் ஹீரோ கிடையாது. ஆனால், அவர் முக்கியமான பாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருந்தார். யதார்த்தமான நடிகர் என்று பெயர் எடுத்திருந்தார். அதனால் 'எங்கே சார் இந்தப் பக்கம்?' டைப் சிறிய பேட்டி அவரை எடுக்கத் தயாரானேன். 

இன்றைய நாளில் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி விடுவார்கள். ஆனால், அப்போதெல்லாம் மேனேஜர் அல்லது படத்தின் பி.ஆர்.ஓ-வைப் பிடித்து சம்பந்தப்பட்ட நபர் நம்பர் வாங்கி, நேரில் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கி பேட்டி எடுப்பது வழக்கம். அப்படி அவர் நம்பரில் தொடர்பு கொண்டபோது, 'ஃப்ரீயாத்தான் இருக்கேன்...வீட்டுக்கு வாங்களேன்..!' என்று நேரில் அழைத்தார்.

சரி என்று போட்டோகிராஃபர் சகிதம் அவரின் வீட்டுக்குச் சென்றேன். மலையாள நெடி அடிக்கும் நல்ல விஸ்தாரமான வீடு தான். கைகூப்பி வரவேற்றவர், எங்கோ செல்லும் அவசரத்தில் இருப்பவரைப்போல, ''சார்... கேள்விகளை கடகடனு கேட்டுடுங்க. எனக்கு அர்ஜெண்ட் ஒர்க் இருக்கு!'' என்றார்.

எனக்கு சற்று வருத்தமாக இருந்தது. நிறைய நாஸ்டால்ஜியா விஷயங்கள் பேசுவார் என்று ஆர்வத்தோடு போயிருந்த எனக்கு ஏமாற்றம். என்னை சேரில் உட்கார வைத்தவர், ''சீக்கிரம் சார்..!'' என்றார். 

நானும் கேள்விகளை மளமளவென கேட்டு வைத்தேன். அவர் பூர்வீகம், பெரிய இயக்குநரின் படத்தில் ஹீரோவாக நடித்த அனுபவம், பெண் ரசிகைகள், குடும்பம், சொந்தத்தில் சினிமாவில் இருக்கும் இன்னொரு வி.ஐ.பி...என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன். எல்லாவற்றுக்கும் அளந்து வைத்ததுபோல் அளவாய் பேசினார். எனக்கு 'சுருக்'கென்றது. 

நான் நிருபன்
'ஜெயலலிதா பெயரைக் கேட்டு நடுங்கிய காமெடி நடிகர்' | நான் நிருபன் | Epi 8

இதுக்கு ஏன் இவ்வளவுதூரம் வரச் சொன்னார் என்று வருத்தம் மேலிட்டது. பேட்டியை முடித்தவுடன், நான் கிளம்பும் முன்னே அவர் ஒரு கவரில் எனக்கும் போட்டோகிராஃபருக்கும் பணம் வைத்துக் கொடுத்தார். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவமானத்தோடு கவரை வாங்க மறுத்தோம். 

''புடிங்க சார்...சின்ன அன்பளிப்பு. உங்க பாக்கெட் மணியா வெச்சுக்கங்க!'' என்றார். இன்னும் அந்த வார்த்தைகளால் அவமானம் பிடுங்கித் தின்றது. கோபமும் எனக்குள் எட்டிப்பார்த்தது. 

''சார்...நான் நல்ல சம்பளத்தில் இருக்கேன். மீடியா வேலைக்கு லவ் பண்ணி வந்தேன். இல்லைனா படிச்ச படிப்புக்கு இன்னும்கூட கூடுதல் சம்பளம் கிடைக்குற வேலைக்குப் போயிருப்பேன். ப்ளீஸ்!'' என்றேன்.

குழப்பமாய் பார்த்தவர், வழியனுப்ப வாசல் வரை வந்தார். நானும் போட்டோகிராஃபரும் பைக்கை கிக் செய்து கிளம்ப எத்தனித்த போது என்ன நினைத்தாரோ, ''சார் ஒரு நிமிஷம்.... உள்ளே வாங்களேன்!'' என்று எங்களை நிறுத்தி, மீண்டும் வீட்டுக்குள் அழைத்தார். குழப்பத்தோடு அவர் பின்னால் நாய்க்குட்டியைப்போல நானும் போட்டோகிராஃபரும் போனோம்.

நான் நிருபன்
கோடம்பாக்க வள்ளலிடமே ஆட்டையப் போட்ட அல்லக்கை! - நான் நிருபன் | Epi 7

''சார் தப்பா நினைக்காதீங்க... பொதுவா இத்தனை வருட சினிமா வாழ்க்கைல உங்க பத்திரிகையில நான் பேட்டி கொடுத்ததில்லை. நிறைய மீடியாக்கள்ல இருந்து வருவாங்க... என்னன்னமோ பேசுவாங்க... கிளம்புறப்போ பணம் கொடுப்பேன்... சந்தோஷமா வாங்கிக்குவாங்க. ஆனா ஃபர்ஸ்ட் டைம் வேணாம்னு போறீங்க. எனக்கு ஆச்சர்யமா இருக்கு. உங்க பத்திரிகையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். உண்மையில் உங்களை நான் சரியா ரிசீவ் பண்ணலை. வாங்க இப்ப என்னோட குடும்பத்தை அறிமுகப்படுத்துறேன்!'' என்றவர், விறுவிறுவென வீட்டின் ஹால்வரை அழைத்துச் சென்றார். 

வீட்டின் உள்புறம் செம ராயலாக இருந்தது. முன்பு எங்களை உட்கார வைத்திருந்த இடம் கிட்டத்தட்ட வீட்டின் வெளியே உள்ள ஆபிஸ் அறை என்பது புரிந்தது. மனைவி மக்களை அன்போடு அறிமுகப்படுத்தி வைத்தவர், வீட்டில் செய்த சிற்றுண்டியை அவர் கைகளால் பரிமாறி சாப்பிட வைத்தார். பேட்டிக்கு முழுமையாக ஒத்துழைத்தார்.

பேட்டியை முடித்துக் கொண்டு கிளம்பும் போதும், ''எதுவும் மனசுல வெச்சுக்காதீங்க பிரதர்! முன்னாடி நிறைய கசப்பான அனுபவங்கள்...அதான்'' என்றார். ''இல்லை சார்... Feeling is mutual. நீங்க ரொம்ப உண்மையா இருக்கீங்க சார்...உங்கள் அன்புக்கு நன்றி!'' என்று சொல்லி விடைபெற்றேன். 

நான் நிருபன்
'ரெண்டு பேருக்கும் பிடிச்சா எதுவும் தப்பில்ல' - நான் நிருபன் தொடர்-3

சமீபத்தில் ஒரு ஃபங்ஷனில் அவரைப் பார்த்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட போது, ஞாபகம் வந்து, அழுத்தமாய் கைகுலுக்கினார். ரொம்ப நேரம் பேசிவிட்டு, ''வீட்டுக்கு அவசியம் வாங்க சார்!'' என்று விடைபெற்றார்.

( சம்பவங்கள் Loading..!) 

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com